ஒரு மனிதன் வாழும் காலம், குழந்தைப் பருவம், விடலைப் பருவம், இளமைப் பருவம், பொருள் ஈட்டும் பருவம், முதுமைப் பருவம் என பல பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றே நினைக்கிறான். பிற பருவங்கள் எப்படி இருந்தாலும், முதுமைப் பருவம் அவனை மிகவும் வாட்டுகிறது.
மிடுக்குடன் வாழ்ந்த மனிதர் கூட, முதுமையை எட்டி விட்டால், துச்சமாக மதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அவர், பேரனுக்கு மிட்டாய் வாங்கும் பணிக்கு வீட்டில் உள்ளோரால் ஏவப்படுகிறார். குழந்தைகளால்கூட மதிக்கப்படாத நிலைக்கு முதியவர்களின் நிலை உள்ளது.
ஒரு காலத்தில் தான் வைத்ததுதான் சட்டம் என்று வாழ்ந்தவர்களின் நிலை முதுமையில் பரிதாபமாகத்தான் உள்ளது.
அந்தக் காலத்தில், முதியவர்கள் கடவுளுக்குச் சமமாக மதிக்கப்பட்டனர். இன்று அவர்களே செல்லாக் காசாக மதிக்கப்படுகின்றனர். கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்பவராக இருந்தால், குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு விடும் வேலையாளாகவும், மின் கட்டணம் செலுத்தவும், நியாய விலைக் கடைக்குச் சென்று வரும் ஒரு பணியாளர் நிலைக்கும் முதுமை அடைந்தவர்கள் தள்ளப்படுகின்றனர்.
இந்த வேலைகளை முதியவர்களே விரும்பிச் செய்தால் மகிழ்ச்சிதான். அதையே விருப்பமின்றிச் செய்தால்?
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்ததால், எந்தப் பிரச்னையும் கிடையாது. வீட்டின் மூத்த உறுப்பினர் தலைவராக இருப்பார். அவர் சொல்வதுதான் அந்த வீட்டில் நடக்கும். வரவு - செலவு கணக்கெல்லாம் அவர்தான் பார்ப்பார். ஆனால், இன்று மருந்து, மாத்திரை வாங்குவதற்கு மகனையோ, மருமகளையோ நம்பி இருக்க வேண்டிய நிலை.
கூட்டுக் குடும்பமாக இருந்தால், பேரன், பேத்திகளோடு கொஞ்சி மகிழும் வாய்ப்பு கிடைக்கும். இன்று எத்தனை பேருக்கு அத்தகைய கொடுப்பினை உள்ளது?
ஒரு தம்பதிக்கு இரு மகன்கள் இருந்தால், தாய் ஒரு மகன் வீட்டிலும், தந்தை மற்றொரு மகன் வீட்டிலும் இருக்கும் நிலையையும் காண முடிகிறது. கூட்டுக் குடும்பமாக உள்ளோர் பற்றிய தகவலை இன்று நாளிதழ்களில் செய்தியாகவும், புகைப்படமாகவுமே காண முடிகிறது. முதியவர்கள் புறக்கணிப்பு குறித்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.
"பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்பார்கள். தன்னிடமிருந்த சொத்து, சுகத்தையெல்லாம் அன்பு மகனுக்கும், ஆசை மகளுக்கும் எழுதிக் கொடுத்துவிட்டு, வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் வறுமையிலும் தனிமையிலும் வாடுவோர் பலர்.
இன்று அத்தகைய நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. "தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்' என்பதுபோல, தாங்கள் வாழும் காலத்துக்குப் பின்னரே, தங்களது சொத்துகள் வாரிசுகளுக்குச் சொந்தமாகும் என்று உயில் எழுதி வைத்து விடுகின்றனர்.
மேலும், முதுமைப் பருவம் வந்துவிட்டாலே நோய்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வாட்டி வதைக்கும். அரவணைப்பு தேவைப்படும் சமயத்தில், அவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படலாமா?
இன்று முதியவர்களை அரவணைப்பதற்கு முதியோர் இல்லங்கள் உள்ளன. இவை இளைஞர் தங்கும் விடுதிகள், மகளிர் தங்கும் விடுதிகள் போல பல்கிப் பெருகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள ஒரு வளமையான மாவட்டம், மூத்த குடிமக்களின் கேந்திரமாக விளங்கி வருகிறது. முதியோருக்கென தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் புறநகர்ப் பகுதியில் புற்றீசல் போலப் பெருகி வருகின்றன. அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தித் தரப்படுகின்றன. பண வசதி இருந்தால், இங்கு தங்கலாம்.
ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்கின்றனர்.
முதியோரின் புறத் தேவைகளை இந்த இல்லங்கள் நிறைவேற்றித் தரலாம். ஆனால், அவர்களின் அகத் தேவையை நிறைவு செய்ய முடியுமா? என் மகன், என் மருமகள், என் பேரன், என் பேத்தி என்று சொல்ல அருகில் யாராவது இருப்பார்களா?
இத்தகைய தனிமை அவர்களை கொல்லாமல், கொல்லும். மேலும், வசதி படைத்தவர்களால் மட்டுமே இந்த இல்லங்களை நாட முடியும். மற்றவர்களின் நிலை?
மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள பிரமிக்கத்தக்க வளர்ச்சி மனிதர்களின் வாழ்நாளை அதிகரித்திருக்கிறது. ஆனால், மனிதர்கள் தற்போது புதிய புதிய நோய்களுக்கு ஆளாகின்றனர். நோயுடன் இறுதிக் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
முதியவர்களை அவர்களது வாரிசுகள் பாதுகாக்க வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மனுநீதி நாள் முகாம்களில் தனது மகன் தன்னைக் கைவிட்டுவிட்டதாக முதியோர் அளிக்கும் மனுக்களே அதிகம் உள்ளன.
இதற்கு என்ன தீர்வு? சட்டத்தால் இப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா? சட்டத்தால் எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்?
இன்றைய இளைஞன், நாளைய முதியவன். எனவே, இளைஞர்களே! முதியவர்களைப் புறக்கணிக்காதீர். அவர்களை அரவணைத்துச் செல்லுங்கள். அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்களது அனுபவ அறிவு உங்களுக்குப் பயன்படும். பண்டிகை தினங்களில் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். அந்தச் சமயத்தில் அவர்களின் முகத்தில் தோன்றும் ஒளிக்கு ஈடாக எதையும் நம்மால் தர முடியாது.
"நம்பிக்கை இனிமையானது; நம்பிக்கை வாழ்வில் ஒளியேற்றும்; நம்பிக்கை நிறைவைத் தரும்; நம்பிக்கை என்றும் அழியாதது. எனவே, முதுமைப் பருவத்திலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்' என்றார் ஓர் ஆங்கில அறிஞர். இது முதியோருக்கு அந்த அறிஞர் சொன்னஅறிவுரை. நாமும் நமது செயல்கள் மூலம் முதியோருக்கு நம்பிக்கை கொடுப்போம்!
No comments:
Post a Comment