ஜெயலலிதா நின்றாலும் நிற்க முடியாமல்போனாலும் ஸ்ரீரங்கம், இப்போது தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி. ஆன்மிக நகரமான அதை அரசியல் நகரமாக மாற்றிவிட்டது பெங்களூரு வழக்கின் தீர்ப்பு!
வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழக்கில் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். இதன் மூலமாக எம்.எல்.ஏ பதவியையும் அதனால் அடைந்த முதலமைச்சர் பதவியையும் ஜெயலலிதா பறிகொடுத்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்பு விசாரணை நடந்துவருகிறது. ஜெயலலிதா இப்படி பதவி இழந்தது தெரியாமல் மறைக்க பகீரப் பிரயத்தனங்களை ஆளும் கட்சியும் ஆட்சியாளர்களும் செய்தாலும், தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்க முடியாது அல்லவா? இதோ ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கு, பிப்ரவரி 13-ம் தேதியைக் குறித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தொகுதிக்கு ஜெயலலிதாவின் வேட்பாளராக எஸ்.வளர்மதி நிறுத்தப்பட்டுள்ளார்!
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார். அன்று போயஸ் கார்டன் வீட்டுக்குள் சென்றவர்தான், இதுவரை அவர் வெளியில் வரவில்லை. அவரது புகைப்படம்கூட ஒரே ஒரு முறை மட்டுமே வெளிவந்தது. ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு வாழ்த்து சொல்லும் படம் இரண்டாவது. 'நீங்க நிச்சயமாக ஜெயிப்பீங்க’ என வாழ்த்தி வளர்மதியை வழியனுப்பினார் ஜெயலலிதா. என்னதான் உற்சாகம் சொல்லி அனுப்பினாலும், ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, அவரது மனத் துன்பத்தை வெளிப்படுத்திவிட்டது.
ஜனவரி 17-ம் தேதி, எம்.ஜி.ஆர் பிறந்த நாள். அன்றைய தினம் தலைமைக் கழகத்துக்கு வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குவார் ஜெயலலிதா. இந்த முறை, அவர் வரவில்லை. அது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'சோதனைகளும் துன்பங்களும் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது. ஆனால், இந்தச் சோதனைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதே சிறப்புக்குரியது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்வு சொல்கிற பாடமும் இதுதான்’ என, தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது அவர் பிரசாரம் செய்யவராமல், ஒரு தேர்தல் நடக்கப்போகிறது. இவர் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்றோ, வீட்டைவிட்டு வெளியில் வரக் கூடாது என்றோ, எந்தக் கட்டுப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. ஆனால், தனக்குத்தானே அந்தக் கட்டுப்பாட்டை ஜெயலலிதா விதித்துக்கொண்டார். இதேபோல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியில் வந்திருந்த ஓம்பிரகாஷ் சௌதாலா, தேர்தல் பிரசாரம் செய்ததால் அவரது ஜாமீன் மனுவை ரத்துசெய்தது உச்ச நீதிமன்றம். அதுபோன்ற சூழ்நிலை தனக்கும் வந்துவிடக் கூடாது என்பதே ஜெயலலிதாவின் பயம். டெல்லியில் உட்கார்ந்து சுப்ரமணியன் சுவாமி போன்றோர் கண்காணிப்பதும் தனிக் கவலை!
ஆனால், ஜெயலலிதா பிரசாரத்துக்கு வர முடியாமல் போவதால் அ.தி.மு.க-வுக்கு எந்தப் பின்னடைவும் இப்போதைக்கு ஸ்ரீரங்கத்தில் தெரியவில்லை. மற்ற தொகுதிகளை எப்படிக் கவனித்தார்களோ தெரியாது. ஸ்ரீரங்கத்தில் ஏராளமான திட்டங்களைக் குவித்தார்கள். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டன. எப்போதும் எங்கேயோ ஏதோ ஓர் அரசாங்கப் பணி நடந்துகொண்டே இருந்தது. எப்போதும் அமைச்சர்களில் யாராவது ஒருவர் அங்கு மையம்கொண்டிருந்தார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சென்று, நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை ஜெயலலிதாவும் திறந்துவைத்து வந்தார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருபவர்களுக்கான ஏற்பாடுகள் 'திவ்யமாக’ச் செய்யப்பட்டு பக்தர்களின் மனம்குளிர வைக்கப்பட்டன. போதாதற்கு 50 பேர் கொண்ட அதிகாரப் படையை ஸ்ரீரங்கத்துக்குள் இறக்கியிருக்கிறார் ஜெயலலிதா. தொகுதி முழுக்க இனி இவர்கள் மட்டுமே வலம்வரப்போகிறார்கள். இவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதே காவல் துறையின் வேலையாக இருக்கும். 'எதிரில் நிற்கும் எவருக்கும் டெபாசிட் போக வேண்டும்’ எனக் கட்டளையிட்டுள்ளார் ஜெயலலிதா. 'அதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை’ என இப்போதே சொல்கின்றனர் அமைச்சர்கள்.
அவர்களது துணிச்சலுக்குக் காரணம், ஆளும் கட்சியின் சாதனைகள் மட்டும் அல்ல; எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையும்தான். முன்பெல்லாம் கருணாநிதி, தன் எதிரியை வீழ்த்த எதிர்க்கட்சிகளைக் கூட்டி கூட்டணியை உருவாக்குவார். அதிலேயே அவரது கவனம் இருக்கும். ஆனால், இன்று சொந்தக் கட்சியில் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே அவரது நேரம் கழிந்துவிட்டதால், மற்ற விஷயங்களில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் பிரச்னை, அன்பழகன் மீது ஸ்டாலின் கோபம், அழகிரி இதோ வருகிறார்... அதோ வருகிறார், கனிமொழிக்கு என்ன பதவி... என்பதே கட்சியைப் பற்றி வெளியில் வரும் செய்திகளாக மாறிப்போனதால், ஜெயலலிதாவுக்கு எதிராக அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஓர் அணியை அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை.
'ஆளும் கட்சியான அ.தி.மு.க தொடர்ந்து தமிழகத்தில் நடத்திவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்கிற வகையில், இந்த இடைத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்கபூர்வமானது என நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும் சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவுக்கு உதவும் வகையில் திருவரங்கம் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் கழக
வேட்பாளருக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்ற கருணாநிதியின் அறிக்கை, அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிராக பொதுவேட்பாளர் அறிவிக்கவேண்டுமானால் முதலில் அனைத்துக் கட்சிகளையும் ஒரே இடத்தில் அமர்த்தி, அவர்களது ஒன்றுபட்ட கருத்தின் மூலமாக ஒரு வேட்பாளரை அறிவிக்க வேண்டும். ஆனால், கருணாநிதியால் அது முடியாததால் அவரே தனது கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டு, அவரையே அனைவரும் ஏற்க வேண்டும் எனச் சொல்வது கூட்டணி தர்மங்களுக்குள் அடங்காத தர்மமாக இருக்கிறது.
தனது கூட்டணிக்குள் வருவார் என எதிர்பார்த்து, டாக்டர் ராமதாஸின் பேத்தி திருமணத்துக்கு கண் வலியோடு போனார் கருணாநிதி. அடுத்த இரண்டாவது நாளே 'கூட்டணி முடிச்சை’ மறுத்து சேலத்தில் பேட்டி கொடுத்தார் ராமதாஸ். ஸ்டாலின்-வைகோ சந்திப்புக்கும் இப்படி ஒரு முக்கியத்துவம்தான் தரப்பட்டது. ஈரோடு திருமண வீட்டில் அதை வைகோ மறுத்துவிட்டார். விஜயகாந்துக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லை. எஸ்றா சற்குணம்கூட அடுத்த கிறிஸ்துமஸுக்குத்தான் விஜயகாந்தைச் சந்திப்பார். அதற்குள் தேர்தலே முடிந்துபோகும். கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரை தி.மு.க பிரமுகர் ஒருவர் சந்தித்தபோது, 'நாங்கள் உங்கள் கூட்டணிக்கு வருவோம் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்’ என அவர் கைகழுவிவிட்டார். பா.ஜ.க தனித்துப் போட்டி எனச் சொல்லிவிட்டது. ஆசையாக இருப்பது காங்கிரஸ் இளங்கோவன் மட்டும்தான். ஆனால், அவரை அரவணைக்க இதுவரை கருணாநிதி தயாராக இல்லை. ஜி.கே.வாசன், அவர் அப்பா மூப்பனாரைப்போல பிடியே கொடுக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் ஸ்ரீரங்கத்தில் பொதுவேட்பாளர் என்பதோ, தி.மு.க வேட்பாளரை மற்ற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஆதரிப்பது என்பதோ சாத்தியமே இல்லை. மேலும், அனைத்துக் கட்சிகளும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை சாதாரண இடைத்தேர்தலாகப் பார்க்கவில்லை. அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகத்தான் பார்க்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் எடுக்கும் முடிவுதான் அடுத்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் எனவும் நினைக்கிறார்கள்!
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அதன்படி பார்த்தால், மார்ச் மாத இறுதிக்குள் வழக்கின் தீர்ப்பு வந்துவிடும். வழக்கின் தீர்ப்பு ஒருவேளை ஜெயலலிதாவுக்குச் சாதகமாக வந்தால், அவர் மீண்டும் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவார். அப்போது அது தனக்கு மட்டுமான தேர்தலாக இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகச் சட்டசபைக்கான பொதுத்தேர்தலாகக்கூட ஜெயலலிதா அமைத்துக்கொள்ளலாம். 'நிரபராதி’ என அவர் தீர்ப்பு பெற்றால், வாக்குகளைக் குவிக்கும் மந்திரக்கோல் அதைவிட வேறு என்ன இருக்க முடியும்? அதனால் பெங்களூரு வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து தமிழகச் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் தேதியும் முடிவாகிவிடும். எனவேதான், எதிலுமே மாட்டிக்கொள்ளக் கூடாது என எதிர்க்கட்சிகள் அனைத்தும் பதுங்குகின்றன. இது ஆளும் கட்சிக்கு சாதகமோ சாதகம். ஆனால், ஒரே ஒரு பாதகத்தை நினைத்துத்தான் அமைச்சர்கள் அனைவரும் பயப்படுகிறார்கள்.
அம்மாவைவிட வளர்மதி அதிகப்படியான வாக்குகள் வாங்கிவிட்டால்..? அம்மா முகத்தில் எப்படிப் போய் முழிப்பது?!
வெற்றிபெற வேண்டும், அம்மாவைத் தாண்டிவிடாத வெற்றியாக அது அமைய வேண்டும். இதற்கு யாரிடமாவது ஆலோசனை இருக்கிறதா?
வாருங்கள் ஸ்ரீரங்கத்துக்கு!
No comments:
Post a Comment