Monday, December 22, 2014

எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் பாசமலர் ஏற்படுத்திய திருப்பம்

'
பாசமலர்' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாராய் என் தோழி வாராயோ...' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த 'பாசமலர்' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.

மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், 'வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

இந்தப்பாடல் பெரிய 'ஹிட்' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, 'பாசமலர்' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த 'பணமா பாசமா' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.

அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

டைரக்டர் ஸ்ரீதர், 'சிவந்த மண்' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.

அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.

'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த 'ஹம்மிங்', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

அந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகிகளில் பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு இணையாக உயர்ந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஓய்வு இன்றி நிறைய படங்களில் பாடினார்.

அவர் பாடிய மிகப்புகழ் பெற்ற பாடல்களில் சில:

'காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன்.'

'ஆடவரலாம் ஆடவர் எல்லாம் ஆடவரலாம் ஆடவரலாம்.'

'கண்களும் காவடி சிந்தாகட்டும், காளையர் நெஞ்சை பந்தாடட்டும்.'

'அம்மம்மா கேளடி தோழி ஆயிரம் சேதி.'

'துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை.'

'குடிமகனே பெரும் குடிமகனே.'

'பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணி மண்டபம்.'

- இப்படி எண்ணற்றப் பாடல்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழுக்கு புகழ் சேர்த்தன. லட்சக்கணக்கான ரசிகர்களை தேடித்தந்தன.

எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

'கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், 'நந்தி விருது' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'வெண்ணிற ஆடை.' அதில் அவர் பாடும் முதல் பாடலான 'நீ என்பதென்ன... நான் என்பதென்ன...' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.
எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.

எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.'

இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.

'உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராடி புகழின் உச்சிக்கு வந்த நீங்கள், அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக் கொள்ளாதது ஏன்?' என்ற கேள்விக்கு பதில் அளித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறியதாவது:-

'வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த எனது குடும்பத்தை முன்னேறச் செய்யவும், எனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் எனது கவனம் முழுவதும் இருந்ததால், எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.


எனது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் என் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்' என்று கூறினார், எல்.ஆர்.ஈஸ்வரி

Source: MaalaiMalar

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...