Saturday, January 31, 2015

ஜனவரி.31 - நாகேஷ் நினைவு தினம் - 25 நினைவுகள்..



நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!



* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!

- மானா பாஸ்கரன்

(ஆனந்த விகடன் 07-07-2010)

No comments:

Post a Comment

College of Pharmacy at MMC in Chennai staring at losing approval due to lack of qualified teachers

College of Pharmacy at MMC in Chennai staring at losing approval due to lack of qualified teachers Peethaambaran Kunnathoor, Chennai Thursda...