Monday, January 26, 2015

ஜனாதிபதி சொன்னது; அதில் அர்த்தம் உள்ளது


logo

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அரசியலில் அதிலும் குறிப்பாக, பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவமிக்கவர். பாராளுமன்ற நடைமுறைகளை தெரிந்தவர் என்பது மட்டுமல்லாமல், அதை கடைபிடிப்பதிலும் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருந்தவர். கடந்த குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள், மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டபோது, அவையில் அந்த மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்படவே முடியாத சூழ்நிலையில், கூட்டமும் முடிந்தது. அரசாங்கமும், இன்சூரன்ஸ், நிலக்கரி உள்பட 6 மசோதாக்களை நிறைவேற்ற அவசர சட்டங்களை பிறப்பித்தது. ஜனநாயக முறைப்படி இரு அவைகளிலும் ஆழமாக விவாதித்து நிறைவேற்றாமல், அவசர சட்டவழியை பின்பற்றியதற்கு, அப்போதே மத்திய மந்திரிகளிடம், ஜனாதிபதி தன் அதிருப்தியை தெரிவித்தார்.

இப்போது, பிப்ரவரி 23–ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் மீண்டும் கூட இருக்கிறது. அரசியல் சட்டத்தின் 123–வது பிரிவின்படி, அசாதாரண, எதிர்பாராத, அவசர சூழ்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்காத நேரத்தில் மட்டும் மிகமுக்கியமான சட்டங்களை அவசர சட்டங்கள் மூலம் நிறைவேற்றலாம். ஆனால், அந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவேன்டும். ஆனால், மீண்டும் பாராளுமன்றம் கூடியவுடன் 6 மாதகாலங்களுக்குள் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இருஅவைகளும் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில், மீண்டும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து அவையை நடத்தவிடாமல் செய்தாலோ, அல்லது இந்த அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அந்த தீர்மானத்தை தோற்கடித்தாலோ, அந்த அவசர சட்டங்கள் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில், இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தைக் கூட்டினால் எந்த சிக்கலும் இல்லாமல் இதற்கு ஒப்புதல் கொடுத்து, மாற்று சட்டங்கள் நிறைவேற்றப்படமுடியும் என்பதால், அந்த வழியை அரசாங்கம் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஆனால், இப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இவ்வாறு அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் வழியை பின்பற்றுவதற்காக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டையுமே சாடியிருக்கிறார். அவசர சட்டங்கள் என்பது ஒரு நல்ல நடைமுறை இல்லை, எல்லா சட்டங்களும் நல்ல பாராளுமன்ற நடைமுறைகளின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படவேண்டும், எந்த காரணத்தைக்கொண்டும் பாராளுமன்ற நடைமுறைகளுக்கு தடை, இடையூறு இருக்கக்கூடாது, அமைதியாக இருக்கும் பெரும்பான்மையின் வாயை அடைக்கும் செயல்களில் சிறுபான்மையாக எண்ணிக்கையில் இருக்கும் கட்சிகள் சத்தம் போட்டுக்கொண்டு முயற்சிக்கக்கூடாது என்று சொன்னார். அதோடு விட்டுவிடவில்லை, 1952 முதல் இதுவரை 4 முறைகள்தான் கூட்டுக்கூட்டம் நடந்து இருக்கிறது, தேசிய பாதுகாப்பு தொடர்பான நெருக்கடியான நேரத்தில் மட்டுமே கூட்டுக்கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆக, ஜனாதிபதியின் இந்த அர்த்தமுள்ள ஆலோசனையை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இருவருமே பின்பற்றவேண்டும். எந்த ஒரு சட்டமோ, திட்டமோ பாராளுமன்றத்தில் வந்தால், ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தால் மட்டுமே அதன் சாதக, பாதக கருத்துக்கள் வெளியே வரமுடியும். நிறை குறைகள் இரண்டும் வந்தால்தான், அதை எடைபோட்டு முடிவெடுத்து மக்களுக்கு ஆக்கப்பூர்வமான பயன்கள் கிடைக்கும். எனவே, அரசியலை பாராளுமன்றத்துக்கு வெளியே வைத்துவிட்டு, மக்களுக்கான பணிகள் என்றுவரும்போது, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து மசோதாக்களை அலசி ஆராயும் வகையில் விவாதங்கள் நடக்கவேண்டும். குறுக்குவழியில் சட்டங்கள் நிறைவேற்றப்படும் நிலையை இருதரப்பும் உருவாக்கவேண்டாம். அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024