திருவண்ணாமலையை சேர்ந்த விமல்ராஜ் (28) என்பவரின் மனைவி லோகேஸ்வரி (26). இவர்கள் இருவரும் சென்னையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கரை வயதில் அஸ்வினி என்ற மகளும், மூன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். இந்த குழந்தைகளை, சென்னையில் வைத்து பராமரிக்க முடியாது என்பதால், லோகேஸ்வரி தன் தங்கை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து இருந்தார்.
முத்துலட்சுமி, குடியாத்தம் அடுத்துள்ள கொத்தமாரிகுப்பம் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், குழந்தைகளை முத்துலட்சுமி கொடுமை செய்வதாகவும், குழந்தைகள் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கிராமத்தில் வசிப்பவர்கள், விமல்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விமல்ராஜ் தன் மனைவி லோகேஸ்வரியுடன், கடந்த 27ஆம் தேதி குடியாத்தம் வந்தார். அங்கு, தன் குழந்தைகள் அடையாளம் தெரியாதபடி, உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முத்துலட்சுமியிடம் விசாரித்தபோது, அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.
பின்னர், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை தூக்கிச்சென்றார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், குழந்தைகள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படியும் பரிந்துரை செய்துள்ளனர். இதனடிப்படையில், குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், ‘சிறுமி அஸ்வினிக்கு தலையில் பலத்த காயம் உள்ளதால், 2 கண்களும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலில் பல இடங்களில் சிறு சிறு காயங்களும் உள்ளன. சிறுவன் அஸ்வின் முகத்தில் பலத்த காயமும், காலில் வெந்நீர் ஊற்றியதால் ஏற்பட்ட காயங்களும், உடல் முழுவதும் சிறுகாயங்களும் உள்ளன. இந்த குழந்தைகளை கட்டை அல்லது குச்சியால் தாக்கி இருக்கவேண்டும்’ என்று கூறினர்.
பத்திரிகையில் வந்த இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், நீதிபதி டி.மீனாகுமாரி, பத்திரிகையில் வந்த செய்தியையே வழக்கு மனுவாக கருதி, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி மீனாகுமாரி, நடந்துள்ள இந்த சம்பவம் மனித உரிமை மீறல் செயலாகும். எனவே, இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதேபோல, குழந்தைகள் உடல்நலம் குறித்து வேலூர் அரசு மருத்துவமனை தலைவர் (டீன்) விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment