கசகசா... நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.
சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இப்படி தண்டனைக் கொடுக்கும் அளவுக்கு, என்னதான் கசகசாவில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.
இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.
காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.
மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதைபொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆறுச்சாமி
No comments:
Post a Comment