Friday, January 30, 2015

பிரசவத்துக்கு போராடிய பசு... உதவிய என்ஜினீயரின் மனித நேயம்!

சென்னை: சென்னை நங்கநல்லூரில் நடுரோட்டில் மாட்டுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதில் உயிருக்குப் போராடிய மாட்டுக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மாட்டையும், கன்றுக் குட்டியையும் டாக்டர்கள் காப்பாற்றினர்.

 நங்கநல்லூரில்  கடந்த 29ஆம் தேதி இரவு 9 மணி... போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.  ம்மா.... யம்மா... .. என்றொரு அபயகுரல் மட்டும் நான்காவது மெயின் தெருவிலிருந்து வந்த வண்ணம் இருந்தது. இதை யாரும் கண்டுகொள்ளாமல் மக்கள் தங்களது வீடுகளுக்கு அவசரமாக சென்று கொண்டு இருந்தனர். நடுரோட்டில் மாடு ஒன்று, கன்றுவை ஈன்றெடுக்க முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. அந்த மாட்டின் அபயக்குரல்தான் அது. மனிதருக்கே உதவி செய்ய முன்வராதவர்கள் எப்படி இந்த மாட்டுக்கு உதவப் போகிறார்கள்? 

ஒருக்கட்டத்தில் அந்த மாடு, பெண் கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஆனால், நிலைமை பரிதாபம். கன்றுக்குட்டியுடன் தாய் மாட்டின் கர்ப்பபை, குடல் என உடலில் சில பாகங்கள் வெளியில் சரிந்திருந்தது. இதனால் தாய் மாடு உயிருக்குப் போராடியது. இதை அவ்வழியாக சென்ற ஐ.டி.துறையில் பணியாற்றும் செல்வம் என்ற இன்ஜினியர் பார்க்கிறார். படபடத்துப் போன அவர், முதலில் மாட்டை யாரோ வாகனத்தில் சென்றவர்கள் மோதி விட்டு சென்று விட்டார்கள் என்றே நினைத்துள்ளார்.

 பிறகு மாட்டின் அருகே சென்ற பிறகே அவருக்கு அங்குள்ள விபரீதம் தெரியவந்துள்ளது. உடனடியாக அவர், 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்புக்கு தகவல் கொடுக்க..... அதன் பொது மேலாளர் தினேஷ் சம்பவ இடத்தில் ஆஜராகினார். கால்நடை மருத்துவர் திரு மற்றும் இன்னொரு மருத்துவர் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். முதலில் மாட்டின் வயிற்றுக்குள் இருந்து வெளியேறிய பாகங்களை சுத்தப்படுத்தினர். பிறகு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அந்தந்த இடத்தில் பொருத்தினார்கள். இதற்கு மூன்று மணி நேரமானது. இதன்பிறகு மாட்டையும், கன்றுக்குட்டியையும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து தினேஷ் கூறுகையில், "இதுவரை இப்படியொரு சம்பவத்தை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. மருத்துவருக்கு உதவியாளராக இருந்து அனைத்தையும் செய்தேன். அந்த தாய் மாடு பிரசவிக்கும் போது அதனுடைய கர்ப்பபை மற்றும் உடலில் உள்ள சில பாகங்கள் வெளியே வந்துவிட்டன. அவற்றை அந்த இடத்திலேயே உப்புத் தண்ணீரால் சுத்தம் செய்து அதே இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் வைக்கப்பட்டது. இந்த மாடு அரசின் இலவச மாடாகும்.
அந்த மாட்டின் உரிமையாளர் ஏழை விவசாயி கோவிந்தராஜன். அவரும் இந்த மாட்டை கவனிக்காமல் சாலையில் திரியும்படி விட்டுள்ளார். அந்த மாட்டின் பெயர் பொம்மி. இப்போது அந்த மாடு பெண் கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. மாட்டையும், கன்றுக்குட்டியையும் உரிய நேரத்தில் காப்பாற்ற உதவிய இன்ஜினியர் செல்வத்தின் பெயரையே அந்த கன்றுக்குட்டிக்கு சூட்டியுள்ளோம். இப்போது தாயும், கன்றுக்குட்டியும் நன்றாக இருக்கின்றன"என்றார்.

மனிதானாக இருந்தாலும்.. கால்நடைகளாக இருந்தாலும் அது உயிர் என்று ஒவ்வொருவரும் கருத வேண்டும்!

-எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024