Saturday, January 31, 2015

குடித்து ரோட்டில் கிடந்த மாணவனுக்கு உடனடி தேவை என்ன?


ரூர் பேருந்து நிலையம் அருகே மது குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவனை பள்ளியை விட்டே நீக்கி விட்டார்களாம். இது அந்த மாணவனை இன்னும் சீழ்படுத்தும் வேலைதான்.
திக்கெங்கும் மதுக்கடைகள், திரைப்படம் உள்ளிட்ட பலவற்றிலும் குடி ஒரு கொண்டாட்ட விஷயமாக காட்டப்பட்டு வரும் சூழலே இருக்கிறது. இதில் அந்த மாணவனை மட்டும் குற்றவாளியாக்கி, தண்டனை கொடுப்பதால் எதுவும் சரியாகி விடாது. மது ஒழிப்பு, திரைப்பட சீர்த்திருத்தம் எனப் பேசி உடனடி தீர்வு ஏதுமில்லை.

 இப்போதைக்கு அந்த மாணவனுக்கு தேவைப்படுவது மது குறித்த அன்பான கவுன்சிலிங். மதுவை விட்டு அவனாக விலகும் விதத்திலான நடவடிக்கைகளே. எது ஒன்றை காரணப்படுத்தியும் ஒருவருக்கு கல்வி மறுக்கப்படுவதை ஏற்கவே முடியாது. கல்வி மறுக்கப்பட்டு அவர் சிறு தொழில்களில் குற்றவுணர்ச்சியோடு ஈடுபடும்போது வருங்காலத்தில் குணப்படுத்த முடியாத குடி நோயாளியாவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பாலியல் கல்வி கேட்பதை விட, மது குறித்த பாடங்களை வையுங்கள் என்கிற யோசனை முளைக்கத் தொடங்கிவிடும். பாடங்களாக ஒரு மாணவருக்கு உள்ளே நுழைவதை விடவும் கலையாக உள்ளிறங்குவதில்தான் அவர் தன்னுடைய விருப்பங்களை மாற்றியமைத்து கொள்ள முடிவெடுக்கிறார்.

குடிப்பது ஒழுக்கம் சார்ந்த விஷயமா, பழக்கம் சார்ந்த விஷயமா... மது தேவை, தேவை இல்லை என்று அணி பிரித்து விவாதம் பண்ணுவதைக் காட்டிலும் முக்கியமான ஒன்று உள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் குடிக்கு அடிமையாகியிருப்பதை பல்வேறு செய்திகள் உணர்த்துகின்றன. இது முளை விடும்போதே சரியான தீர்வை எடுக்க வேண்டியது அரசும் சமுக அக்கறையுடையவர்களின் செய்ய வேண்டியதாகும்.

-வி.எஸ்.சரவணன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024