Wednesday, December 31, 2014

விடைகொடு 2014-ம் ஆண்டே!

Return to frontpage

இதோ 2014-ம் ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். நம்மை விட்டுப் பிரியவிருக்கும் இந்த ஆண்டை எப்படி வழியனுப்புவது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். மகிழ்ச்சியான ஆண்டு என்று கருதி துயரத்துடன் விடைகொடுப்பதா, அல்லது துயரமான ஆண்டு என்று கருதி பாராமுகத்துடன் விடைகொடுப்பதா? இந்தக் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாதுதான்.

ஏகாதிபத்தியமும் அதன் துணைவிளைவாகப் பயங்கரவாதமும் இந்த ஆண்டின் முகத்தைக் கோரமாகக் கிழித்துவிட்டிருக்கின்றன. ‘பாலஸ்தீன மக்களுக்குத் தோள்கொடுக்கும் ஆண்டு’ என்று ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டில்தான், காஸாவில் பேரவலங்கள் நிகழ்த்தப்பட்டன. சிரியாவில் லட்சக் கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். சிரியா, இராக் என்று ஐ.எஸ். அமைப்பின் விஷ வேர்கள் இன்னும் ஆழமாகவும் பரவலாகவும் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளின் ஏகாதிபத்தியத் துக்கு எதிரான போர்களை, மேலை நாடுகளின் துணையால் உருவான அடிப்படைவாத அமைப்புகள் மேலை நாடுகளால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டே நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

அது மட்டுமா? கடவுள் துகளையே கண்டறிந்துவிட்டதாக நாம் பெரு மிதப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான், மார்ச் 8-ம் தேதியன்று மலேசிய விமானம் 239 பேருடன் மாயமானது. 26 நாடுகள் சேர்ந்து, 20 லட்சம் சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தேடியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜூலை மாதம் மற்றுமொரு துயரம்: மலேசிய விமானமொன்று உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவையெல்லாம் போதாதென்று கடந்த 28-ம் தேதி இன்னொரு விமானம் மாயமாகியிருக்கிறது.

இதற்கிடையில், பாகிஸ்தானின் மலாலாவுக்கும் இந்தியாவின் சத்யார்த்திக்கும் கிடைத்த நோபல் அமைதி விருது சற்றே ஆசுவாசம் தரும் பூச்செண்டு. அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் துளிர்ப்பதாக நம்பப்படும் நட்பும் சற்று நம்பிக்கையைத் தருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இது மாற்றத்தின் ஆண்டு. காங்கிரஸுக்கு வரலாறு காணாத தோல்வியையும், பாஜகவுக்குப் பெருவெற்றியையும் இந்த ஆண்டு வழங்கியிருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த ஒருவர், முதன்முறையாக இந்தியாவின் பிரதமராக ஆகியிருக்கிறார்.

நைஜீரியாவில் போகோ ஹராம் 250-க்கும் மேற்பட்ட இளம் பெண்களைக் கடத்திவைத்திருப்பது, ரஷ்ய-உக்ரைன் பிரச்சினை என்று உலக அளவிலும், காஷ்மீர் வெள்ளம், மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல், போடோ பயங்கரவாதிகளின் தாக்குதல், தலையெடுக்கும் மதவாதப் போக்கு என்று இந்திய அளவிலும், மவுலிவாக்கம் கட்டட விபத்து என்று தமிழக அளவிலும் இந்த ஆண்டுக்கு எதிர்மறையாக இன்னும் எவ்வளவோ முகங்கள் உண்டு.

ஆண்டு நிறைவை எட்டிக்கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளியின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர். சென்னை பள்ளி ஒன்றில் அந்தச் சிறுவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபோது, கண்களில் நீர்த் துளிர்க்க, கைகளில் மெழுகுவத்தியுடன் நின்றிருந்த ஒரு சிறுமியின் புகைப்படம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. தேசம், மதம், மொழி கடந்த அந்தக் கண்ணீர்த்துளி, நம்முள் புதைந்து கொண்டிருக்கும் மனிதத்துக்கு எப்படியும் உயிர்கொடுக்கக் கூடியது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆண்டுக்கு விடைகொடுத்து, வரும் ஆண்டை வரவேற்போம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024