சென்னையை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டு முடிந்திருக்கிறது சென்னைப் புத்தகக் காட்சி. 11,00,000 + வாசகர்கள், 30,00,000 + புத்தகங்கள், ரூ.15,00,00,000 + விற்பனை என இந்தப் புத்தகக் காட்சி வெளிப்படுத்தும் எண்கள் ஒவ்வொன்றும் ஒளியூட்டுகின்றன.
சென்னைப் புத்தகக் காட்சியின் பிரம்மாண்டமும் வெற்றியும் தமிழகத்தின் கவுரவமாக மட்டும் அல்ல; இந்தியாவின் மாபெரும் அறிவுலகக் கொண்டாட்ட நிகழ்வாகவும் இன்றைக்கு உருவெடுத் திருக்கிறது. ஆனால், அதன் முக்கியத்துவத்தை நாம் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம்?
ஏறத்தாழ 10 லட்சம் மக்கள் கூடுகிற ஓர் இடத்துக்கும் நிகழ்வுக்கும் அரசு எவ்வளவு கவனம் தர வேண்டும்? புத்தகக் காட்சிக்குச் சென்றால், ஏமாற்றமும் வருத்தமுமே எஞ்சுகிறது. புத்தகக் காட்சியில் மக்கள் சாதாரணக் கழிப்பறை வசதிக்கு எவ்வளவு அல்லல்படுகிறார்கள்? பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு மோசம்?
இப்படி இந்தப் புத்தகக் காட்சியின் போதாமைகள் எதை நோக்கிச் சென்றாலும், நாம் புத்தகக் காட்சி அமைப்பாளர்களை நொந்துகொள்ள நியாயம் இல்லாமலே போகிறது. எல்லாவற்றுக்குமான அடிப்படைக் காரணம், ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்துவதற்கென்று ஒரு நிரந்தர இடம் ஒதுக்கப்படாதது.
ஒரு சமூகத்தின் ஆரோக்கிய அறிவு வளர்ச்சிக்கான அடையாளங்கள் புத்தகங்கள். புத்தகமும் வாசிப்பும் ஒரு சமூகத்தின் கூட்டுச் செயல்பாடுகள். சென்னை போன்ற ஒரு மாநகரில், இப்படி ஒரு அறிவார்த்தச் செயல்பாட்டுக்கு நிரந்தர இடம் ஒதுக்க முடியவில்லை என்பது உண்மையில் ஒரு சமூக அவமானம்.
பொருட்காட்சிகளில் தொடங்கி பட்டாசுக் கண்காட்சிகள் வரை நடத்துவதற்கு இந்த நகரில் நிரந்தர இடம் கிடைக்கிறது; புத்தகங்களுக்கு இடம் இல்லையா? ஏன் நம்மால், புத்தகக் காட்சிக்கென ஒரு நிரந்தர இடத்தை ஒதுக்க முடியவில்லை?
உண்மையில், புத்தகங்களுக்கு நாம் கொடுக்கும் மதிப்புக்கான குறியீடு இது. எழுத்தாளர் பெருமாள்முருகன் விவகாரம் சர்வதேச அளவில் ஏன் பேசப்படுகிறது? இங்கே அது எப்படி உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் அணுகப்படுகிறது? இதுவும் ஒரு குறியீடுதான்.
“நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கும் முறைமை ஊழல் மயமாகியிருக்கிறது; தரகுத் தொகையைக் கொண்டுதான் அதிகாரிகள் பெரும்பாலான நூல்களைத் தீர்மானிக்கிறார்கள்” என்று புலம்புகிறார்களே சில பதிப்பாளர்கள், அதுவும் ஒரு குறியீடுதான். ஆனால், இந்தக் குறியீடுகள் எதுவுமே நல்ல அறிகுறிகள் அல்ல. புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் மதிக்கும் ஒரு சமூகமே வளர்ச்சியின் படிநிலையில் மேலே இருக்கும். புத்தகங்களுக்கும் எழுத்தாளருக்கும் இசைவான ஒரு சூழலை அரசு உருவாக்கித் தருவது அவசியம்.
அரசுதான் இதைச் செய்ய முடியும் என்பதை உரியவர்கள் உணர்ந்தாலே பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும்!
No comments:
Post a Comment