Monday, January 19, 2015

திறன் அறிந்து சொல்லுக.......By மா. ஆறுமுககண்ணன்

Dinamani

ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சுக்கலையும் ஒன்று. மற்றக் கலைகளைக் கற்றுக்கொள்கிறோமோ இல்லையோ இந்தக் கலையைக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை வசப்பபடும்.

யாரிடம் எதைப் பேசுவது, எந்தச் சூழலில் எப்படிப் பேசுவது போன்றவை தெரிந்து பேசினாலன்றி பிழைக்க முடியாது என்ற நிலையில் பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற பழமொழி.

மண்ணுக்குள் வைரம்போல எத்தனை திறமைகள் நமக்குள் மறைந்துகிடந்தாலும், அவற்றை சந்தர்ப்பம் பார்த்து பிறருக்குத் தெரியப்படுத்த பேச்சு முக்கியம். நம்மைப் பற்றி நாமே பேசாவிடில் வேறுயார்தான் பேசப் போகிறார்கள்?

நம்மைப் பற்றி நாமே பேசுவதை சிலர் சுய தம்பட்டம் என்று கூறுவார்கள். சரி, நம்மைப் பற்றியே பேசினால் சுய தம்பட்டம் என்கிறார்களே என அதைக் கைவிட்டு, பிறரைப் பற்றிப் பேசினால் புறணி பேசுகிறான் என்பார்கள். அதனால், பேசாதிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தால், அதனை ஆணவம் என்பார்கள்.

பேசிக்கொண்டேயிருந்தால் வாயாடி; அடுத்தவர் பேசும்வரை காத்திருக்காமல் முந்திக்கொண்டு பேசினால் முந்திரிக் கொட்டை; பேசுபவரின் பேச்சை அலசி ஆராய்ந்தால், எதிர்த்துப் பேசுபவன், பேச்சை ஆமோதித்தே பேசிக் கொண்டிருந்தால் ஜால்ரா.

ஆக, ஒருவரது நாக்கை வைத்து மற்றவர்கள் நாக்கு பலவிதமாகப் பேசுகிறது என்பதே உண்மை.

"பேசாத பேச்சுக்கு நீ எஜமான், பேசிய பேச்சு உனக்கு எஜமான்' என்பது பொன்மொழி. கடுகு சிந்தினால்கூட அள்ளிவிடலாம். காற்றில் விதைத்த பேச்சுகளை அள்ளுவது இயலாத காரியம்.

பேச்சுக்கு உருவமில்லை. ஆனால் ஆறடி உருவ மனிதனையும் அது நிலைகுலையச் செய்துவிடுகிறது. மென்மையான இதயத்தில் காயமேற்படுத்தவும் காயம்பட்ட இதயத்தை மயிலிறகாய் வருடிவிடவும் பேச்சுக்குத் தெரியும்.

பேச்சு - மருந்தா, விருந்தா என்பது அது பேசப்படும் விஷயத்தைப் பொறுத்தது.

பேசிப்பேசியே ஏற்படும் பிரச்னைகளுக்குப் பேசிப்பேசியே தீர்வும் காணலாம். இது விநோதமான முரண்தான்!

சிலருக்குப் பேசுவதற்கு ஏதேனுமொரு தலைப்பு கொடுத்தால் மிக அருமையாகப் பேசுவார்கள்.

பலருக்குத் தலைப்பே தேவையில்லை. பல மணி நேரம் கடந்தும் பேச்சுப் பாதையில் பயணம் செய்துகொண்டிருப்பார்கள். கேட்போருக்குத்தான், காதுகளுக்கு இயற்கை கதவைப் படைக்காமல் விட்டதே என நொந்துகொள்ளத்தோன்றும்.

பேச்சுப் பற்றிப் பேசும்போது, "நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்' என்ற பழமொழியும் நினைவுக்கு வரும். தளும்பாத குடம் நிறைகுடமாக மட்டுமல்ல, வெறுங்குடமாகவும் இருக்கலாம்!

பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் நமது தலைவர்கள். மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

நூறு நாளிலோ, ஆறு மாதங்களிலோ மாயாஜாலம் நிகழும் எனப் பேசி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். ஆனால், அதன்பிறகும் பேசுகிறார்கள், தாங்கள் பேசியதை ஏன் செய்துமுடிக்க முடியவில்லை என்பதுகுறித்து.

இதனால் அவர்களைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசத் தொடங்கிவிடுகின்றனர்.

"மேடை ஏறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு; கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு' என்றார் கண்ணதாசன்.

சிலருக்கு எதிர்க்கட்சி வரிசையிலிருந்தால் ஒரு பேச்சு, அரியணை ஏறிவிட்டால் மற்றொரு பேச்சு.

இப்படி ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறிமாறி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள் ஐந்தாண்டு முடிவில் பேசாமல் செயலில் காட்டிவிடுகின்றனர்.

பல பிரச்னைக்கு ஓயாத பேச்சுகள் காரணமாக இருப்பதைப்போல பேசாதிருப்பதும் பல நேரங்களில் பல பிரச்னைகளுக்கு காரணமாகிவிடும். வாய்ப்பு கிடைத்தும் வாய் திறவாதிருப்பதும் தவறுதானே!

காதலிக்கும்போது மணிக் கணக்கில் செல்போனிலும் நேரிலும் பேசிப்பேசியே பொழுதைக் கழிப்போரில் சிலர், திருமணத்துக்குப் பிறகு வார்த்தைகள் அனைத்தும் வற்றிப்போன மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.

அதனால் "என்ன பேச?" என்றோ, "என்னத்தைப் பேசி என்ன ஆகப் போகிறது' என்றோ ஏகாந்த நிலைக்கு உள்ளாகி விடுகின்றனர்.

பலர், "பேசியதால் வந்த வினைப்பயனை அனுபவித்தவர்கள்போல, "பேசாதிருப்பதே நன்று' என்ற மெளன நிலையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். சில நேரங்களில் அவர்களையும் மீறி பேசத் தொடங்கினால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்ப விவகாரம் மற்றவர்களுக்குப் பேச்சுப்பொருளாகி விடுகிறது.

தங்களுடைய குழந்தை ஒரு வயது தாண்டியும் பேசாதிருந்தால் அதைப் பற்றிப் பேசியே பல்வேறு மருத்துவர்களை மன வருத்தத்துடன் தேடி அலையும் பெற்றோர், அதே குழந்தை சற்று வளர்ந்து அதிகம் பேசத் தொடங்கிவிட்டால் உடனே வாயை மூடு என திருவாய் மலர்வதைப் பார்க்கலாம்.

தனியார் தொலைக்காட்சிகளிலும் இரவு, பகல், அதிகாலை, அந்திப்பொழுது என காலநேரம் எதுவும் பார்க்காமல் சலிப்பேயில்லாமல் பேசுகின்றனர்.

அதிலும், நான்கு பேரோ, மூன்று பேரோ சேர்ந்து பேசும் "நேரலை' நிகழ்ச்சிகள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் உண்டு.

இப்படி பல "நேரலை' பார்த்தும் நமக்கு ஒன்றும் "நேரலை' (நேரவில்லை) என்பது ஆச்சரியம்தான்! பேசிக்கொண்டேயிருக்கும் அஃறிணை தொலைக்காட்சிகள். அதன் முன் மெளனமாகவே அமர்ந்திருக்கும் உயர்திணை மக்கள்!

யாருக்கும் பயனற்ற நுனிக்கரும்பு பேச்சைவிட, அனைவரையும் நல்வழிப்படுத்தும் அடிக்கரும்பு பேச்சே எப்போதும் ஏற்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024