சென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி இந்தியாவில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். கடந்த 179 ஆண்டுகளாக தரமான மருத்துவக் கல்வியை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்தக் கல்லூரியில் 2012-ஆம் ஆண்டு வரை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 165 ஆக இருந்தது. 2013-ஆம் ஆண்டில் மொத்தம் 250 மாணவர்களை சேர்ப்பதற்கு இந்திய மருத்துவக் குழுமம் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
அனுமதி புதுப்பிப்பு:
வரும் 2015-16-ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கைக்கான அனுமதியைப் புதுப்பிக்க, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயற்குழு கூட்டத்தில் 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடர்ந்து 250 மாணவர்களை சேர்த்திட சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வரும் கல்வியாண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் 250 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் விமலா தெரிவித்தார்.
No comments:
Post a Comment