எந்தவோர் அறிவியல் கண்டுபிடிப்பிலும் ஏதாவது ஒரு பின்விளைவு இருக்கத்தான் செய்யும். அந்தப் பின்விளைவு ஏற்படுத்தும் பாதிப்பு மிகப்பெரிய ஆபத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் என்றால், அந்த அறிவியல் கண்டுபிடிப்பைத் தவிர்ப்பது அல்லது அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது என்பதுதான் விவேகம்.
அந்தப் பட்டியலில் சேர வேண்டிய கண்டுபிடிப்பு, தற்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள செல்பேசியும், அதற்காக நிறுவப்படும் செல்பேசி கோபுரங்களும்!
உலகிலேயே அதிகமான செல்பேசி பயன்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியாதான். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கடந்த பிப்ரவரி 2013 புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 86.16 கோடி செல்பேசி பயனாளிகள் இருக்கிறார்கள். இப்போது இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டியிருந்தால் வியப்படையத் தேவையில்லை. இந்திய அளவில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் செல்பேசி பயன்படுத்துவோர் உள்ள மாநிலம் தமிழகம்தான்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சென்னையின் மக்கள்தொகை 46 லட்சம். ஆனால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2013-இல் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, சென்னையில் மட்டும் 1.15 கோடி செல்பேசி இணைப்புகள் செயல்படுகின்றன. தில்லிக்கு அடுத்தபடியாக அதிக செல்பேசி இணைப்புகள் உள்ள பெருநகரம் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பேசி இணைப்புகளும் பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்றாற்போல செல்பேசி கோபுரங்களும் அதிகரிப்பது என்பது தவிர்க்க இயலாதது. சென்னை மாநகர எல்லைக்குள் ஏறத்தாழ 6,650 செல்பேசி கோபுரங்கள் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும், முறையான கணக்கெடுப்பு எதுவும் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
தொலைத்தொடர்புத் துறையில், செல்பேசி கோபுரங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க "டெர்ம்' என்கிற தனிப் பிரிவு இயங்குகிறது. செல்பேசி கோபுரங்கள் முறையாக அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அவற்றிலிருந்து வெளியாகும் மின்காந்த அலை
களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு உள்பட்டு இருக்கிறதா என்பதை எல்லாம் கண்காணிக்க வேண்டிய கடமை இந்தப் பிரிவுக்கு உண்டு. ஆயிரக்கணக்கான செல்பேசி கோபுரங்கள் இருக்கும் சென்னை மாநகரில், "டெர்ம்' பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 11 மட்டுமே. இவர்களால் எப்படி அத்தனை கோபுரங்களையும் கண்காணிக்கவோ, தவறுகளைக் கண்டறியவோ முடியும்?
மும்பையில் செல்பேசி கோபுரங்களைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு வீடுகள் இருக்கக் கூடாது என்கிற விதிமுறை இருக்கிறது. தொடர்ந்து இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் செல்பேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வுகளால் தாக்கப்படுபவர்கள் பல்வேறு மருத்துவப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதால்தான், மும்பை மாநகராட்சி இப்படி ஒரு நிபந்தனை விதித்தது.
செல்பேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வுகளால் சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
செல்பேசியிலிருந்தும், செல்பேசி கோபுரங்களிலிருந்தும் வெளிப்படும் மின்காந்த அதிர்வு மூளையைப் பாதிக்கிறது என்றும், தலைவலி, நினைவாற்றல் இழப்பு, மரபணு பாதிப்பு ஆகியவை இதனால் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
செல்பேசி நிறுவனங்கள் தரும் வாடகைக்கு ஆசைப்பட்டு பலரும் தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது செல்பேசி கோபுரங்கள் அமைப்பதை அனுமதிக்கிறார்கள். செல்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதோ, செல்பேசி கோபுரங்கள் அமைப்பதை முற்றிலுமாகத் தவிர்ப்பதோ இனி சாத்தியமில்லை.
ஆனால், செல்பேசி கோபுரங்களை மும்பையில் இருப்பதுபோல, குடியிருப்புகள் இல்லாத பகுதியில் அமைப்பதையும், அவற்றிலிருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வின் அளவு வரம்புக்கு உள்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தவும், கண்காணிக்கவும் முடியும்.
செல்பேசி கோபுரங்கள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பது சென்னை மாநகராட்சியே தவிர, தொலைத்தொடர்புத் துறை அல்ல. சென்னை மாநகராட்சியும், தகவல் தொலைத்தொடர்புத் துறையும் இணைந்து செயல்பட்டு செல்பேசி கோபுரங்களை முறைப்படுத்திக் கண்காணிக்க முன்வர வேண்டும். பொதுமக்களும் செல்பேசி பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்து, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment