Thursday, January 1, 2015

கடனாளியாக வேண்டாம்

Dinamani

இன்றைய நிலையில் இரண்டு பேர் சந்தித்தால், அவர்களது பேச்சில் ஒருபகுதி கடன் தொடர்பாகத்தான் இருக்கும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலும், சேமிப்புக்கு வழியில்லாத சூழலே நிலவுகிறது.

அடிப்படை வசதிகளை நிறைவு செய்வது, பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு... என செலவுகளுக்குப் பஞ்சமில்லை. வரவு இருக்கிறதோ, இல்லையோ செலவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது.

வரவு குறைவாக இருந்து, செலவு அதிகரித்தால், பற்றாக்குறையைச் சமாளிக்க கடன் வாங்க வேண்டிய நிலை (வாய்ப்பிருந்தால் கையூட்டு வாங்க வேண்டிய கட்டாயம்) ஏற்படுகிறது.

ஒரு வீட்டுக்கு அவசியத் தேவைகளாகக் கருதப்படும் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏ.சி., விலை உயர்ந்த டி.வி. கார் ஆகியவை இன்று கடன் பெற்றே வாங்கப்படுகின்றன.

நமக்கு தகுதியிருப்பின், வங்கியானது நிறுவனத்துக்குக் காசோலையை செலுத்தி விடுகிறது. காரை வீட்டு வாசலில் கொண்டுவந்து நிறுவனத்தினர் நிறுத்தி விடுகின்றனர்.

குடும்பத் தலைவரின் ஊதியத்தில் இவற்றுக்கு ஈ.எம்.ஐ. கட்டுவதற்கே 75 சதவீதத் தொகை கழிந்து விடுகிறது. அந்த மாதச் செலவைச் சமாளிக்க மீண்டும் கடன்பெற வேண்டிய நிலை. இதுதான் இன்றைய ஒரு நடுத்தரக் குடும்பத்தின் நிலை.

தமிழகத்தின் தற்போதைய கடன் ரூ.1,78,170 கோடி. ஒவ்வொரு தனி நபரின் மீதான கடன் ரூ.24,711. கடனுக்காக தமிழக அரசு செலுத்தும் வட்டி ரூ.15,463 கோடி என அரசியல்வாதிகள் புள்ளிவிவரங்களை அடுக்குகின்றனர். இதனால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

"அட, அரசாங்கமே கடன்ல இருக்கு, நாம வாங்குனா என்னப்பா?' என்ற மனநிலையே சாதாரண குடிமகனுக்கும் ஏற்படுகிறது.

மேலும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் தர தானாகவே முன்வருகின்றன. குறைந்த வட்டி, ஜீரோ பெர்சன்ட் வட்டி என்று வங்கிகள், நிதி நிறுவனங்கள் வெளியிடும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களை ஈர்க்கின்றன.

பலரும் முதலில் கடனை வாங்குவோம். மெதுவாகத் திருப்பிச் செலுத்துவோம் என்ற முடிவை எடுக்கின்றனர்.

இப்படியாகக் கடன் பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்திய நகரங்களில் வசிப்போர் குறித்து மேற்கொண்ட ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் கடன் பெற்றவர்கள் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது என்று என்.எஸ்.எஸ்.ஓ. என்று அழைக்கப்படும் நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, நகர்ப்பகுதியைப் பொருத்த அளவில், நான்கு பேரில் ஒருவர் கடன் பெற்றவராக இருக்கிறார். கிராமப்புறத்தில் மூன்று பேரில் ஒருவர் கடன் பெற்றவராக இருக்கிறார்.

2002-ஐவிட 2012-ஆம் ஆண்டு நகர்ப் பகுதியில் கடன் பெற்றவர்கள் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. கிராமப் பகுதியில் கடன்பெற்றவர்கள் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

விவசாயப் பணிகளுக்காக கிராமப் பகுதியில் அதிகம் கடன் பெறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப் பகுதியில் வசிப்போரில் சுமார் 22 சதவீதத்தினர் ஏதாவது ஒரு செலவினத்துக்காக கடன்பெற்றுள்ளனர்.

அதுபோல, கிராமப்புறங்களில் வசிப்போரில் 31 சதவீதத்தினர் கடன் பெற்றுள்ளனர். 2002}இல் இது 27 சதவீதமாக இருந்தது.

நகர்ப்புறங்களைப் பொருத்தவரையில், 82 சதவீதத்தினர் வீடு கட்டுவதற்கு, படிப்புச் செலவுக்கு, திருமணச் செலவுக்கு என கடன் பெற்றுள்ளனர்.

18 சதவீதத்தினரே தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் கடன் பெற்றுள்ளனர் என்று இந்த நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மேலும், ஏழை - பணக்காரர் இடையேயான இடைவெளியும் சற்று அதிகமாகவே உள்ளது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகள் வாங்குவதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாடகை வீட்டில் எவ்வளவு நாள்தான் வசிப்பது? வாடகையாகக் கொடுக்கும் பணத்தை கடனுக்கான மாதத் தவணையாகச் செலுத்தி விடலாம்.

மேலும், வருமான வரியிலிருந்து சற்று விலக்குப் பெறலாம் என்பதே நடுத்தர வர்த்தகத்தினரின் எண்ணமாக உள்ளது. இப்படி கணக்குப் போட்டு, வங்கி, நிதி நிறுவனங்களில் கடனை வாங்கி, மாதத் தவணையை முறையாகச் செலுத்த முடியாமல் அல்லல்படுவோரைப் பார்க்கிறோம்.

சிலர் கடன்தொகையை ஒழுங்காகச் செலுத்தாததால், வீடுகள் ஏலத்துக்கு வரும் நிலையையும் காண்கிறோம்.

நமது வாழ்க்கைச் சூழல் மாறி வருகிறது. கிடைக்கும் மாத வருவாயைக் கொண்டு செலவினங்களைச் சமாளிக்க முடியாத நிலை.

அன்றைக்கு, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்லும் மகனுக்கு அன்றைய செலவுக்காக இரண்டு ரூபாயை தந்தை கொடுப்பார். இன்று அப்படியல்ல, பொறியியல் கல்லூரியில் படிக்கும் மகனுக்கு குறைந்தபட்சம் ரூ.100-ஐ "பாக்கெட் மணி'யாகத் தர வேண்டிய கட்டாயம்.

எல்லா பெற்றோராலும் தினசரி ரூ.100 கொடுக்க முடியுமா? இதனாலேயே கடன் பெறவும், ஒரு கட்டத்தில் கடனில் மூழ்கும் நிலையும் ஏற்படுகிறது.

தனி நபர் மட்டுமல்ல, பெரிய நிறுவனங்களே வங்கிகளில் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்தாத நிலை உள்ளது. இப்படி நிலுவையில் உள்ள கடன் தொகை பல ஆயிரம் கோடி ரூபாய். இவற்றை எப்படி வசூலிப்பது என வங்கிகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

இருப்பதைக் கொண்டு நிறைவு காண்போம். அதுவே நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024