இன்றைய நாகரிக உலகில் சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என பெரும்பாலானோர் தங்கள் காதுகளில் ஒரு ஒலிக் கருவியை நுழைத்துக் கொண்டு திரிவதைப் பார்க்க முடிகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், தொழிலாளர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்தக் கருவியை காதில் நுழைத்துக் கொண்டு தனி உலகில் சஞ்சரித்து வருகின்றனர்.
இவர்களில் பலர் ஓய்வு நேரங்களில் மட்டுமல்லாது, தங்களின் வேலைகளின் ஊடேயும் இதை பயன்படுத்தும் போக்கு பெருகி வருகிறது.
இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, கார் ஓட்டும்போது, படிக்கும் போது, கணினியில் பணிபுரியும் போது, படுக்கையில் படுத்திருக்கும் போது என இதற்கு எந்த விதிவிலக்கும் இல்லை.
வேலையின் சுமை தெரியாது, கூடுதலாக பணி செய்யலாம் போன்றவை இதற்காகக் கூறப்படும் காரணங்கள்.
இந்த ஒலிக்கருவிகளை பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்படுவதில்லை, அடுத்தவர்களை தொந்தரவு செய்வதில்லை என்பதும் இவர்களின் வாதம்.
ஆனால், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் இந்தக் கருவியை பயன்படுத்தும் போது, அவர்களுக்கு பின்னால் வரும் வாகனங்களின் ஹாரன் சப்தத்தை கேட்க முடிவதில்லை.
அவர்களை முந்திச் செல்லும் வாகனங்களின் குறுக்கே சென்று ஆபத்தை தேடிக்கொள்கின்றனர்.
அதேபோல, காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலில் முழுவதுமாக லயித்துப் போயிருப்பவர்களுக்கு நகரச் சாலைகளில் சிக்னல் விழுவது, எதிரே வரும் வாகனங்களின் வேகம், திரும்பும் திசைகளை கணிப்பது போன்றவற்றில் ஏற்படும் கவனக் குறைவுகளாலும் விபத்தில் சிக்குகின்றனர்.
மனைவியின் சேலை சக்கரத்தில் சுற்றிக்கொள்ள, அவர் எழுப்பும் அபாய குரல் கேட்காமல் சென்றோரும் உண்டு.
முன்பெல்லாம் பேருந்தில் மணிக்கணக்கில் பயணம் செய்ய நேர்ந்தால் வழித்துணையாக வருபவை புத்தகங்களே. அவை நாவலாகவோ, வார, நாளிதழ்களாகவோ இருக்கும்.
சிறிது நேரம் தூங்கியது போக, பெரும்பாலான நேரங்கள் புத்தகங்கள் படிப்பதே வழக்கம்.
இதனால் பொது அறிவு வளர்ந்ததோடு வாசிப்பு பழக்கமும் வளர்ந்தது. ஆனால், தற்போது பயணம் செய்பவர்களின் கைகளில் புத்தகங்களை பார்க்க முடிவதில்லை.
அதற்கு பதிலாக செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்றவற்றில் விளையாடுவதும், திரைப்படம் பார்ப்பதும்தான் அதிகமாக நடைபெறுகின்றன. இதில் ஒலிக் கருவியை காதில் பொருத்தி பாடலை ஒலிக்கவிட்டு தூங்கிவிடுபவர்கள்தான் அதிகம்.
அதேபோல, பணியின் போது இந்த கருவியை காதில் நுழைத்துக் கொண்டு பாட்டு கேட்டுத்தான் ஆக வேண்டுமா? இதனால், நிச்சயமாக பணியில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கட்டடத் தொழிலாளர்கள், இயந்திரங்களில் பணிபுரிவோரும் சில சமயங்களில் இந்தக் கருவியை பொருத்திக் கொண்டு பாட்டுக் கேட்பதை பார்க்க முடிகிறது.
ஒரு நிறுவனத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், சொந்தத் தொழில் செய்வோரை யார் கட்டுப்படுத்துவது?
பகலில் மட்டுமல்லாது, இரவில் தூங்கும்போதும்கூட இந்த ஒலிக் கருவியை காதில் பொருத்தி பாடலை ஒலிக்கவிட்டு தூங்குபவர்கள் அனேகம். இது பாதுகாப்புக்கு உகந்ததல்ல.
இன்று, மனிதர்கள் வீட்டில் இருக்கும்போதே கதவை உடைத்து அவர்களை மிரட்டி கொள்ளையடித்துச் செல்வது சாதாரணமாகிவிட்டது.
இந்த நிலையில், காதுக்குள் ஒலிக்கும் கருவியோடு தூங்கினால், உடன் தூங்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்களுக்கு ஏற்படும் ஆபத்தை நம்மால் உடனடியாக அறிய முடியாது.
காதுக்குள் ஒலிக்கும் கருவியால், நாளடைவில் காது கேட்கும் சக்தியை இழந்துவிட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நம்முடைய காது இயற்கை நமக்கு அளித்த கொடை. அவை நம்மைச் சுற்றி நடைபெறும் தகவல்களை நம்முடைய அறிவுக்கு எடுத்துச் செல்பவை.
அங்கு அவை நல்லவை, கெட்டவை என பகுக்கப்பட்டு நம்மை வழிநடத்த உதவுபவை. காற்றின் கீதத்தையும், நதியின் சலசலப்பையும், மழலையின் கொஞ்சலையும் கேட்கத்தான் இந்தக் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன.
சமுதாயத்தில் நம்மைச் சுற்றி எழும் இந்த ஒலிகள் நம் காதுகளை ஒருபோதும் பாதிப்பதில்லை. அவை நம் இதயத்தை பாதிப்பவை.
இதயம் உள்ள ஒவ்வொருவரும் இந்த ஒலிகளை அவசியம் காதுகொடுத்து கேட்க வேண்டும்.
செயற்கையான கருவிகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு திரிந்தால், ஒலி தெரியாத, மொழி தெரியாத மனிதர்களாகத்தான் நாம் கருதப்படுவோம்.
By
No comments:
Post a Comment