Friday, January 30, 2015

நாயின் காலை துண்டாக்கிய கறிக்கடைக்காரர்!



சென்னை: நாயின் காலை துண்டாக்கிய கறிக்கடைக்கார் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


கடந்த 26ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி பிள்ளையார்கோயில் தெருவில் ஒரு நாய், பின்பக்க வலது கால் துண்டாகி, ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்களில் சிலர் பரிதாபத்துடனும், வேறு சிலர் எதையும் கண்டுக்கொள்ளாமலும் கடந்து சென்றனர்.

அப்போது அதேப் பகுதியை சேர்ந்த விஜய், இந்த காட்சியைப் பார்த்து நாய்க்கு உதவினார். அந்த நாயை அங்கிருந்து மீட்டு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் கால்நடை கிளினிக்குக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் சுஜாதா, நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்தார். இருப்பினும் துண்டான காலை ஓட்டமுடியவில்லை. இப்போது அங்கேயே அட்மிட் செய்யப்பட்டுள்ள அந்த நாய்க்கு தினமும் காலை, மாலை டிரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு நன்றாக இருக்கும் நாய், 10 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்து செல்லப்படவுள்ளது.

நாய் குறித்து விசாரித்த போது அதை வளர்த்தவர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்றும், அந்த நாயின் பெயர் நிக்சன் என்றும் தெரியவந்தது. நிக்சனை குட்டியிலிருந்து செல்லமாக கார்த்திக் வளர்த்து வந்துள்ளார். இப்போது கிளினிக்கில் உள்ள நிக்சனை நன்றாக அவர் கவனித்து வருகிறார்.

நிக்சனை காப்பாற்றிய விஜய், 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அந்த அமைப்பின் நிறுவனர் அருண்பிரசன்னா, கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் நாயின் காலை துண்டாக்கியது அந்தப்பகுதியில் கறிக்கடை நடத்தி வரும் ரியாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரியாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியாஸை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அருண் பிரசன்னா கூறுகையில், "சம்பவத்தன்று நிக்சன் என்ற நாயை விரட்ட கத்தியை தூக்கி வீசியுள்ளார் கறிக்கடைக்காரர் ரியாஸ். இதில் நாயின் முன்பக்க வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அவர், கத்தியை தூக்கி வீசியதில் பின்பக்க இடது கால் தூண்டாகி உள்ளது. அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி இருக்கிறோம். நாயின் காலை துண்டாக்கிய ரியாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததால் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை அவர் மிரட்டினார். அதையும் காவல்துறையில் புகாராக கொடுத்து இருக்கிறோம்.

சென்னையில் ஆங்காங்கே கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதால் ஏற்படும் சுகாதாரசீர்கேட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதோடு நாய், மாடுகள் போன்ற கால்நடைகளை துன்புறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்" என்றார்.

சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு கூறுகையில், "புகாரின் பேரில் ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகிறோம்" என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த இன்ஜினியர் ராஜ்கணேஷ் கூறுகையில், "சிக்னலுக்காக பைக்கில் அந்தப்பகுதியில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது கறிக்கடை முன்பு ஒரு நாய் எதையோ தின்று கொண்டு இருந்தது. இதைப்பார்த்த கறிக்கடைக்காரர் ஆத்திரத்தில் கறி வெட்டும் அரிவாளை நாயின் மீது தூக்கி வீசினார். இதில் நாயின் பின்பக்க கால் துண்டாது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த நாய் ரோட்டில் கத்திக் கொண்டே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடியது. இதைப்பார்த்த நான், பைக்கை அந்த இடத்தில் விட்டு விட்டு நாயை துரத்தினேன். இதற்குள் நாய் ஒரு வீட்டுக்குள் புகுந்து கொண்டது. ரோடு முழுவதும் சிதறிக் கிடந்த ரத்தத்தை வைத்து நாயை கண்டுப்பிடித்து 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' அமைப்பினரின் உதவியோடு நாயை கிளினிக்குக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம்.

நாயை காப்பாற்ற முயன்ற எங்களுடன் அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் தகராறு செய்தது வேதனையாக இருக்கிறது. இருப்பினும் நாயின் உயிரை காப்பாற்றியது எங்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

மனிதனுக்கே உதவாத இந்தக்காலத்தில் நாய்க்கு உதவிய மனிதநேயம் பாராட்டத்தக்கது!

-எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024