அண்ணனை போல் தம்பி உடலும் தானாக பற்றி எரியும் தீ: மீண்டும் திகிலில் நெடிமொழியனுர் கிராமம்!
Posted Date : 11:01 (17/01/2015)Last updated : 12:00 (17/01/2015)
விழுப்புரம்: அண்ணனை தொடந்து தம்பியின் உடலும் தானாக தீப்பற்றி எரியும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடிமொழியனுர் கிராமம் மீண்டும் திகிலில் உறைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நெடிமொழியனுர் கிராமத்தை சேர்ந்த கர்ணன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு மூன்று குழந்தைகள். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்களில் இரண்டாம் மகன் ராகுலில் உடலில் நான்கு முறை தானாக தீப்பற்றி எரிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையின் உடலில் தானாக தீப்பிடிப்பதற்கு அமானுஷ்ய சக்தி தான் காரணம் என்று புரளி கிளம்பியதால் கிராம மக்கள் திகிலில் வாழ்ந்து வந்தனர்.
இதை தொடர்ந்து, ராகுல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான். ராகுலை பரிசோதித்த மருத்துவகுழு, 'ஸ்பான்டேனியல் ஹியுனம் கம்பஷன்' என்ற அதிசய நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கலாம், அதனால் தான் குழந்தையின் உடல் தானாக எரிகிறது என்றனர். இந்த நோய் கடந்த 300 வருடங்களில் 200 பேருக்கு தான் வந்துள்ளது எனவும், இந்தியாவிலே இந்த குழந்தைதான் முதன்முதலில் இந்த அதிசய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
ஆனால் ஒருமாத முழு பரிசோதனைக்கு பின், ராகுலுக்கு எந்த நோயும் இல்லை. அதனால், குழந்தை தானாக தீப்பற்றி எரிவதற்கான காரணத்தை காவல்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று கடைசியில் மருத்துவகுழு கைவிரித்தனர். இதனால், தீப்பிடிப்பதற்கான மர்மம் விலகாமலே ராகுலில் குடும்பம் சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தது. அதன்பிறகு, கடந்த இரண்டு வருடங்களாக ராகுலின் உடல் தீப்பற்றி எரியாததால், காவல்துறையும் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன், கர்ணன் தம்பதிக்கு மேலும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது, ராகுலை தொடந்து புதிதாக பிறந்த அந்த பச்சிளம் குழந்தை உடலிலும் தானாக தீப்பற்றி எரிந்துள்ளது. குழந்தையின் கால்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மூண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குழந்தையின் இரண்டு கால்களிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கால்களில் தீப்பிடித்துள்ளதற்கான காரணத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தாத நிலையில், மீண்டும் குழந்தையின் உடலில் தீப்பிடிக்காமல் இருக்க மருத்துவர்கள் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அண்ணனை தொடர்ந்து தம்பியின் உடலிலும் தீப்பற்றி எரிவதால், ஏற்கனவே அச்சம் விலகாத அந்த பகுதி மக்கள் தற்போது திகிலில் உறைந்துள்ளனர். ஆ.நந்தகுமார் |
No comments:
Post a Comment