உளவியலாளர் ஒருவர் “நீ என்பது உன்னைப் பற்றி நீ நினைப்பதே. உனக்கு வேண்டியதை நீயே எண்ணிக்கொள்” என்று சொன்னார்.
பெரும்பாலான இளைஞர்கள் தங்களிடம் உள்ள பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசப் பயப்படுகின்றனர். இதனால், மனக்குழப்பம், மன அழுத்தம், மனச் சோர்வு ஏற்படுகின்றன.
மனநோயின் முதல் தீர்வே மனம் திறந்து பேசுவதுதான் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். எல்லோருடைய உள்ளங்களிலும் ஏதாவதொரு பிரச்சினை, மனக்கஷ்டம், மனவருத்தம் இருக்கத்தான் செய்யும். நமக்கு மட்டும்தான் பிரச்சினை இருக்கிறது என்று கற்பனை செய்து சிலர் தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.
ஒரு கலெக்டராக, மருத்துவராக, விஞ்ஞானியாக ஆகவேண்டும் என்பது உங்களுடைய எண்ணம் என்றால், அதில் உறுதியாக இருங்கள்.யாருக்காகவும் உங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் அந்த எண்ணத்தை விட்டு விடாதீர்கள். அதில், பல்வேறு தோல்விகள், தடைக்கற்கள், பிரச்சினைகள் வரும். எதைக் கண்டும் அதைத் தியாகம் செய்து விடாதீர்கள்.
உண்மையில் ஒரு மனிதனின் உண்மையான பலம் சந்தோஷம்தான். உங்களுடைய சந்தோஷம் உங்கள் கையில்தான். யாரும் உங்களுடைய சந்தோஷத்தைக் கெடுத்துவிட முடியாது.
வாழ்க்கையில் பிரச்சினையை எதிர்கொள்ள தெரியாதவர் மகிழ்ச்சியில்லாமல் இருப்பார். நாளை என்ன நடக்கும் என்று சிந்திப்பவர் சந்தோஷத்தை விரும்பமாட்டார். நாம் எதிர்காலத்தில் முன்னேறுவோமா என்று சந்தேகிப்பவர் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். “நான் எல்லாவற்றிலும் சிறப்பாக வருவேன்” என்று நினைப்பவர் மகிழ்ச்சியாக இருப்பார். அவரது, மகிழ்ச்சியே அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். அதனால்,எப்போதும் சந்தோஷமாக இருங்கள்.
நல்ல ஆடைகளை அணியும்போது நம்முடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் அழகாக மாறுகின்றன. அதனால், எப்போதும் நல்ல ஆடைகளை அணிந்து, நல்ல எண்ணங்களோடு வலம் வாருங்கள்.
அடுத்ததாக, உங்களுக்கென்று நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய அலுவலகங்களிலோ, கல்லூரிகளிலோ, பள்ளிகளிலோ இருப்பவர்களுடன் நீங்கள் எப்போதுமே நற்பண்புகளின் மூலம் அழகாக இருங்கள். இதன் மூலம், அவர்களிடம் நல்ல எண்ணங்கள் ஏற்படும்.
ஒரு நாட்டின் மக்கள் தங்களை ஆட்சி செய்ய குறிப்பிட்ட காலத்துக்கு ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். அவரை ஆட்சி செய்ய அனுமதிப்பார்கள். குறிப்பிட்டகாலத்துக்குப் பின்பு, அவரை ஆட்சியை விட்டு இறக்கி,பக்கத்தில் உள்ள காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவார்கள். இந்த பழக்கத்தின்படி, ஒரு சமயம் ஒரு இளைஞரை அந்த நாட்டின் தலைவராக்கினார்கள். வழக்கப்படி அவரைச் சில வருடங்கள் கழித்து காட்டில் கொண்டு போய் விட்டுவிட அழைத்துச் சென்றார்கள்.
ஆனால், ஆச்சரியம். அங்கே காடு இருப்பதற்குப் பதிலாக ஒரு ஊர் இருந்தது. இவர் தலைவராக இருக்கும்போதே அந்தக் காட்டைச் சுத்தம்செய்து, ஒரு ஊராக மாற்றிவிட்டார். இதுதான், ஒரு நேர்மறையாகச் சிந்திப்பவரின் எண்ணம். நமக்கு என்ன வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பதுபற்றிச் சிந்திக்க மாட்டார். அதை எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதுபற்றித்தான் சிந்திப்பார்.
எப்போதும் நேர்மறையாகச் சிந்தித்து வெற்றி பெறுங்கள்.
சாதிக்க நினைப்பவர்கள் ஒரு தடவை முயற்சி செய்துவிட்டு சும்மா இருப்பவர்கள் அல்ல.சாதிக்கும்வரை முயன்று கொண்டே இருப்பார்கள். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
- நெல்லை சலீம்
erusaleem@gmail.com
No comments:
Post a Comment