1000 படங்கள்: இசைஞானியை புகழ்ந்த ரஜினி, கமல், அமிதாப்!
அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக தொடர்ந்து இசைத் துறையில் யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்து வருகிறார்.
5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில அரசு விருதுகள், பத்ம பூஷன் விருது என பல பெருமைகளைப் பெற்றுள்ளவர் ’மேஸ்ட்ரோ’ இளையராஜா.
பாலா இயக்கும் ’தாரை தப்பட்டை’ படம் இளையராஜாவின் 1000வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை. அதுவும் இளையராஜா இசையமைத்த 1000 க்கும் மேற்பட்ட படங்களில் 80 சதவீதம் பெரும் வெற்றி பெற்றவை. 4000 பாடல்களுக்கு மேல் சூப்பர் ஹிட் ரகத்தைச் சேர்ந்தவை. இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் நேற்று பாராட்டு விழா எடுத்தது.
இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, நடிகர் அமிதாப் பச்சனே முன் நின்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். அவரது அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி என இந்தியாவின் மிக உன்னத கலைஞர்கள்.. சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையைக் கவுரவித்து மகிழ்ந்தனர். இவ்விழாவில்
அமிதாப் பேசியபோது: "அவர் ஒரு ஜீனியஸ். என்னை பல வழிகளில் திருத்தியுள்ளார். எனக்கு அந்த வாய்பளித்ததற்கு நன்றி. அவருடைய பெயர் பல படங்களின் வியாபாரத்துக்கு உதவியிருக்கிறது. இசையுலகில் அவரது பெயர் கடவுளோடு ஒப்பிடப்படுகிறது" என்றார்.
கமல் பேசியபோது: "இளையராஜா எனது வாழ்வில் ஒரு பங்காக மாறிவிட்டார். இன்று எனக்கு அவரை கட்டியணைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொஞ்சம் கூச்சப்படுகிறார். 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் 786 வது படம் என்னுடையது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ரஜினி பேசியபோது : "எனக்கு ராஜாவை 70களிலிருந்து தெரியும். அப்போதெல்லாம் அவர் மிகவும் குறும்பாக, நடந்துகொள்வார். நிறைய கிசுகிசுக்கள், பேசிகொண்டே விடிய விடிய மது அருந்துவோம். திடீரென அவரிடம் மாற்றங்கள், அவருடைய நடை , உடை என மாற்றங்கள் உண்டாகின. கலைவாணியே அவரிடம் குடிவந்துவிட்டாள் போல, அன்று முதல் நான் ராஜாவை ராஜா சாமி என்றுதான் அழைக்கிறேன்" என கூறினார்.
விழாவில் கலந்துகொண்டு கவுரவித்த ரஜினி, அமிதாப், கமல், ஸ்ரீதேவி உள்ளிட்டோருக்கு இளையராஜா தனது நன்றிகளை தெரிவித்துகொண்டார்.
)
|
No comments:
Post a Comment