Friday, January 23, 2015

சமோசா சாப்பிடலாமா?







நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டவை டீ, காபி, சமோசா, போண்டா, பஜ்ஜி வகைகள்.

"லைட்டா பசிக்குது... ஒரு டீ, சமோசா போட்டுட்டு வந்திடறேன்!" னு பணிபுரியும் இடங்களில் பேசுவதை சகஜமாக கேட்க முடியும்.

சமோசா சாப்பிட்டால் மூணு மணி நேரத்துக்கு பசியை தள்ளிப்போட்டு விடலாம். டீயோடு எதையாவது சேர்த்து சாப்பிடுவது, சமோசாவின் மசாலா வாசனைக்காக சாப்பிடுவது என்று சமோசாவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

உருளைக்கிழங்கோடு வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலா பொடிகளை சேர்த்து தயாரிக்கும் பொருள்தான் சமோசா. வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த உணவுப்பொருள்களில் இதுவும் ஒன்று. சுவைக்காகவும், பசியை போக்குவனவாகவும் மக்களிடம் அறிமுகமான சமோசாவின் சுவைக்காக குழந்தைகளும் இன்று மயங்கி நிற்கின்றனர். இந்த சுவைக்காகவும், கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் சேர்க்கப்படும் பொருள்தான் சமோசா சாப்பிடுபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அது என்ன என்றால் வினிகர் தான். இதன் அறிவியல் பெயர் அசிட்டிக் அமிலம் என்று சொல்வார்கள்.

நாம் சாப்பிடும் பெரும்பான்மையான சமோசாவில் கலந்திருப்பது ரசாயன வினிகர்தான். சமோசாவின் சுவையில் இதை எளிதில் கண்டறிய முடியாது. எலுமிச்சை பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரும் கிடைக்கிறது. அது விலை அதிகமானவை என்பதால் யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த ரசாயன வினிகரின் விலை அரை லிட்டர் 35 ரூபாய்தான். சாதாரண மளிகைக் கடைகளிலே கிடைக்கிறது. இதன் காரணமாக சமோசாவின் சுவைக்காக குறிப்பிட்ட அளவில் சேர்த்து வருகிறார்கள். ஹோட்டல்கள் தொடங்கி... சாதாரண டீ கடைகள் வரை பயன்படுத்தி வருகிறார்கள். சமோசாவை காலையில் தயார் செய்துவிட்டால் இரவு வரை கடைகளில் இருப்பதை பார்த்திருப்போம். சமோசாவை சூடாக கொடுப்பதற்காக பப்ஸ் வகைகளை வைத்து விற்கும் ஹாட் பாக்ஸில் வைத்தும் தற்போது விற்பனை செய்து வருகிறார்கள். பசியிலும், சமோசா கொடுக்கும் ருசியிலும் இதை பெரும்பாலும் கவனிப்பதில்லை.

இந்த ரசாயன வினிகர் பாத்திரங்கள் கழுவும் சோப், கை கழுவும் சோப் மற்றும் பாத்திரங்கள் கழுவும் எண்ணெயில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பாத்திரங்கள் கழுவும் சோப் முழுக்க முழுக்க எலுமிச்சையிலிருந்து தயாரிப்பதாக நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்கின்றன. அப்படி முழுக்க முழுக்க எலுமிச்சையைப் பயன்படுத்தினால் நம் விவசாயிகள் கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பார்கள். மலிவான விலையில் கிடைக்கும் இந்த ரசாயன வினிகரால்தான் பாத்திரங்கள் பளிச்... பளிச்...ன்னு காட்சி தருகிறது. நம் வயிற்றுக்குள் போகும் ரசாயன வினிகர் என்ன செய்யும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

இந்த வினிகரை கலந்தால் சமோசா 3 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது கூடுதல் தகவல். சரி... வினிகர் கலந்த சமோசவை எப்படி கண்டுபிடிப்பது? அனுபவம் உள்ளவர்கள் அதன் சுவையை வைத்து கண்டுபிடிக்கலாம். இல்லையென்றால் சோதனைக் கூடத்தில் வைத்தும் கண்டுபிடிக்க முடியும். இதையெல்லாத்தையும் விட தினமும் ஒரு சமோசா என்பதை முடிந்தளவு தவிர்க்க பாருங்கள்.

சமோசாவில் ரசாயன வினிகர் கலப்பது குறித்து சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

"தரமற்ற ஆயில், மைதா மாவால் தயார் செய்யப்படும் சமோசாவை சாப்பிடவே கூடாது. அதுவும் இந்த ஆயில் அப்பிக் கிடக்கும் சிறிய சமோசாவை அறவே தவிர்க்கலாம். சமோசாவால் உடலுக்கு பெரியளவில் மைக்ரோ நியூட்டிரிஷியன், புரோட்டீன் சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆற்றல் மட்டுமே கிடைக்கிறது. முன்பெல்லாம் கேரட், பீன்ஸ்.. மாதிரியான காய்கறிகள் கலந்திருக்கும். இப்போதும் அதையும் போடுவதில்லை.

ஊறுகாயில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சேர்க்கப்படும் வினிகரை சுவைக்காக சேர்த்து தயாரிக்கிறார்கள். இது இயற்கையாக தயாரிக்கப்படும் வினிகராக இருந்தால் பரவாயில்லை. ரசாயன வினிகராக இருப்பதால் உடலில் அசிடிட்டி உருவாகி வயிற்றுப் புண்ணை வரவைக்கிறது. அதுவும் வாயு தொல்லை இருப்பவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு ஒருவித ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். நெஞ்சு கரிக்கும். நாளடைவில் அதுவே ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். செயற்கை வினிகரை தொடர்ந்து உணவில் கலப்பதால் புற்று நோய் வரும் என்று மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்து வருகிறார்கள்.

இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் எந்த உணவு பொருளானாலும் சமைத்த 4லிருந்து 6 மணி நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். சமோசாவுக்கு பதிலாக பருப்பு வடை, கடலை மாவில் செய்யப்படும் பஜ்ஜி ஆகியவற்றை சாப்பிடலாம்'' என்றார்.

-த. ஜெயகுமார்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...