பிறக்கும்போது ஒரு பாலினமாகவும், பிறகு இயற்கை, உடல் ரீதியிலான மாறுதல்களால் மற்றொரு பாலினமாகவும் மாறிவிடுவோர் மூன்றாம் பாலினத்தவர் என்றழைக்கப்படும் திருநங்கையர்கள்.
இவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதிலும் சிக்கல்; கடமையாற்றுவதிலும் சிக்கல். இவர்களை ஏளனமாகப் பார்த்து சிரிக்கும் மனிதர்களை நாம் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் காணலாம்.
பிறக்கும்போது ஆணாகப் பிறந்து, பின் காலப்போக்கில் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து பெண்களைப் போல உடையணிந்து, பாலின அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியவர்கள் திருநங்கைகள் என்றழைக்கப்படுகின்றனர்.
தாங்கள் இப்படி இருப்பது தங்கள் குற்றமல்ல, இயற்கையின் குற்றம் என்பதை அவர்கள் இந்த சமுதாயத்துக்குப் போராடிதான் புரிய வைக்க வேண்டியுள்ளது.
திருநங்கைகளின் குலதெய்வக் கோயில், புதுச்சேரியில் உள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை, கொத்தடை, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தாலும், மிகவும் பிரசித்திபெற்ற கோயில் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில்தான்.
மகாபாரதத்தில், குருúக்ஷத்திரப் போரில், பாண்டவர்கள் வெற்றியடைய அரவானை பலி கொடுக்க முடிவாயிற்று. கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து, ஒருநாள் மட்டும் அரவானோடு வாழ்ந்து, அரவான் பலிகளம் புகுந்த பின், விதவைக் கோலம் அடைகிறார்.
இதன் அடிப்படையிலேயே, மோகினியாய் தம்மை உணரும் அரவானிகள், கூத்தாண்டவர் திருவிழாவின்போது கூத்தாண்டவரான அரவானைத் தங்கள் கணவராகக் கருதி, அர்ச்சகர் கையால் தாலி கட்டிக்கொண்டு, அன்று இரவு முழுக்க ஆடிப்பாடி மகிழ்ந்து, மறுநாள் கொலைக்களம் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்படும் அரவானுக்காக, முதல் நாளில் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து, விதவைக் கோலம் பூணுகின்றனர்.
இந்த நிகழ்வையொட்டி, அந்த கிராமத்தைச் சுற்றி இருக்கும் கிராம மக்கள், 18 நாள்களுக்கு எந்தவொரு சுபநிகழ்ச்சியையும் நடத்தமாட்டார்கள்.
இதில் பங்கேற்க, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், சித்திரை மாதப் பௌர்ணமி அன்று திருநங்கைகள் தவறாமல் இங்கே கூடிவிடுவார்கள்.
இவர்கள் மிக அதிகமாக போராடித்தான் தங்கள் உரிமைகளைப் பெற முடிகிறது. இவர்களுக்கான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை சமீப காலமாகத்தான் கிடைத்து வருகின்றன.
இவற்றைப் பெறுவதற்கே அவர்கள் பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால், சமீபகாலமாக இவர்களின் வாழக்கையில் புதிய ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியிருக்கிறது.
அரசாங்கம் இவர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. இவர்களின் சிறப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு திருநங்கைகள் நலவாரியம் அமைத்திருக்கிறது.
திருநங்கைகளுக்கான விடுதி வசதி, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி, தொழில் பயிற்சி எனப் பல்வேறு சலுகைகளை ஏற்படுத்தி அவர்கள் முன்னேற வழிவகை செய்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்கர் மாநகராட்சி மேயராக ஒரு திருநங்கை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதிலும் அவர், பாஜக வேட்பாளரான மஹாவீர் குருஜியை எதிர்த்துப் போட்டியிட்டு, சுமார் 4,537 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுகின்னார் என்ற அந்த 35 வயது திருநங்கை, வெறும் 8-ஆம் வகுப்பு மட்டுமே பயின்றிருக்கிறார். ஆனால், சமுதாயத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இவரைப் போல நடனம், இசை, நாடகம், கல்வி என பல்வேறு துறைகளிலும் திருநங்கைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் ரயில்களில் கை தட்டி பிச்சை எடுப்பது, தருமம் தராதவர்களை அநாகரிகமான முறையில் திட்டுவது என்பன போன்ற செயல்களில் ஈடுபட்டு பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதோடு, தங்களின் இனத்துக்கும் அவமானத்தைத் தேடித் தருகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு சிலரின் செயல்களினால்தான் சமூகத்தில் திருநங்கைகளின் மீது துவேஷம் அதிகரித்து அவர்களை ஆதரிக்க மக்கள் அஞ்சுகின்றனர்.
ஆனால், அவர்களின் பக்கம் நின்று பார்க்கும்போது, அவர்களின் சிந்தனையில் தவறில்லை என்றே தோன்றுகிறது. பொது இடங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே வரிசைகள் இருக்கின்றன.
இருபாலருக்கும் தனித்தனியாக கழிப்பிடங்கள், பேருந்து, ரயில்களில் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், திருநங்கைகளுக்கு இந்த வசதிகள் எல்லாம் கிடைப்பதில்லை.
எனவே, சமுதாயத்தின் பார்வை தங்கள் மீது விழவில்லையே என்ற கோபத்தில்தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
ஆனால், வடமாநிலங்களில் திருநங்கைகள் மதிப்புடன்தான் நடத்தப்படுகிறார்கள். திருநங்கை வியாபாரத்தைத் தொடங்கி வைத்தால் வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பது வடமாநில மக்களின் நம்பிக்கை.
சமூகத்தில் ஒரு பகுதியில் மதிப்புடனும், மற்றொரு பகுதியில் துன்பங்களுடனும் வாழும் இவர்களின் வாழ்க்கை வேதனையானதுதான்.
திருநங்கையாகப் பிறந்தது இவர்களின் குற்றமில்லை. அதனால், தங்கள் லட்சியங்களை புறந்தள்ளி விடாமல், வாழ்க்கையில் போராடி பல வெற்றிகளைக் குவித்து, தாங்களும் சராசரி மனிதர்களைப் போலத்தான், தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க திருநங்கைகள் முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment