Saturday, January 31, 2015

வினியோகத் துறையில் எனக்கு வெற்றி தேடித்தந்த படம் சிவாஜி: அபிராமி ராமநாதன் தகவல்


வினியோகம் செய்த சில படங்கள் தோல்வி அடைந்ததால், 10 ஆண்டுகள் அத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தேன். மீண்டும் எனக்கு வெற்றி தேடித்தந்த படம், ரஜினி நடித்த "சிவாஜி'' என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

திரைப்படத்துறை அனுபவங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:-

"தியேட்டர் நிர்வாகம்தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை நிலைப்படுத்தியது.

அப்போது மவுண்ட் ரோட்டில் இருந்த "சாந்தி'', "தேவி'', "சபையர்'', "ஆனந்த்'' தியேட்டர்களில் மட்டுமே ஏர்கண்டிஷன் வசதி இருந்தது. புரசைவாக்கத்தில் நாங்கள் கட்டிய அபிராமியும், பாலஅபிராமியும் ஏர்கண்டிஷன் தியேட்டர்கள். இதன் காரணமாக, தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

அபிராமி தியேட்டரைச் சுற்றி நிறைய இடம் இருந்தது. அங்கு அன்னை அபிராமி, சக்தி அபிராமி என்று 2 தியேட்டர்கள் உருவாக்கப்பட்டன.

"டிவி''யில் சினிமா படங்கள் ஒளிபரப்பத் தொடங்கிய காலகட்டத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால், தியேட்டருக்கு ரசிகர்களை வரச்செய்ய ஒரு புது உத்தியைக் கையாண்டேன். "போன் செய்தால் போதும். டிக்கெட் உங்கள் வீடு தேடிவரும்'' என்று ஒரு திட்டம் தொடங்கினோம். அது பெரிய வெற்றி. புதிய படங்களை பார்க்க விரும்புகிறவர்கள், டிக்கெட் வீடு தேடி வந்ததால், தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக வரத்தொடங்கினார்கள்.

எனக்கு, புதிய தொழில் நுட்பம் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். வெளிநாடுகளில் "டி.டி.எஸ்'' என்னும் சிறப்பு ஒலி, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக அறிந்தேன். உடனே நானும் எங்கள் தியேட்டர்களுக்கு "டி.டி.எஸ்'' ஒலியைக் கொண்டு வந்தேன். இந்த வகையில் இந்தியாவில் முதல் "டி.டி.எஸ்'' தியேட்டர் எங்களுடையதுதான்.

டி.டி.எஸ். சிறப்பு ஒலியுடன் கூடிய படம் வந்தால்தானே இந்த புதிய அனுபவத்தை ரசிகர்கள் உணர முடியும்? அதுமாதிரியான படங்கள் அதிகம் வரவில்லை. இதுபற்றி ஒரு முறை கமலஹாசனிடம் என் மனக்குறையை வெளியிட்டேன். "தெரியாத்தனமாக 3 1/2 லட்சம் செலவில் டி.டி.எஸ். ஒலி வசதி பண்ணிவிட்டேன். ஆனால் படம்தான் கிடைக்கவில்லை'' என்றேன்.

கமல் அப்போது "குருதிப்புனல்'' படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். கமலுக்கும் எப்போதுமே புதிய தொழில் நுட்பத்தில் ஆர்வம் உண்டு. உடனே `குருதிப்புனல்' படத்தில் "டி.டி.எஸ்'' சிறப்பு ஒலி சேர்க்க முடிவு செய்தார். அதற்காக, படத்தை ரிலீஸ் செய்வதை 3 மாதம் தள்ளி வைத்தார். இப்படி எங்கள் தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் "டி.டி.எஸ்'' படம் `குருதிப்புனல்.'

இதுமாதிரி டிஜிட்டல் முறையில் படம் திரையிடும் வசதி வந்தபோது, ஏவி.எம். சரவணன் அப்போது அவர் தயாரித்த "பேரழகன்'' படத்தை எங்களுக்கு டிஜிட்டல் முறையில் தந்தார். அதுபோல டால்பி சவுண்ட் சிஸ்டத்தை திரையரங்கில் முதலில் புகுத்தியதும் நாங்கள்தான்.

1984-ல் மலேசியா போயிருந்தபோது அங்கிருந்த 4 தியேட்டர்களில் "ஷாப்பிங் மால்'' கொண்டு வந்திருந்ததை பார்த்தேன். படம் பார்க்க வருகிறவர்கள் பலவித பொழுது போக்குகளில் ஈடுபடவும், பலவித ரெஸ்டாரெண்டுகளில் உணவு அருந்தவும், விரும்பிய பொருட்களை வாங்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனால் தியேட்டருக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அறிந்தேன்.

இதனால் "அபிராமி'' தியேட்டர்கள், அபிராமி மால் என்ற பெயருடன் 2003-ம் ஆண்டு நவீன வடிவமைப்புடன் மாற்றி அமைத்தேன். தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட தியேட்டர்களுடன் கூடிய முதலாவது ஷாப்பிங் மால் அபிராமிதான்.

எங்கள் மாலில் உள்ள "சொர்ண சக்தி அபிராமி'' (பழைய சக்தி அபிராமி) இப்போது ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, படுத்துக்கொண்டே சினிமா பார்க்கலாம்! பாத்ரூம் கூட, ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளது.

புதிய படங்களை எங்கள் தியேட்டர்களில் திரையிடும் நோக்கில் அதை பார்ப்பதுண்டு. அப்படிப் பார்க்கும்போது அது சரியாக ஓடுமா என்பது தெரிந்து விடும். இப்படி படங்களை பார்த்துப் பார்த்து, `நாமும் ஒரு படத்தை தயாரிக்கலாமே' என்ற எண்ணம் ஏற்பட்டது. 1994-ல் இப்படி நான் தயாரித்த படம்தான் `அடிமைச்சங்கிலி.' அர்ஜ×ன், ரம்பா, ரோஜா நடித்த இந்தப் படத்தை டைரக்டர் ஆர்.கே.செல்வமணி இயக்கினார்.

அந்தக் காலக்கட்டத்திலேயே 3 1/2 கோடி ரூபாய் செலவாயிற்று. படத்தயாரிப்பு 10 மாதம் வரை நீடித்தது. படம் ரிலீசான போது நஷ்டம் ஏற்பட்டது. என்றாலும் என் படத்தை நம்பி வாங்கி நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களின் நஷ்டத்தை நானே ஏற்றுக்கொண்டேன். இந்த வகையில் தியேட்டர் அதிபரான என் முதல் சினிமா தயாரிப்பு அனுபவம் "இக்கரைக்கு அக்கரைப் பச்சை'' கதைதான்.

ரஜினி நடித்த ஒரு ஆலிவுட் படம் "பிளட் ஸ்டோன்.'' மெட்ரோ பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த இந்த படத்துக்கு நான்தான் "பைனான்ஸ்'' பண்ணினேன்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் 25 நாள் நடந்தது. ரஜினியுடன் நானும் இருந்தேன்.

ரஜினி "சூப்பர் ஸ்டார்'' ஆக உயர்ந்ததற்கு காரணம், அவரது `நடிப்பு பாதி; குணம் பாதி' என்றுதான் சொல்ல வேண்டும். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு சரியாக 8-40 மணிக்கு ரஜினியிடம் இருந்து போன் வரும். "நான் ரெடி. கார் ரெடியா?'' என்று கேட்பார். தொழில் மீது அதிக பக்தி.

சினிமாத்துறையோடு சம்பந்தப்பட்டிருந்ததால், நடிகர் திலகம் சிவாஜியின் அன்புக்கும் உரியவராக இருந்தேன். என் மகள் திருமணத்தின்போது முழு நாளும் கூடவே இருந்து எங்கள் குடும்பத்தை சந்தோஷப்படுத்தினார். அவரை பார்க்க வருவது தள்ளிப்போனால், உரிமையுடன் கோபித்துக் கொண்டு, "ஏண்டா! ஏதாவது விஷயம் இருந்தால்தான் வருவியா?'' என்று கேட்பார்.

பட உலகில் என்னை வியக்க வைத்த இன்னொருவர் சின்னப்ப தேவர். ஒரு சினிமா எப்படி இருந்தால் வெற்றி பெறும் என்ற `லாஜிக்' தெரிந்தவர். அவர் தயாரித்த "ஆட்டுக்கார அலமேலு'' படம், எங்கள் தியேட்டரில் ஓடியபோது படம் பார்க்க வந்திருக்கிறார். பால்கனியில் அவருடன் நானும் படம் பார்த்தேன்.

அப்போது அவரிடம் "படத்துக்கு கேமரா ஆங்கிள் இன்னும் கொஞ்சம் கவனமாக வைத்திருக்கலாம்'' என்றேன். அவரோ, "இந்தப் படத்தோட கதாநாயகன் ஆடுதான். ஆடு ஒழுங்காக நடிக்குதா என்று பாருங்க'' என்று சொல்லிவிட்டார்.

"படம் பார்க்கிறவர்களை ஒரு கதைக்குள் முழுமையாகக் கொண்டு வந்திட்டால், படம் நிச்சயமாக ஜெயிக்கும். சின்னச்சின்ன குறைகள் இருந்தால்கூட, ரசிகர்கள் அதை பெரிசா எடுத்துக்கொள்ளமாட்டார்கள்'' என்று அவர் சொன்னபோது, சினிமா பற்றிய அவரது ஞானம் வெளிப்படையாகத் தெரிந்தது.

படத்தின் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு வந்தபிறகு எனக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த கவுரவம் மறக்க முடியாதது. போலீஸ் கமிஷனராக இருந்த லத்திகா சரண் என்னிடம், "காவல்துறை பொதுமக்களின் நண்பன்'' என்கிற மாதிரியான கதைப் பின்னணியில் ஒரு குறும்படம் எடுத்துத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடனே ஐந்தாறு குட்டிக் கதைகளுடன் அரை மணி நேரப்படமாக எடுத்துக் கொடுத்தேன். ஐந்து லட்சம் செலவாயிற்று. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நிஜ போலீஸ் அதிகாரிகளே நடித்தார்கள்.

சினிமாவில் அப்பா வினியோகத் துறையில் இருந்ததால், அப்பா வழியில் நாமும் முயன்று பார்க்கலாமே என்று தோன்றியது. அதற்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வது, லாபம் வந்தால் வினியோகத்தைத் தொடர்வது, நஷ்டம் வந்தால் அத்தோடு நிறுத்திக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

மொத்தம் 45 படங்கள் வரை வினியோகம் செய்தேன். அதில் 22 படங்கள் 100 நாள் ஓடின. 6 படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. என்றாலும் பின்னால் வினியோகம் செய்த படங்களில், போட்ட பணம் திரும்ப வராததால் முதல் குறையத் தொடங்கியது. அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.

பத்து வருடம் கழித்து, ரஜினி நடித்த "சிவாஜி'' படத்துக்கு சென்னை நகர வினியோக உரிமை பெற்றேன். அதில் நான் எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.

எதிர்பார்ப்புக்குரிய புதிய படங்கள் ரிலீசாகும்போது திருட்டு விசிடி எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள்தான் அதிக லாபம் பார்க்கும் நிலை சமீப காலங்களில் இருந்து வந்தது. மும்பையில் ஒரு இந்திப் படம் ரிலீசானால் உடனடி கலெக்ஷன் பார்ப்பதற்காக அதிக தியேட்டர்களில் திரையிடுவார்கள். பக்கத்து பக்கத்து தியேட்டர்களில் கூட திரையிடுவார்கள். இதனால் புதிய படம் பார்க்கும் ஆவல் கொண்ட ரசிகர்கள் இம்முறையில் தாமதமின்றி படம் பார்த்து விட முடிகிறது. இதனால் `திருட்டு விசிடி' பார்ப்பதற்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது.

`சிவாஜி' படத்தின் சென்னை வினியோக உரிமையை ஏவி.எம்.சரவணனிடம் நான் கேட்டபோது, மும்பை நிலவரத்தை சொல்லி அதுபோல் சென்னையிலும் பல தியேட்டர்களில் திரையிட்டால் சரியாக இருக்கும் என்று கூறினேன். என் கருத்தை அவரும் ஏற்றுக்கொண்டார்.

சென்னையில் ஒரே நேரத்தில் 18 தியேட்டர்களில் `சிவாஜி' ரிலீசாகி வினியோகஸ்தர்களுக்கு முதலீடு செய்த தொகையையும் தாண்டி வசூலித்துக் கொடுத்தது.

சினிமாவில் முதல் பட தயாரிப்பு அனுபவம் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதால், முதல் தயாரிப்பில் ஏற்பட்ட மைனஸ் பாயிண்டுகளை பிளஸ் ஆக்கி மறுபடியும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறேன். நிச்சயமாக, வெற்றிகரமான தயாரிப்பாளர் என்ற நிலையை எட்டுவேன்.''

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

அபிராமி ராமநாதன் சின்னத்திரையிலும் தொடர்கள் தயாரித்தவர். "மாயாவி மாரீசன்'', "தெய்வ தரிசனம்'', "நம்ம ஊரு'' போன்றவை இவரது படைப்புகள்.

அபிராமி ராமநாதனின் மனைவி நல்லம்மை "எம்.பி.ஏ'' முடித்தவர். அபிராமி தியேட்டரின் `மால்' இவரது கற்பனையில் உதித்ததுதான்.

பிள்ளைகள் ஒரு மகனும், மகளும். மகன் சிவலிங்கம் "பி.பி.ஏ'' முடித்தவர். இவர் மனைவி ஜமுனா. ராமநாதனின் மகள் பெயர் மீனாட்சி. இவர் கணவர் பெரியகருப்பன்.

தனது சொந்த ஊரை தத்து எடுத்துள்ள அபிராமி ராமநாதன், அந்த ஊரை கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முன்னேறச் செய்து கிராம மக்களின் நலனுக்கு உழைக்கிறார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024