அமைச்சர்களுக்கு திருவள்ளுவர் கூறும் இரண்டாவது அறிவுரை, அமைச்சராக இருப்பவர் அரசர் விரும்புவதைத் தாமும் விரும்பக் கூடாது என்பது.
உங்கள் பாஸை (Boss-ஐ) மன்னரா கவும் உங்களை அமைச்சராகவும் நினைத்துக் கொண்டால், வள்ளுவர் கூறும் அறிவுரைகள் உங்களுக்கு சாலப் பொருந்தும்! இது என்ன? அரசர் விரும்புவதை அமைச்சர் விரும்பக்கூடாதா? அநியாயமாக இருக்கிறதே -- பாஸ் விருப்பப்பட்டால் அந்தப் பொருளை நானும் விரும்பக்கூடாதா? என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.
அதெல்லாம் சரி, அரசருக்குக் கீழே தானே மந்திரி? அரசர் நினைத்ததைச் செய்யமுடியும் -- எதுவாக இருந்தாலும் -- செய்ய முடியும்! மந்திரியால் அது முடியுமா? ஒரு புலவர் அரசவைக்கு வந்து அவரைப் புகழ்ந்து பாடுகின்றாரே, மன்னருக்கு எட்டு பாட்டு என்றால் நம்மையும் புகழ்ந்து ஒரு பாட்டாவது பாடட்டுமே என்று மந்திரி நினைக்கலாமா?
அலுவலகத்தில் எல்லோரும் பாஸை புகழ்ந்து பேசுவது இயற்கை. அதற்கு நீங்கள் ஆசைப்படக்கூடாது. பாஸ் தாமதமாக வரலாம். நீங்கள் அதைச் செய்ய முடியாது. அவர் மதிய உணவுக்கு வெளியில் போவதால் நீங்களும் போக நினைக்காதீர்கள். அவர் விழாவில் ஆறு புகைப்படம் எடுத்துக்கொண்டால் நீங்களும் போய் நிற்காதீர்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த அணுகு முறை மாறியிருப்பது போலத் தோன்றலாம். ஆனால் ஒரு பாஸை பெயர் சொல்லி கூப்பிடும் உரிமை இருப்பதாலேயே பாஸின் அடிப்படை மனப்பான்மை மாறி விட்டதாக எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அப்பாக்களும், ஆசான்களும் எக்காலத்திலும் மதிப்பையும் மரியாைதயையும் எதிர் பார்ப்பார்கள்! பாஸ்களும் அப்படித்தான்!!
‘சார், சார்” என்று அவரைத் தூக்கி வைத்து அவர்; தனி, உயர்வானவர் என்று சொல்லுங்கள், நடந்து கொள்ளுங்கள். பெரும்பாலான பாஸ்கள் தங்கள் கீழ்வேலை செய்பவர்கள் தங்களைப் போல, தங்களுக்குச் சமமாக எந்த விதத்திலும் -- நடந்துகொள்வதை விரும்புவதில்லை.
கொஞ்சம் கீழே வைத்துப் பார்ப்பதையே விரும்புகின்றார்கள். தயவு செய்து இந்த உளவியல் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி நடந்துகொண்டால் சர்வ வல்லமை பொருந்திய அரசனைப் போல உங்கள் பாஸும் உங்களுக்கு நிலையான நன்மைகளைத் தருவார். உங்களை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோவார்.
முக்கியமாக நீங்கள் அவரை விட புத்திசாலியாகவோ திறமைசாலியாகவோ இருந்து விட்டால், எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நீங்கள் பாஸின் இடத்திற்குச் சவாலாக இருப்பதாக எடுத்துக் கொண்டு விடுவார். எனவே அடக்கியே வாசியுங்கள்!
குறளின் குரலில் இதைக் கேட்போமா?
மன்னர் விழைய விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்
-சோம வீரப்பன்
somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment