வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான காலம் என்றால், அது மாணவ பருவகாலம்தான். ஒவ்வொருவரின் எதிர்காலத்துக்கும் பாதை அமைப்பதும் இந்த நாட்கள்தான். பள்ளிக்கூட கல்விதான் இதில் முக்கியமானதாகும். அதனால்தான் பள்ளிக்கூட கல்விக்கு மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆண்டு முழுவதும் பாடம், படிப்பு, பள்ளிக்கூடம் என்று இயந்திரகதியில் உழன்று கொண்டிருக்கும் மாணவபருவத்தில், ஆண்டுக்கு ஒருமுறை பக்கத்திலேயோ, தூரத்திலேயோ உள்ள இடங்களுக்கு கல்வி சுற்றுலா செல்லும் நிகழ்வுதான் மகிழ்ச்சியையும், பலனையும் தருவதாகும். பொதுவாக பிள்ளைகளை கல்வி சுற்றுலாவுக்காக வெளியூர்களுக்கு அனுப்பிட்டு அவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் பயந்துகொண்டு இருப்பார்கள். ஆனால், பாதுகாப்பான சுற்றுலா பயணத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஒரு சுற்றறிக்கை சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 11 அறிவுரைகள் அடங்கியுள்ளன. முதல் அம்சமே இனி பள்ளிக்கூடங்களில் பாடத்திட்டத்துக்கு தொடர்புள்ளதும், கண்டிப்பாக தேவை என்ற நிலையிலும் மட்டுமே சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வடமாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், அங்குள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் குளித்துக்கொண்டிருப்பது தெரியாமல் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 24 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்தான் இந்த முடிவுக்கு காரணமாகும். இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க அணைக்கட்டு பகுதிகள், மின்சார உற்பத்தி நிலையங்கள், கடற்கரை பகுதிகள் போன்ற பகுதிகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச்சென்றால், முதலிலேயே மாவட்ட கலெக்டருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும். மாணவர்களுடன் ஒரு மூத்த ஆசிரியர் கண்டிப்பாக செல்லவேண்டும். மாணவிகள் சென்றால் கண்டிப்பாக ஆசிரியைகள் செல்லவேண்டும். எந்த இடத்துக்கு போனாலும் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை தங்களுடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுபோல பல நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான இத்தகைய நடவடிக்கைகள் நிச்சயமாக தேவைதான்.
பொதுவாக மத்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை, மாநில அரசுகளும் பின்பற்றுவது வழக்கம். தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் இப்போது கல்வி சுற்றுலா பெருமளவில் குறைந்துவிட்டது. இதுபோன்ற அறிவுரைகளை தமிழக பள்ளிக்கூடங்களும் பின்பற்றவேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் கோரிக்கையாகும். தமிழக கல்வித்துறையில் முதல் வகுப்பு முதல் 8–வது வகுப்பு வரைக்கும் உள்ள பாடத்திட்டத்தில் 60 மதிப்பெண்கள் அவர்களின் பாடத்தில் உள்ள கேள்விகளுக்கும், 40 மதிப்பெண்கள் அவர்கள் பார்த்து, நேரடியாக அறிந்து, உணர்ந்து எழுதும் கேள்விகளுக்கும் வழங்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சரித்திர பாடத்துக்கு சரித்திரம் சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்த்து எழுதவேண்டும். தபால் அனுப்பப்படுவது பற்றி எழுத தபால் நிலையத்தின் பணிகளை நேரில் பார்த்து எழுதவேண்டும். ஆனால், பல பள்ளிக்கூடங்களில் இதுபோல இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதில்லை. ‘புராஜக்ட் ஒர்க்’ அதாவது திட்ட வேலை என்று சொல்லி ‘சார்ட்டு’ செய்துவிட்டு வா என்று சொல்லிவிடுகிறார்கள். மாணவர்களும் பெற்றோரை செய்ய சொல்லி வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். அல்லது கடையிலேயே இப்போதெல்லாம் வைத்திருக்கிறார்கள். அங்கு போய் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இதெல்லாம் பயனளிக்காது. எதையும் நேரில் சென்று பார்ப்பதால் அறிவு விசாலம் அடையும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவச கல்வி, இலவச பாடப்புத்தகம், இலவச சைக்கிள், இலவச லேப்–டாப், இலவச சீருடை என்று எத்தனையோ பொருட்களை இலவசமாகவே அனைத்தையும் தமிழக அரசு வழங்குவதுபோல, மாணவர்களின் நேரடி பட்டறிவுக்கும், அனுபவத்துக்கும் பயனளிக்கும் கல்வித்திட்டம் தொடர்பான இலவச சுற்றுலா பயணங்களையும் ஆண்டுக்கு ஒருமுறை தூர இடங்களுக்கும், அவ்வப்போது அதே ஊரில் உள்ள இடங்களுக்கும் அழைத்துச்செல்வதற்காக ஓரளவு மானியங்களையும், உதவிகளையும் வழங்கவேண்டும். பெற்றோரும், பெற்றோர்–ஆசிரியர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதுபோல மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்கு பணம் செலவழிக்க தயங்கக்கூடாது. பாடத்திட்டத்திலும் இதை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment