எனக்கு 56 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன் மார்பிலும் கழுத்திலும் சிறுசிறு கட்டிகள் தோன்றின. மருத்துவரைச் சந்தித்து மாத்திரை வாங்கிச் சாப்பிட்டும், மேலே மருந்து தடவிவந்தும் அது குறையவில்லை. அக்கி என்று மருத்துவர் கூறினார். இதற்கு வேறு தீர்வு உண்டா?
- நடேசன், காரைக்கால்
அக்கி நோயை ஆங்கிலத்தில் (Shingles) என்றும் (Herpes zoster) என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தருகிற, தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். இது Varicella zoster எனும் வைரஸால் உண்டாகிறது. சின்ன அம்மை (Chicken pox) உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான்.
சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ், செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். மேலும், சில நிலைகளில் இது ஏன் உருவாகிறது என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.
அறிகுறிகள்
ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களுக்கும் இது வரும். முதலில் வலி, துடிப்பு, எரிச்சல் ஆகியவை ஒரு பக்கத்தில் காணப்படும். வலியும் எரிச்சலும் பின்னர் அதிகரிக்கும். பின்பு சிவந்த நிறத்தில் தோலில் கொப்பளங்கள் உருவாகும். அதன்பின் இந்தக் கொப்பளங்கள் உடைந்து புண்ணாக மாறும்.
பிறகு இது உலரத் தொடங்கும். மூன்று வாரங்களில் இந்த உலர்ந்த பகுதி கீழே விழும். பொதுவாக வயிற்றின் மேற்பகுதியிலோ அல்லது மார்பின் அருகேயோ இது வரலாம். முகத்திலும், கண்ணிலும், வாயிலும்கூட வரலாம். இதனுடன் காய்ச்சல், குளிர் காய்ச்சல், உடல் அலுப்பு, தலைவலி, மூட்டுவலி, கழலைகள், கைகால் வலி, தசை பலவீனம் போன்றவை வரலாம்.
தசைகளை அசைப்பதில் பிரச்சினைகள் வரலாம். முக நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் கண்களை மூடி திறப்பதிலும், செவித் திறனிலும், சுவைகளை உணர்வதிலும், பார்வையிலும் பிரச்சினைகள் உருவாகலாம். இந்த நோயைப் பார்த்த உடனேயே கண்டுபிடிக்க முடியும்.
தற்காப்பு
நவீன மருத்துவத்தில் வைரஸுக்கு எதிரான மருந்துகள் வந்துள்ளன. சிகிச்சையை 72 மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது கொப்பளங்கள் தோன்றுவதற்கு முன்பு தொடங்கினால் சிறந்தது. அரிப்பைக் குறைக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள், மேல்பகுதியில் பூசுவதற்குச் சில களிம்புகளையும் நவீன மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். குளிர்ந்த நீரில் பஞ்சை முக்கி மெதுவாக அமுக்கிவிடச் சொல்வார்கள். காய்ச்சல் குணமாகிறவரை ஓய்வெடுக்கவும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் அறிவுறுத்தப்படும்.
இந்தப் புண்ணானது கசிவுடன் காணப்படும் வேளைகளில் சின்னம்மை வராதவர்களையும் இது தாக்கலாம். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்கள் இவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. மூன்று வாரங்களுக்கு இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடரவேண்டியது அவசியம். பொதுவாக, இது ஒருமுறை ஒருவருக்கு வந்தால் மறுமுறை வருவதில்லை. இதனால் சிலருக்கு நரம்பு பாதிப்பு வருவதுண்டு.
பாதிப்புகள்
அக்கி வந்த இடத்தில் நரம்பு வலி (Post hepatic neuralgia) பெரும் தொந்தரவு அளிக்கும். மூளை பாதிப்பு, காது கேளாமை, கண் பாதிப்பு போன்றவை அபூர்வமாக ஏற்படலாம். அதனால், ஒழுங்காகச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். நோயாளிகளின் கொப்பளங்களை நேரடியாக நாம் தொடக் கூடாது. இதற்கு இப்போது தடுப்பூசிகள் வந்துள்ளன. இது சின்னம்மை தடுப்பூசியிலிருந்து மாறுபட்டது.
இதைத் தவிர, (Herpes simplex) என்று ஒன்று உண்டு. முறைகேடான உடல் உறவால் பிறப்புறுப்புகளில் Genital herpes போன்றவை வரலாம். இது பிறப்புறுப்பில் காண்கிற தோலில் வரும். பாதுகாப்பற்ற உடலுறவின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும். வாய், உதடு போன்றவற்றில் புண்களை ஏற்படுத்திக் காய்ச்சலுடன் வரும்.
இரண்டாவது வகை, பிறப்புறுப்பின் தோல், பிறப்புறுப்பு, ஆகிய இடங்களில் வரலாம். பல நேரங்களில் இது கண்டுபிடிக்கப்படாமல் போய்விடும் அல்லது பூச்சி கடி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் வாய்ப்புள்ளது. இது இரண்டு நாட்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உருவாகும்.
இந்த நோய் தாக்கியிருந்தால் காய்ச்சல் ஏற்படும், பசி குறையும், உடல் அசதி காணப்படும், தசை வலி ஏற்படும், நிண நாளங்கள் வீங்கும். சிறிதான கொப்பளங்கள் உருவாகும். அதிலிருந்து திரவம் வெளிப்படும்.
அந்தத் திரவத்தை ஆராய்ந்து செய்யும் பரிசோதனைகள் வந்துள்ளன. இதனை PCR test என்று சொல்வார்கள். புண்களைக் குணமாக்குவதிலும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிப்பதிலும், மீண்டும் வராமல் தடுப்பதிலும் அரிப்பு, எரிச்சல், வலி போன்றவற்றை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்களுக்குப் பிறப்புறுப்பில் கொப்புளங்கள் உருவாகும். ஆண்களுக்கு ஆண்குறி, தொடை, மலத்துவாரம் போன்றவற்றிலும் கொப்புளம் உருவாகும். மரத்துப் போதல், அரிப்பு, எரிச்சல், வலி போன்றவை காணப்படும். இந்தக் கட்டிகள் உடையும்போது புண்ணாக மாறும், அந்த நேரத்தில் வலி அதிகமாக இருக்கும். 14 நாட்களில் இவை மாறும். ஒரு சிலருக்குச் சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் ஏற்படலாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். சில மாதங்கள் கழிந்து மீண்டும் இவை தோன்றலாம், அப்பொழுது கடுமை சற்றுக் குறைவாக இருக்கலாம்.
இதில் கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள். குழந்தைக்குப் பரவாமல் தடுக்க இதைச் செய்வார்கள். பொதுவாக இந்த நோய் பாதித்தவர்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்நோயின் தீவிரத்தால் கர்ப்பிணி பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்நோய் பரவும். பாதுகாப்பான உடலுறவு இன்றியமையாததாகிறது. குறிப்பாக லேட்டக்ஸ் காண்டம் பயன்படுத்துவது சிறந்தது. விலங்குகள், மாட்டின் தோலினால் செய்த ஆணுறைகள் வழியாக வைரஸ் பரவும் வாய்ப்புகள் இருக்கிறது.
ஆயுர்வேத அணுகுமுறை
ஆயுர்வேதக் கண்ணோட்டப்படி பித்தமும் ரத்தமும் அதிகரித்து எரிநிலையை அடைந்து ரசம், ரத்தம் போன்ற தாதுகளைப் பாதித்துப் பின்பு சிகிச்சை செய்யாவிட்டால், ஆழமான திசுக்களையும் பாதித்து வருகிற நோயாகக் கருதப்படுகிறது. இதை விஸர்ப்ப நோய் அல்லது அக்கி என்பார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுவாகச் செய்யப்படுகிற பஞ்சகர்ம சிகிச்சைகளைச் செய்யக்கூடாது.
இந்த நோய்க்கு ரத்தத்தைச் சுத்தி செய்கிற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். பேய்ப்புடல், வேப்பங்கொழுந்து, திராட்சை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கோரைக்கிழங்கு, நன்னாரி, விலாமிச்சை ஆகியவற்றைக் கஷாயம் செய்து கொடுக்கலாம்.
கஷாயம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் இந்த நோய்க்கு ரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள். முதல் நிலை நீங்கிய பிறகு 14 நாட்களுக்குப் பின் கசப்பு மருந்துகளால் காய்ச்சப்பட்ட திக்தகம், மஹாதிக்தகம் போன்ற நெய்களைக் கொடுக்கலாம். தாமரை, கருங்குவளை, விலாமிச்சை, பால், நெய் சேர்த்து அரைத்துப் பூச்சு போடலாம்.
புண்ணின் மீது ஆலம் விழுது, வாழைத்தண்டு ஆகியவற்றை அரைத்துப் பூசலாம். காவிக்கல்லை நெய் சேர்த்து அரைத்துப் பூசலாம். சில நேரம் மெல்லிய துணியைப் பரப்பி அதன் மேல் மருந்தைப் பூச வேண்டும்.
அதிமதுரக் கஷாயம், கோரைக்கிழங்கு கஷாயம், கருப்பஞ்சாறு ஆகியவை குடிப்பதற்கும் நனைப்பதற்கும் சிறந்தவை. மரமஞ்சள் கஷாயம், அருகம்புல் கஷாயம் போன்றவை குடிப்பதற்கு எளிமையான கஷாயங்கள்.
கைமருந்துகள்
இந்த நோய்க்கு மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் கிடைக்கும் காவி மண்ணால் அக்கி நோய் கண்டவரின் உடலில் பூச்சு போடுவார்கள். வலியும் வேதனையும் நீங்கும்.
பூங்காவியை பன்னீருடன் சேர்த்துக் குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல், வலி, வேதனை குறையும்.
ஊமத்தை இலையை அரைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து அக்கியின் மேல் பூசவும். கொப்பளங்கள் அடங்கும். எரிச்சல், வலி குறையும்.
உணவில் காரம், உப்பைக் குறைக்கவும். குளிர்ச்சியான உணவு வகைகளை உண்ணவும். வெயிலில் அலையக் கூடாது. குங்கிலியப் பற்பம் 10 கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணெயில் [எலுமிச்சை அளவு] கலந்து காலை, மாலை உண்ணவும். ஏழு நாட்கள் தொடர்ந்து மருந்தை உண்ணவும்.
ஆலம் விழுதைச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்துத் தடவிவர அக்கி குணமாகும். செம்மரப் பட்டையைத் தண்ணீர்விட்டு நன்கு அரைத்துப் பூசிவந்தால் அக்கி குறையும்.
உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,
தி இந்து, கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை - 600 002
No comments:
Post a Comment