Thursday, January 22, 2015

பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த புதிய வசதி: 'டிடி' எடுக்க வேண்டாம்

சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்யும் போது, அதற்கான கட்டணங்களை வங்கி வரைவோலைக்கு 'டிடி' பதிலாக, ஆன் - லைன் முறையில், வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, புதிய வசதி துவங்கப்பட்டு உள்ளது.

பல்வேறு பிரச்னைகள்:

தமிழகத்தில், சொத்து பரிமாற்றத்துக்கான ஆவண பதிவின் போது, அதன் சந்தை மதிப்பில், 7 சதவீதம் முத்திரைத்தீர்வை; 1 சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இதேபோன்று, பாகப்பிரிவினை, உயில், பொது அதிகார ஆவணம், கொடை ஆவணம், தான பத்திரம், ஒப்பந்தம் போன்ற ஆவணங்களை பதிவு செய்யவும் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில், ரொக்க பயன்பாடு அதிகமாக இருப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, முத்திரைத்தீர்வை தொகையை வங்கிகள் வாயிலாக செலுத்த, 'இ - ஸ்டாம்பிங்' வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, பதிவு கட்டணத்தை வங்கி வரைவோலையாக 'டிடி' பெறும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. சொத்துகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், பதிவு கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையும் அதிகமாகிறது. இதனால், பெரிய தொகைக்கு வங்கி வரைவோலை எடுக்கும் போது, அதற்கான கமிஷன் தொகையும் அதிகரிக்கிறது. இதையடுத்து, பதிவு கட்டணங்களை, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, 'நெட் பேங்கிங்' சேவையை பயன்படுத்தி, ஆன் - லைன் முறையில் பதிவுத் துறை கணக்கில் செலுத்த, புதிய வசதி துவங்கப்பட்டு உள்ளது.

கூடுதல் செலவின்றி...:

முதற்கட்டமாக, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றில், இதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், இச்சேவையை பயன்படுத்தி, பதிவு கட்டணத்தை எளிதாக, எவ்வித கூடுதல் செலவும் இன்றி செலுத்தலாம் என்கின்றனர், பதிவுத் துறை அதிகாரிகள்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024