தினமும், தங்களை மட்டுமே நம்பி பயணிக்க வரும் பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் கொண்டு செல்வது தான் ஓட்டுநர்களின் ஒரே எண்ணம். ஒரு நாள் கோயம்பேட்டில் இருந்து பெங்களுரு செல்லும் பேருந்தில் ஏறினேன் ,பஸ் புறப்படுவதற்கு இரண்டு நிமிடங்கள் முன், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுனர் தீவிரமாக தனக்கு முன்பு இருந்த சாமி படங்களை வேண்டி கொண்டிருந்தார். பெங்களுருவில் இறங்குவதற்கு முன் அவரிடம், 'வண்டி எடுப்பதற்கு முன்னாடி அவ்வளவு நேரம் ஏன் சாமி கும்பிட்டுகிட்டு இருந்தீங்க?' என்று கேட்டேன் .அவர் சிரித்தபடி "நமக்கு எந்நாளும் சரி, 'நம்மள நம்பி வர இத்தனை உயிரையும் ஒரு கீறல் கூட விழாம கொண்டுபோய்விடணும் முருகா'ன்னுதான் எப்பவும் வேண்டிப்பேன்" என்றார். அது அவ்வளவும் உண்மை.
கடந்த 22-ம் தேதி (22-01-2014) , மறைமலை நகரில் இருந்து பொறியாளர்களை ஏற்றிக் கொண்டு தரமணியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் நோக்கி சென்று பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார் ஆனந்தன்(31). அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட, வலி சிறிது அதிகம் ஆனதுமே பேருந்தை இரும்புலியூரில் சாலை ஓரம் நிறுத்தி விட்டார். அது குளிர்சாதன பேருந்து என்பதால் பின்னால் அமர்ந்திருக்கும் ஊழியர்களுக்கு எதுவும் தெரியவில்லை .சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த ஒரு நபர் ஆனந்தன் உயிருக்கு போராடுவதை அந்த பஸ்சில் அமர்ந்திருந்த ஊழியர்களுக்கு தெரிவித்திருக்கிறார். அங்கு இருந்த போக்குவரத்து காவல்துறையினர் வேறு ஓட்டுனர் முலம் பேருந்தை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் ஆனந்தன் மருத்துவமனைக்கு செலும் வழியில் உயிரிழந்து விட்டார். உயிரிழந்த ஆனந்தனுக்கு, மனைவியும், 9 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆனந்தன் பேருந்தை நிறுத்திய இடத்தில் இருந்து வெறும் 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில்தான் மருத்துவமனை அமைந்துள்ளது. அது மட்டும் இன்றி ஆனந்தன் பேருந்தை மிக கவனமாக சாலை ஓரம் நிறுத்தியதால் தான் அதில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்கள் இல்லாமல் உயிர் தப்பி இருகின்றனர் .
இது குறித்து தாம்பரம் போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில் "சம்பவம் நடந்த இடமான இரும்புலியூர் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம் .ஒரு வேளை ஆனந்தன் அந்த பேருந்தை நடுவழியில் நிறுத்தி இருந்தாலும் சரி, இல்லை வலியைப் பொறுத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டி இருந்தாலும் சரி கண்டிப்பாக அங்கு ஒரு மிகப்பெரிய விபத்து நடந்து இருக்கும். அவர் அந்த பேருந்தை சாலை ஓரம் கொண்டு வந்து நிறுத்தியதன் மூலம் ஒரு மிக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது " என்று கூறினர் .
இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால் இதை விபத்தாக பதிவு செய்யமுடியாது. அதனால் ஆனந்தனின் குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கப்பட வாய்ப்பில்லை
"ஆனந்தனை எனக்கு ஐந்து வருடங்களாக தெரியும். நான் வேலை செய்யும் அலுவலகத்தில் தான் பஸ் ஓட்டி கொண்டிருக்கிறார். இது வரை அவர் மீது எந்த புகாரும் வந்ததில்லை, வயதில் மிக சிறியவராகஇருந்தாலும், வேலையில் பொறுப்பானவர். இந்த சம்பவம் நடந்த பிறகு அலுவலகம் முழுவதும் ஆனந்தனின் பெயர் தான் ஒலித்து கொண்டிருகிறது. அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு சென்ற பொழுது, தன்னுடைய அப்பா இறந்து விட்டார் என்று என்று புரியாமல் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் முகம் தான் நெஞ்சில் இன்னும் நிற்கிறது. எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து அவரின் குடும்பத்திற்கு உதவி செய்ய தீவிரமாக முயன்று வருகிறோம்" என்று அவரின் பேருந்தில் தினமும் பயணம் செய்யும் ஊழியரான அஷ்வின் கூறினர்.
ஆனந்தன் சிறிது முயற்சி செய்திருந்தால் கூட அருகில் இருந்த மருத்துவமனைக்கு பஸ்சை ஓட்டி சென்று இருந்திருக்கலாம். ஆனால் தன்னை நம்பி அமர்ந்திருக்கும் நபர்களை எண்ணியதால்தான் பேருந்தை சாலை ஓரம் பத்திரமாக நிறுத்தி உள்ளார்.
அனந்தன் மட்டுமல்ல, இதே போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலின் ஓட்டுனர் மனோகர் (48), தனக்கு மார்பில் வலி ஏற்படுகிறது என்று தெரிந்ததும் ரயிலை மெயின் லைனில் இருந்து கொண்டு வந்து நிறுத்தி விட்டு, அவர் இருக்கையிலே இறந்து போனார். தங்களுக்கு என்று ஒரு குழந்தை, மனைவி, அப்பா, அம்மா என்று ஒரு உலகம் இருந்தாலும். அந்த ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த பிறகு, அவர்களை நம்பி வந்திருக்கும் பயணிகள் தான் உலகம் என்ற கடமை உணர்வினால் தான் பல இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களைப் பற்றி கவலைப்படாமல் பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர் .
அந்த நிறுவன ஊழியர் சொன்னது போல ஆனந்தன் ஒரு ஹீரோ இல்லை. அவர் அப்போது அந்த வழியாய் சென்று கொண்டிருந்த அனைவரையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிய தேவதூதர்!
உயிர்போகும் நிலையிலும் பயணிகளைக் காக்க வேண்டும் என்று நினைத்த, டிரைவர் ஆனந்தனுக்கு சல்யூட்!
- கு.நெல்சன் மேத்தியூஸ் மதுரம் (விகடன் மாணவப் பத்திரிகையாளர்)
No comments:
Post a Comment