Monday, December 29, 2014

திரை விமர்சனம்: மீகாமன்....சினிமா » இந்து டாக்கீஸ்

Return to frontpage





மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். இங்கே போதைக் கும்பலை வேரறுக்கும் நடவடிக்கையை முன்னின்று நடத்தும் ஒருவன் அதை எப்படிச் செய்கிறான் என்பதுதான் கதை.

கடற்கரையில் கிடக்கும் பிணங்கள், போதை மருந்துக் கும்பலிடமிருந்தே திருடப்படும் சரக்கு மூட்டைகள், உள்ளே கருங்காலி இருப்பதை அறிந்து அவனுக்கு வலை வீசும் மனித வேட்டை, யாருமே பார்த்திராத நிழல் உலகத் தலைவன், கும்பலைப் பிடிக்கக் காவல் துறையின் ரகசிய வலை வீச்சு, அந்தத் துறைக்குள்ளேயே அதற்கு எதிரான சதி என்று த்ரில்லர் களத்தில் நின்று விளையாடுகிறது மகிழ்திருமேனியின் ‘மீகாமன்’.

கோவாவில் இருக்கும் போதை மருந்துக் கும்பல் நெட்வொர்க்கில் நான்கு வருடங்களாக வேலை செய்கிறார் சிவா என்கிற அருண் (ஆர்யா). அவ்வளவு நாட்கள் வேலை செய்திருந் தாலும் அந்த நெட்வொர்க் தலைவனைப் பார்க்க முடியாத அளவுக்குக் கெடுபிடிகளும், இறுக்கமான செயல்முறைகளும் கொண்ட நெட்வொர்க் அது. இதேபோல அவரது சகா ரமணாவும் குஜராத்தில் இன்னொரு கும்பலிடம் நெருங்குகிறார்.

மும்பையிலிருந்து 1000 கிலோ கொகைனை கோவாவில் இருக்கும் ஜோதியின் அமைப் பிடம் விற்க ஏற்பாடு நடக்கிறது. இந்தப் பரிவர்த்தனையில் குறுக்குச் சால் ஓட்டி மடக்குவது காவல் துறையின் திட்டம். துறைக்குள்ளேயே சிலர் இந்தத் திட்டத்துக்கு கட்டைபோட, திட்டம் தாறுமாறாகிவிடுகிறது. ஆர்யாவும் அவர் சகாவும் சிக்கிக்கொள்ள, பிரச்சினை தீவிரமடைகிறது.

ஆர்யா எப்படித் தப்பித்தார்? காவல் துறையின் துணை கொண்ட இந்தக் கும்பல்களின் கதி என்ன ஆயிற்று?

வழக்கம்போல நிழல் உலக நெட்வொர்க்கை அழிக்கும் போலீஸ் கதைதான். ஆனாலும், நெருக்கமான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை யின் மூலம் புத்தம் புதிதாய் உணரச் செய் கிறார் மகிழ். அடுத்து என்ன என்பதைப் பதைபதைப் பூட்டும் வகையிலும் சில சமயம் ரத்தமும் சதையுமாகவும் காண்பித்திருக்கிறார்கள்.

கும்பலின் தலைவன் யார் என்று நான்கைந்து பேருக்கு மட்டுமே தெரியும். பொது இடங்களில் சாதாரணமாகப் பயணிப்பான். அவனிடம் பேசினாலும் கண்டுபிடிக்க முடியாது. மது, மாது போன்ற எந்தச் சபலமும் இல்லாத அக்மார்க் வில்லனைத் தீர்த்துக்கட்டும் கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மகிழ்திருமேனி.

பல பாத்திரங்களையும் கதையின் பின்புலத் தையும் அறிமுகப்படுத்துவதற்கான தொடக்கக் காட்சிகள் சற்றே மெதுவாக நகர்கின்றன. கதா நாயகி அறிமுகமும் இந்தச் சமயத்தில் நடந்து நம்மைச் சோதிக்கிறது. அந்த நேரத்தில் காவல் துறை விரிக்கும் ரகசிய வலையைக் காட்டிப் பரபரப்பைக் கிளப்பிவிடுகிறார் இயக்குநர். அடுத்தடுத்த காட்சிகளை யும் திருப்பங்களையும் வேகமாகவும் பெருமளவு நம்பகத்தன்மையுடனும் அமைத்து ரசிகர்களைக் கட்டிப் போடுகிறார்.

கதைக்குத் தேவையாக இருந்தா லும் ஆளை அறுக்க வரும் ரம்பத்தின் சத்தத்தைக் கேட்க முடியவில்லை. இடைவேளை சண்டைக் காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம், இரண்டாம் பாதியில் ஹீரோயிஸம் தூக்கலாக இருப்பதையும் ஏற்க முடியவில்லை.

இதுபோன்ற வேடங்களுக்கென்றே பிறந்ததுபோன்ற பார்வையுடன் வரும் ஆர்யா கச்சிதம். குறிப் பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்து கிறார். ஹன்சிகாவுக்கு நடனம் சொல்லித்தரும்போது தன் நெருக்கடியை மீறி மெலிதாகச் சிரிக்கும் இடத்தில் அவர் நடிப்பு நன்றாக உள்ளது.

ஹன்சிகா உற்சாகமும் அழகும் ததும்ப வளையவருகிறார். அவருக் குக் கதையில் பெரிய வேலை இல்லை. புதிதாக ஒரு இளைஞ னைப் பார்க்கும்போது அவர் பதற்ற மடைவதும் தன் தோழியுடன் அவனைப் பற்றிப் பேசுவதும் ரசிக்கும்படி இருக்கின்றன.

வில்லன் ஆசுதோஷ் ராணா உடல் மொழியாலும் பார்வையாலும் பார்வையாளருக் குப் பயத்தைக் கடத்துகிறார். ‘உலகத்துல சாவை விட மோசமானது நிறைய இருக்கு’ என்பதுபோன்ற வசனங்கள் பளிச்.

எஸ். தமனின் பின்னணி இசை பயத்தையும் திரில்லையும் சேர்த்துக் கொடுக்கிறது.

இவ்வளவு இரத்தமும் சதையும் தேவையா என்று கேட்கலாம். இரண்டாம் பாதியில் ஹீரோயிஸம் தூக்கலாக இருப்பதைக் கண்டு சலிப்பு ஏற்படலாம். தேவைக்கு மேல் சற்றே நீள்வதை நினைத்து ஆதங்கம் எழலாம். என்றாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024