Monday, December 22, 2014

திக்குமுக்காடும் ஜி.எஸ்.டி. சாலை!- நாள்தோறும் 5 லட்சம் வாகனங்கள்.. திணறுகிறது சென்னை

Return to frontpage




சென்னை நகரில் அன்றாடம் உள்ளே நுழைந்து வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை 5 லட்சம். தென் மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வரக்கூடிய ஒரே நெடுஞ்சாலை ஜி.எஸ்.டி. சாலை (கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலை) எனப்படும் என்.எச்.45. தேசிய நெடுஞ்சாலை. சென்னை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தொடங்கி தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், பெரியகுளம் ஆகிய பிரதான ஊர்களைக் கடந்து தேனி வரை நீண்டிருக்கிற இந்த ராட்சத சாலை சுமார் 470 கி.மீ. நீளம் கொண்டது. தமிழகத்தின் பிரதான சாலைகளில் ஒன்றாக- சென்னை மாநகரை இணைக்கக்கூடிய சாலையாக - சென்னை நகரப் போக்குவரத்தின் பிரதான ரத்த நாளமாக உள்ளது. இதில் ஆங்காங்கே உள்ள அடைப்புகள் காரணமாக, அரை மணி நேரத்தில் கடக்கவேண்டிய தூரத்தை கடக்க குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆவதால், வாகன ஓட்டிகளின் ரத்த அழுத்தத்தை எகிறவைத்துவிடுகிறது.

சென்னையில் கடந்த 20 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 900 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையின் 6 பிரதான சாலைகளில், தென் சென்னை புறநகர் பகுதியினர் பயன்படுத்தும் ஜிஎஸ்டி சாலை முக்கியமானது. இதில் கிண்டி கத்திப்பாரா முதல் காட்டாங் கொளத்தூர் வரை வாகன நெரிசல் அதிகம். தாம்பரம் ரயில் நிலைய சந்திப்பு, சென்னை விமான நிலையம் அமைந்திருப்ப தாலும் மெட்ரோ ரயில் நிலைய பணிகள், வண்டலூரில் தொலை தூர பஸ்கள் நின்று செல்வது, மறைமலை நகரில் தொழிற்சாலை கள் பெருக்கம் போன்ற காரணங்களாலும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகிவிட்டது.

வடசென்னையைவிட தெற்கு புறநகர் பகுதிகள் வேகமாக வளர்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடு வாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில், ஊரப் பாக்கம், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய பகுதிகள் படுவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. ஜிஎஸ்டி சாலை வழியாக செல்லக்கூடிய முடிச்சூர், மண்ணிவாக்கம், பொழிச்சலூர், அனகாபுத்தூர், சேலையூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளும் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. இப்பகுதி களில் கடந்த 10 ஆண்டுகளில் குடியேற்றம் பலமடங்கு அதிகரித்துள்ளதும், ஜிஎஸ்டி சாலை திணறுவதற்கு முக்கிய காரணம். பல்லாவரம், ஆதம்பாக்கம், தாம்பரம், வண்டலூர், கிழக்கு தாம்பரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவை ஜிஎஸ்டி சாலையில் இணைவதால், வாகன நெரிசல் கூடிக்கொண்டே போகிறது.

இருவழிப் பாதையாக இருந்த இச்சாலை 2004ம் ஆண்டு நான்குவழிப் பாதையாக மாற்றப் பட்டது. வாகனப் பெருக்கத்தை சமாளிக்க முடியாமல் இப்போது அதுவும் திக்குமுக்காடு கிறது. ஜிஎஸ்டி சாலையில் சராசரியாக 14 கி.மீ. வேகத்தில்தான் பேருந்துகள் செல்ல முடிகிறது என்கின்றன ஆய்வுகள்.

'தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை' தென்சென்னையின் பிரபல சமூக சேவகர் வி.சந்தானம் கூறியதாவது: ஜிஎஸ்டி சாலை அதன் முழுக் கொள்ள ளவையும் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்பு, பிராட்வேயில் இருந்து தாம்பரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதுபோன்ற ஏதோ ஒன்றை அரசு செய்தாலன்றி ஜிஎஸ்டி சாலைக்கு விடிவு ஏற்படாது.

ஒரகடம், மறைமலை நகர், மஹிந்திரா சிட்டி என தொழிலகங்கள் பெருகுவதால் ஜிஎஸ்டி சாலை எந்நேரமும் பரபரப்பாக உள்ளது. அதற்கேற்ப திட்டங்களை வேகமாக வகுத்து, அரசு செயல்படுத்துவது இல்லை. ஆக்கிரமிப்புகளால் ஜிஎஸ்டி சாலை சுருங்கி விட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, திட்டமிட்ட பார்க்கிங் வசதி செய்து தந்தால், வாகனங்கள் செல்வது எளிதாகும். ஆதம்பாக்கம், முடிச் சூர், பொழிச்சலூர், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை போன்ற உட்புறப் பகுதிகளுக்கு இணைப்பு வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு சந்தானம் கூறினார்.

2 கோடி வாகனங்கள்

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டில் 50.12 லட்சம். கடந்த நவம்பர் மாத நிலவரப்படி 1.95 கோடி. இதில், இருசக்கர வாகனங்கள் 1.59 கோடி, ஆட்டோக்கள் 2.25 லட்சம், லாரிகள் 6.34 லட்சம். தமிழகம் முழுவதும் உள்ள வாகனங்களில் 30 சதவீதம் சென்னையில் ஓடுகின்றன. ஆண்டுதோறும் சென்னையில் 11 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கின்றன. சராசரியாக, தினமும் 1,500 புதிய வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. இதுதவிர, தமிழக அளவில் தினமும் சுமார் 3800 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப் படுகின்றன. தினந்தோறும் 3600 பேர் ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். புதிய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவீதம் அதிகரிக்கிறது.

வரும்.. வராது.. வண்டலூர் பஸ் ஸ்டாண்டு

ஜிஎஸ்டி சாலையில் உள்ள பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரியில் காலை, மாலை நேரங்களில் 1.5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் வால்பிடித்து நிற்பது வாடிக்கை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களைப் பிரித்து இயக்க வண்டலூரில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அது விவசாய நிலம் என்று கூறி அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருவதால், 'வண்டலூர் புது பஸ் ஸ்டாண்ட்' திட்டம் வெறும் அறிவிப்போடு நிற்கிறது. வாகன எண்ணிக்கைப் பெருக்கம், பார்க் கிங்கிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. சாலை, தெரு, சந்து, பொந்துகளைக்கூட வாகன ஓட்டிகள் விட்டுவைப்பதில்லை. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுவதாவது: சென்னை கோயம்பேடு பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையங்களில் இருந்து மதுர வாயல், வடபழனி வழியாகவே புறநகர் பகுதிக்குச் செல்லமுடியும். காலை, மாலை நேரங்களில் வடபழனி வழியாக வெளியூர் பேருந்துகள் செல்ல அனுமதியில்லை. மெட்ரோ ரயில் பணிகளும் நடப்பதால், பெரும் பாலான பஸ்கள் மதுரவாயல் வழியாகவே இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சாதாரண நாட்களில் 1,500 பேருந்து கள், முக்கிய விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் 3,500 பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கப்படாததால் வாகனங்கள் தேங்குகின்றன.

* செங்கல்பட்டு, திண்டிவனம் சுங்கச் சாவடியில் வாகனங்கள் வந்து, போக தலா 8 வழி தடங்கள் உள்ளன. போரூர் சுங்கச் சாவடியில் மொத்தமே 8 வழிகள்தான் இருக்கின் றன. இதனால், கோயம்பேடு எல்லை வரை வாகனங்கள் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு தேங்குகின்றன.

* கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் சென்னை நகருக்குள் நுழைய அனுமதி இல்லை. இதனால், புறநகர் பகுதிகளில் சாலையோரமாக பல கி.மீ. தூரத்துக்கு வரிசையாக நிறுத்தி வைக் கின்றனர். இவை ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வதால், போக்குவரத்து ஒரேயடியாக ஸ்தம்பிக்கிறது. இந்த வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்திவைக்க தனியாக லாரி நிறுத்தும் இடம் அமைக்கப்பட வேண்டும்.

    சசிதரன்
    சிவா
    ஜெயப்பிரகாஷ்
    கோ.கார்த்திக்


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024