Thursday, January 1, 2015

நாடு முழுவதும் அமல் இன்று முதல் சமையல் கியாஸ் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்



நாடு முழுவதும் சமையல் கியாஸ் மானியம் இன்று (வியாழக்கிழமை) முதல் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

கியாஸ் சிலிண்டர்

வீடுகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இதுவரை மத்திய அரசு வழங்கும் மானியம் போக எஞ்சிய தொகை கொடுத்து நுகர்வோர்கள் வாங்கி வந்தனர். மானிய தொகையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி வந்தது. இப்போது மத்திய அரசு நுகர்வோர்கள் சந்தை மதிப்பில் கியாஸ் சிலிண்டர்களை வாங்க வேண்டும். மத்திய அரசின் மானியம் நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்துவது என்ற திட்டத்தை கொண்டு வந்தது.

முதல்கட்டமாக இந்தியா முழுவதும் உள்ள 54 மாவட்டங்களில் நவம்பர் மாதம் 15–ந்தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினமான ஜனவரி 1–ந்தேதி (வியாழக்கிழமை) முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இன்று முதல்

இதற்கு வசதியாக சமையல் கியாஸ் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை எண்ணை தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிலும், கியாஸ் முகவர்களிடமும் கொடுத்தனர். ஆதார் அட்டை இல்லாதவர்கள் சமையல் கியாஸ் இணைப்புக்குரிய 17 இலக்க அடையாள எண்ணை வங்கிகளிடமும், வங்கி கணக்கு எண்ணை கியாஸ் முகவர்களிடமும் வழங்கி வந்தனர். ஆனால் இந்த திட்டத்திற்கு வங்கி கணக்கு கட்டாயம்.

அதன்படி இன்று முதல் நுகர்வோர்கள் சந்தை மதிப்பில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வாங்க வேண்டும். அதற்குரிய மானியத் தொகை அந்தந்த நுகர்வோர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுவிடும். ஏற்கனவே இத்திட்டம் தொடங்கப்பட்ட 54 மாவட்டங்களுடன் எஞ்சிய 676 மாவட்டங்களிலும் இன்று முதல் விரிவுபடுத்தப்படுகிறது.

ரூ.624 கோடி

இதற்காக ரூ.568 முன்பணமாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சமையல் கியாஸ் மானியம் தேவையில்லை என்று கூறுபவர்கள் அந்த தகவலை முகவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வங்கி கணக்குக்கு மானியத் தொகை செலுத்தப்பட மாட்டாது. இதுவரை 12 ஆயிரம் நுகர்வோர் மானியம் வேண்டாம் என்று கூறியுள்ளதால் கோடிக்கணக்கான மானிய தொகை மத்திய அரசுக்கு மிச்சமாகியுள்ளது.

கடந்த 30–ந்தேதி வரை 20 லட்சம் சமையல் கியாஸ் நுகர்வோர்களுக்கு ரூ.624 கோடி மானியத் தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024