கூகுளுக்குப் போட்டியாக புதிய சர்ச் என்ஜின் ஒன்று வந்துள்ளது. இந்த புதிய சர்ச் என்ஜினை பின்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது உள்ள அனைத்து சர்ச் என்ஜின்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் இந்த புதிய சர்ச் என்ஜின் அமைந்துள்ளது என்பதால் கூகுளுக்கு இது கடும் போட்டியாக அமையும் என்கிறார்கள்.
தற்போது உள்ள சர்ச் என்ஜின்களை விட இது துல்லியமாக ரிசல்ட்டுகளைக் கொடுக்கிறதாம். ஹெல்சிங்கி தகவல் தொழில்நுட்ப கழகம் இந்த சர்ச் என்ஜினை உருவாக்கியுள்ளது. இதன் பெயர் SciNet என்பதாகும். இந்த சைநெட் தற்போதுள்ள சர்ச் என்ஜின்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. நாம் தேடும் விவரம் தொடர்பான கீவேர்டுகளையும் இதுவே எடுத்துக் கொடுக்கிறது என்பது இதன் விசேஷமாகும்.
எனவே தாங்கள் தேடும் விவரத்தை மிகப் பொருத்தமாக, சரியான முறையில், விதம் விதமான முறையில் தேடித் தேர்ந்தெடுக்க பயன்பாட்டாளருக்கு இது உதவி செய்கிறது. எப்படித் தேடுவது என்று தெரியாமலேயே தேடுவோருக்கும் கூட, இதைத்தானே தம்பி தேடுகிறாய் என்று எடுத்துக் கொடுப்பதால் இது மேலும் துல்லியமாகவும் இருக்கிறது. சிலருக்கு எந்த வார்த்தையைப் போட்டுத் தேடுவது என்று சரியாக தெரியாது. அந்த வார்த்தையை சரியாக போடத் தெரியாது.
அப்படிப்பட்டவர்களுக்கு இதுவே தேடவும் உதவுகிறது என்பது மிக முக்கியமானது. இதுகுறித்து இந்தத் திட்ட ஒருங்கிணைப்பாளர் துக்கா ருவோட்சோலோ கூறுகையில், இந்தப் பிரச்சினையெல்லாம் இப்போது கிடையாது. அனைத்துக்கும் சரியான தீர்வாக இது அமைந்துள்ளது. தாங்கள் தேடும் தகவல்களை துல்லியமான முறையில் தேடுவோர் இனி பெற முடியும் என்றார்.
இப்பச் சொல்லுங்கு, கூகுளுக்கு நேரம் சரியில்லைதானே!.. இருந்தாலும் கூகுள் ரொம்பப் பெருந்தன்மையான சர்ச் என்ஜின்தான்.. இந்த Scinet சர்ச் என்ஜின் குறித்த தகவல்களை கூகுளில் தேடினால் உடனே வந்து கொட்டி விட்டது!
No comments:
Post a Comment