Sunday, January 25, 2015

5 ரூபாய்க்கு சென்னை சிறுவன் விற்பனை? விசாரணையை துவங்கியது மத்திய அரசு

Dinamalar 25.01.2015

சென்னை: 'க்விக்கர்.காம்' இணைய தளத்தில், 'சென்னை சிறுவன் விற்பனைக்கு...' என, விளம்பரம் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விளம்பரத்தை வெளியிட அனுமதித்த, இணையதள நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

விளம்பரம்:

'சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, ராகுல் என்ற சிறுவன், 5 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளான். தொடர்புக்கு - ஹமீதியா காம்பளக்ஸ், திருவல்லிக்கேணி' என்ற வாசகங்கள் இடம் பெற்ற விளம்பரம், கடந்த டிசம்பரில், 'க்விக்கர்.காம்' இணையதளத்தில் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த, தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு கண்காணிப்பகம், தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்தது. 'இப்புகார் மீது, விசாரணை நடத்த வேண்டும்; விசாரணை அறிக்கையை, 10 நாட்களுக்குள் தர வேண்டும்' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையை, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், ஜன., 14ம் தேதி கேட்டுக் கொண்டது. உடனே மத்திய அரசு, 'க்விக்கர்.காம்' இணையதள நிர்வாகத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளதோடு, விளம்பரம் கொடுத்தவரை பிடிக்கும்படி, தமிழக போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, 'க்விக்கர்.காம்' இணையதள நிர்வாகத்தைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாதவர் கூறுகையில், 'தினமும் பல ஆயிரம் பேர், நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து, 'க்விக்கர்.காம்' இணையதளத்தில் விளம்பரம் செய்கின்றனர். இந்த விளம்பரங்களை, சரிபார்க்க போதிய ஆட்கள் இல்லை. விளம்பரம் செய்தவரின் விவரமும் இல்லை' என்றார்.

இணையதளத்தின் இந்த பதிலை, குழந்தை உரிமை ஆர்வலர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

முகவரி:

ஊடகங்களில் விளம்பரம் செய்வோர், தங்கள் முகவரியை அளிக்க வேண்டும். எப்படிப்பட்ட விளம்பரங்களை வெளியிடலாம் என்ற, கட்டுப்பாடும், ஊடகங்களுக்கு உண்டு. இணையத்தில், ஒரு தகவலை வெளியிடுகிறோம் என்றால், அதை யார், எங்கிருந்து, எந்த உபகரணம் மூலம் வெளியிட்டார் என்பதை கண்டறிய முடியும். 'க்விக்கர்.காம்' இணையதளத்தில், சிறுவன் விற்பனைக்கு என்ற, விளம்பரத்தை வெளியிட்டவர் பற்றிய, விவரத்தை சேகரிப்பது கடினமான ஒன்று அல்ல. எனவே சம்பந்தப்பட்டவரை, பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'க்விக்கர்.காம்' செய்வது என்ன?

பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் தளமாக, 'க்விக்கர்.காம்' இணையம் உள்ளது. இதில், உறுப்பினராக சேர்ந்த பின், தாங்கள் விரும்பும் பொருட்களை, விற்பனை செய்ய, விளம்பரங்கள் செய்யலாம். விளம்பரம் செய்யும் பொருளின் புகைப்படம், அதன் பயன்பாடு, விலை ஆகியவற்றை பொருளின் சொந்தக்காரரே முடிவு செய்யலாம். இதன் மூலம், பயன்படுத்திய பொருட்களை, விற்பனை செய்வது எளிது என, 'க்விக்கர்.காம்' இணையதளமும், விளம்பரம் செய்து வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024