Monday, December 22, 2014

மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும்

பணவீக்கம் அல்லது விலைவாசி என்பது ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவையெல்லாமே ‘டிமாண்டு அண்டு சப்ளை’ அதாவது, தேவை மற்றும் சப்ளை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பண்டங்கள் உள்பட அனைத்து பொருட்களின் சப்ளையும், தேவைக்குமேல் அதிகமாக மார்க்கெட்டில் கிடைத்தால், நிச்சயமாக பணவீக்கம் அதாவது விலைவாசி குறையும். தேவைக்கு குறைவான அளவில் சப்ளை இருந்தால் கண்டிப்பாக விலைவாசி, அதாவது பணவீக்கம் உயரும். பணவீக்கம் எந்த அளவில் இருக்கிறது? என்பதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கணக்கிட்டு, நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்ணையும், மொத்த விலைவாசி குறியீட்டு எண்ணையும் அறிவிக்கிறது. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பணவீக்கம் மற்றும் ஏற்றுமதி அளவு விவரம் பெரும் மகிழ்ச்சியையும், முதலீடு மற்றும் வளர்ச்சிப்பாதையில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண், அதாவது பொதுமக்கள் அன்றாடம் சில்லறையாக தங்கள் தேவைக்கு வாங்கும் பொருட்களின் விலையை குறிக்கும் எண், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 11.2 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த மாதத்தில் இது 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதுபோல, மொத்தவிலையை குறிக்கும் மொத்த விலை குறியீட்டு எண் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 7.5 சதவீதமாக இருந்தது, கடந்த மாதத்தில் 0 வாக அதாவது பூஜ்யமாக குறைந்துள்ளது. கடந்த 5½ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக ஒட்டுமொத்த இந்தியாவையே இது ஆச்சரியத்திலும், மகிழ்ச்சி பெருங்கடலிலும் ஆழ்த்தியுள்ளது. இதுபோல உணவுப்பொருள் பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 19.7 சதவீதமாக இருந்தது, இப்போது 0.6 சதவீதமாக சரிந்துள்ளது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவருவதுதான். விலைவாசியை நிர்ணயிப்பதில் பெட்ரோல், டீசல் விலை கணிசமான பங்கை வகிக்கிறது. ஆக, பணவீக்கம் குறைவு, விலைவாசி உயர்வு என்பதற்கெல்லாம் அடிப்படை பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உற்பத்தி செலவையும், போக்குவரத்து செலவையும் பெருமளவில் குறைப்பதால்தான். ஆனால், இதற்கு பொருளாதார நிபுணர்கள் மற்றொரு காரணத்தையும் கூடுதலாக கூறுகிறார்கள். கிராமங்களில் கிடைக்கும் ஊதியம் குறைந்துவிட்டதால், பொதுமக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. ஆனால், பொருட்களை வாங்குபவர்கள் குறைந்துவிட்டதாலும், விலைவாசி குறைந்துவிட்டது என்கிறார்கள். ஆக, இங்கும் ‘டிமாண்டு அண்டு சப்ளை’ தத்துவம்தான் காரணமாக வருகிறது. ஆனால், இந்த அளவுக்கு பணவீக்கம் குறைந்தாலும், அதன் முழு பலன் இன்னும் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். தானியங்கள், அரிசி, கோதுமை, காய்கறிகள், வெங்காயம் விலை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்றாலும், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பால் உள்பட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விலை குறியீட்டு எண் 0 ஆகிவிட்டது என்கிறார்கள். எனவே, மொத்த விலை குறைந்து இருக்க வேண்டும். மொத்தவிலையில் பொருட்கள் வாங்கி, சில்லறை விலைக்கு விற்கும்போது, அதன் தாக்கத்தால் சில்லறை விலையும் இப்போது அறிவித்ததற்கு ஏற்றவகையில் குறைந்து இருக்க வேண்டும். பொதுமக்கள் தாங்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது, ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு விலைவாசியோடு ஒப்பிட்டு கூறிய அளவுக்கு குறைந்த விலையில் கிடைத்தால்தான் அவர்களால் இதையெல்லாம் நம்பமுடியும். ஆனால், மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு குறையவில்லையே என்பதுதான் அவர்களின் ஆதங்கமாகும். இதுபோல, பணவீக்கம் குறையும் நேரத்தில் எல்லாம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதா? என்பதை கண்காணிக்கும் கடமை மத்திய–மாநில அரசுகளுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அன்றாடம் வாங்கும் பொருட்களை குறைந்த விலையில் வாங்கமுடியாமல், விலைவாசி குறியீட்டு எண் குறைந்துவிட்டது என்று வெறும் அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்த பயனுமில்லை. ‘ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதுதான் மக்களின் கருத்து.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024