Thursday, December 18, 2014

மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டி செயல்


logo

இஸ்லாம் பல சாத்வீகமான, அன்பு நெறியான கோட்பாடுகளை உலகுக்கு போதித்து வருகிறது. அதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்ந்து கொடூர செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் (ஐ.எஸ்.) அமைக்கவேண்டுமென தலீபான் இயக்கம் மிகத்தீவிரமாக உள்ளது. தலீபான் இயக்கத்தை அழிக்க, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. பாகிஸ்தானும், அமெரிக்காவின் உதவியையும் பெற்று, தலீபான் இயக்கத்தை தங்கள் நாட்டில் கால் ஊன்றிவிட அனுமதிக்கக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் இயக்கம் ஆட்சி நடத்தியபோது, 2001–ம் ஆண்டில் அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது பாகிஸ்தானில், அமெரிக்காவிற்கு விரோதமாகவும், தலீபான்களுக்கு ஆதரவாகவும் 13 தீவிரவாத அமைப்புகள் ஆளுக்கொரு பக்கம் குரல் கொடுத்த நிலையில், 2007–ம் ஆண்டு அவர்கள் அனைவரும் நாங்கள் எல்லாம் ஒன்றாக இணைகிறோம். எங்கள் அமைப்பிற்கு பெயர், ‘தெஹ்ரி–இ–தலீபான் பாகிஸ்தான்’ என்று பெயர் சூட்டிக்கொண்டனர். பாகிஸ்தானுக்கு உள்ளேயே இருந்துகொண்டு, பாகிஸ்தானுக்கே எதிரான தலீபான் அமைப்புக்கு ஆதரவான இந்த தீவிரவாத இயக்கத்திற்கு பைதுல்லா மசூத் என்பவரே தலைவராக இருந்தார். பாகிஸ்தான் இந்த இயக்கத்தை நசுக்க எவ்வளவோ முயற்சிசெய்தது, ஆனால் முடியவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா அனுப்பிய ஆள் இல்லாத நவீன விமானம், இந்த இயக்க தலைவர் பைதுல்லா மசூத்தை சுட்டு வீழ்த்தி கொன்றது. அவருடைய இடத்தில் ஹக்கிமுல்லா மசூத் என்பவர் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2012–ம் ஆண்டில் கல்விக்காக குரல் எழுப்பிய மலாலா என்ற மாணவி மீது தலீபான் இயக்கம் துப்பாக்கி சூடு நடத்தியதால், ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உயிர்பிழைத்து இப்போது பாகிஸ்தானுக்குள் செல்லமுடியாத நிலையில் இருக்கிறார். இந்த துணிச்சலான செயலுக்காக அவர் நோபல் பரிசு வாங்கிய சில நாட்களில் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லை அருகில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினர் நடத்தும் ஒரு பொது பள்ளிக்கூடத்தில், சின்னஞ்சிறு குழந்தைகள் சாம்பல் நிறத்தில் முழுக்கால் சட்டையும், பச்சை நிறத்தில் பிளேசர் கோட்டும் அணிந்து உற்சாகமாக பாடம் படித்துக்கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் அந்த பள்ளிக்கூடத்திற்கு பின்னால் உள்ள அடக்கஸ்தலம் வழியாக 9 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ உடையில் உள்ளே நுழைந்து பிஞ்சு மலர்களான அந்த மாணவர்களை ஒவ்வொரு வகுப்பிலும் உள்ளே நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டு இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், உங்களை எல்லாம் கொல்லப்போகிறோம், பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டே கொன்று இருக்கிறார்கள். இதில், 132 குழந்தைகளும், 9 ஆசிரியர்களும் பலியாகி இருக்கிறார்கள். 250 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். பிழைத்தவர்கள் மறக்கவே முடியாத இந்த சம்பவமாக, அவர்கள் கண் எதிரிலேயே ஒரு ஆசிரியையை நாற்காலியில் கட்டி உயிரோடு தீவைத்து இருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற, கோழைத்தனமான செயலை செய்துவிட்டு, நாங்கள்தான் செய்தோம் என்று பெருமையுடன் கூறி, ராணுவத்தினரை பழிவாங்க செய்ததாக சப்பைக்கெட்டு கட்டியிருக்கிறார்கள். ராணுவத்தினரை பழிவாங்க செய்யவேண்டும் என்றால், ராணுவத்துடன் மோதவேண்டும்.

பாகிஸ்தான் தன் நாட்டுக்குள் செயல்பட்ட தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும். தீவிரவாத இயங்கங்களை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும். இப்போது பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தின் வலி புரிந்து இருக்கும். தன்நாட்டிலும் தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும், அண்டை நாடான இந்தியாவுக்குள்ளும் தீவிரவாதிகளை அனுப்புவது எவ்வளவு தவறு என்று இப்போது புரிந்திருக்கும். மொத்தத்தில், தங்கள் நாட்டிலும் தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும், இந்தியாவிற்குள் அனுப்புவதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும் நிறுத்தவேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்கிறது என்று பிரதமர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள பள்ளிக்கூட மாணவர்கள் எல்லாம் நேற்று மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த துயரமான சம்பவத்திற்காக உலகமே கண்ணீர் வடிக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024