Sunday, December 21, 2014

மீத்தேன் திட்டமென்ற பூதம்

தஞ்சை மாவட்டத்தில், மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தினசரி ஒரு போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், திட்டத்துக்கு உரிமம் பெற்ற ‘கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ தன்னுடைய அலுவலகத்தைக் காலி செய்து கிளம்பிவிட்டதாக செய்தி ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது நிரந்தர வெளியேற்றமா, அல்லது பதுங்கித் தாக்குவதற்கான முன்னேற்பாடா என்று தெரியவில்லை. தமிழக அரசு அந்நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிதல் ஒப்பந்தம் இம்மாதத்துடன் முடிவடைந்தாலும், அதை மறுபடியும் புதுப்பிப்பார்களா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டம் கொண்டுவரப் போவதால் மக்கள் படப்போகும் பாடு பற்றி அச்சம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தினால் அடிபணிந்து ஐம்பூதங் களை வணங்கிய மனிதனின் பேராசை, அவற்றை அடக்கியாண்டு பொருள் சேர்க்க முற்பட்டதில், பெரும் சேதமடைந்தது தஞ்சைத் தரணியே. நெல் உற்பத்தியைப் பெருக்குவோமென்று வேதிப்பொருட்களினாலான உரத்தையும், பூச்சிக்கொல்லிகளையும் இட்டு மண்ணை விஷமாக்கியதோடு, குறுகிய காலப் பயிர்களால் நீரின் தேவையைப் பெருக்க வைத்து தஞ்சை விவசாயிகளைத் தரித்திரமாக்கியது மத்திய அரசின் விவசாயக் கொள்கைகளே. ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று பாடப்பட்ட காவிரியும் குறுகிய நீர்ப் பாசனக் கொள்கையினால் முடமாக்கப்பட்டாள்.

உள்நாட்டிலேயே இடப்பெயர்வு

நிலவளத்தைப் பெருக்கி உணவு உற்பத்தியை உயர்த்த முன்வராத அரசுகள், பெருவாரியான விளைநிலங்களைக் கட்டுமானத்துக்கும் இதர தொழில்களுக்கும் கபளீகரம் செய்ய முற்பட்டன. காவிரிப் படுகையில் எண்ணெய் வளம், இயற்கை வாயு கிடைக்கிறதா என்று மண்தோண்டும் ராட்சச இயந்திரங்களுடன் முதலில் களமிறங்கியது எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி) மாபெரும் குழாய்களைப் பதிக்கத் தோண்டிய முயற்சி களில் பல கிராமவாசிகளின் வீடுகள் இரண்டாகப் பிளந்தன. இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு ஏதும் கொடுக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு களை அதிகரிப்போமென்று விளம்பரப்படுத்திய அந்நிறுவனத்தில், மண்ணின் மைந்தர்கள் சிலர் மட்டுமே காவலர்களாகவும், கடைநிலை ஊழியர்களாகவும் அமர்த்தப்பட்டார்கள்.

தொழிற்பேட்டைகளும் தொழிற்பூங்காக்களும் தமிழகம் முழுதும் அமைக்கப்போகிறோமென்று 1997-ல் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு தொழில் காரணங் களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் சட்ட’த்தின்கீழ், ஆயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் அரசால் சொற்ப நஷ்டஈட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அடி மாட்டு விலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் வழங்கப்பட்டதும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக ஆக்கப்பட்டதும் கொடுமையிலும் கொடுமை.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபின், ஒவ்வொரு புதிய மாவட்டத்திலும் ஆட்சியருக்கான நவீன அலுவலக வளாகங்கள் கட்டுவதற்காக நூற்றுக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. திருவாரூர் மாவட்ட அலுவலகம் அமைக்க முயன்றதில் விளமல் கிராமமே காணாமல் போய்விட்டது.

விளமலா, லண்டனா?

அந்தக் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியபோது முதல்வர் கருணாநிதி, 27.7.2010 ஆற்றிய உரையின் ஒரு பகுதி:-

“என்னுடைய நண்பன் தென்னனைப் பார்த்து, ‘என்னப்பா, திருவாரூரே மாறிப்போய்விட்டதே!’ என்று வியப்புடன் சொன்னேன். காரணம்? இந்த விளமல் கிராமத்துப் பகுதியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு பரவசமடைந்திருக்கும் அளவுக்கு விளமல் கிராமம் என்றைக்கும் காட்சியளித்த தில்லை. இன்றைக்கு விளமல் நாம் விளம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக, அவ்வளவு ரம்மியமாக இத்தனை கட்டிடங்களா? நான் திருவாரூரிலே ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? இல்லை, தமிழ் நாட்டிலே உள்ள ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? அல்லது இங்கிலாந்து நாட்டிலே லண்டன் நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்தைப் பார்க்கிறேனா? என்று ஐயப்படும் அளவுக்கு, இப்படி திரும்பி ஒருமுறை கண்ணைச் சுழற்றினால் கட்டிடங்களாக_- வரிசையாகத் தென்படும் அந்தக் காட்சியை நாம் காண்கிறோம். இந்தக் காட்சி எனக்கு எந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறதென்றால், இது திருவாரூரோடு நிற்காமல், தஞ்சாவூரோடு நிற்காமல், குடந்தையோடு நிற்காமல், மன்னார்குடியோடு நிற்காமல், எல்லா ஊரிலும் இத்தகைய கட்டிடங்கள், இத்தகைய வளர்ச்சிகள் தமிழகத்திலே வர வேண்டும், அந்தக் காட்சியைக் காண வேண்டும்.”

நிலக்கரிப் படுகை மீத்தேன்

அந்தப் பூமியில்தான் இன்று புதிதாக மீத்தேன் திட்டமென்ற பூதம் கிளம்பியுள்ளது. அது என்ன மீத்தேன் திட்டம்? தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, முஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதிவரை காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும் அதனுடன் சேர்ந்த மீத்தேன் எரிவாயுவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இயற்கை எரிவாயுவின் மிக முக்கியமான ஆற்றல் தரும் வாயு மீத்தேன். நிலக்கரிப் படிமங்களில் காணப்படும் மீத்தேன் ‘நிலக்கரிப் படுகை மீத்தேன்’ என்றழைக்கப்படுகிறது. நிலக்கரி மீது நுண்ணுயிர்கள் செயல்புரிந்ததாலோ அல்லது அதி யாழத்தில் புதைந் துள்ள நிலக்கரிப் படிமங்கள்மீது உருவான கடும் வெப்ப உயர்வாலோ ‘நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு’ உருவாகியிருக்க வேண்டும். நீரில் மூழ்கியுள்ள நிலக்கரியோடு நீர் அழுத்தத்தால் மீத்தேன் வாயுவும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க ‘கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. நிலத்தைத் தோண்ட உரிமை வழங்கி, மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் அளிக்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.01.2011 தேதியன்று அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் திடப்பட்டது.

நீராதாரத்தை அழிக்கும் திட்டம்

மீத்தேன் வாயுவை வணிகப் பயன்பாட்டுக்காக வெளியே கொண்டுவருவது எப்படி என்பது பற்றி தமிழ் நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் வெளியிட்டுள்ள மீத்தேன் எடுப்பு எதிர்ப்பு விளக்கக் கையேடு இவ்வாறு கூறுகிறது:

“மன்னார்குடிப் பகுதி நிலக்கரிப் படுகைகள் தரைமட்டத்துக்குக் கீழே 500 அடி முதல் 1,650 அடி ஆழம் வரை காணப்படுகின்றன. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்தப் படுகைகளை அழுத்திக்கொண்டுள்ளது. இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப் பாறைகளிலிருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப் பாறைமீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே, மீத்தேன் வாயு வெளிவர முடியும். அடுத்த கட்டமாக, வெற்றிடம் உண்டாக்கும் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1,650 அடிவரை வெளியேற்றப்படும்போது காவிரிப் படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவதோடு மன்னார்குடி நிலக்கரிப் படுகையிலிருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்குத் தொடர்புள்ள நிலத்தடி நீர்த் தாரைகள் அனைத்தும் வறண்டுபோகும். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக அருகில் உள்ள வங்கக் கடலின் உப்பு நீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும்போது, காவிரிப் படுகையே உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், நிலம் உள்வாங்குதல் போன்ற அபாயங்களும் நிகழ வாய்ப்பு உண்டு.”

நவீன அடிமைத்தனம்

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அனைத்திலும் தங்கள் பிடிப்பை வலுப்படுத்திக் கொண்டுவரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் மத்திய - மாநில அரசுகளை என்ன சொல்வது? உலகமயமாக்கலிலும் தனியார்மயத்திலும் நமது வாழ்வாதாரங்களைப் பறித்து, மீண்டுமொரு நவீன அடிமைத்தனத்துக்கு நாம் உள்ளாக்கப்பட்டுவருவதன் அடுத்த அவதாரம்தான், தஞ்சை மாவட்டத்தில் தொடங்கப்போகும் மீத்தேன் வாயுத் திட்டம். பூமியில் புதையுண்டு கிடக்கும் மீத்தேனை வெளிக்கொண்டுவந்து, அதை வணிகரீதியில் பயன்படுத்த விழையும் பன்னாட்டு நிறுவனங்கள் பல. அந்த நிறுவனங்களை அழைத்து அனைத்துச் சலுகை களையும் வழங்கும் அதே சமயத்தில், விளைநிலங்களை வீணடித்து நமது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளைகள்பற்றி மக்களிடையே சரியான புரிதலை உருவாக்க வேண்டும்.

நிலமிழக்கப்போகும் விவசாயிகள் மட்டுமன்றி, அப்பகுதி மக்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் என்பதுடன், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் தலித் மக்களையும் இணைத்து நடத்தப்போகும் எழுச்சிப் போராட்டங்கள் மட்டுமே மீத்தேன் திட்டமென்ற பூதத்திட மிருந்து தஞ்சைத் தரணியை மீட்கும்.

- கே. சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...