மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழகத்தில் 95 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வே துறை, பி.எச்.இ.எல். (பெல்), ராணுவத் தொழிற்சாலைகள், வருமான வரி உற்பத்தி அலுவலகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெட்ரோலியத் தொழிலகங்கள் போன்ற வற்றில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.
இந்தியாவிலேயே சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ரயில்வே துறையில் 2012-2013-ல் 82% வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் 18% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் 17% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழக வருமானவரித் துறையில் 2012-ல் சேர்க்கப் பட்ட 384 பேரில் 28 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 356 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 2014-ல் சேர்க்கப்பட்ட 78 பேரில், 75 பேர் வெளிமாநிலத்தவர். 3 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டிலுள்ள உற்பத்தி வரி அலுவலகங்களில், 2012-ல் சேர்க்கப்பட்ட 224 பேரில் 221 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதே போல்தான் ஆவடி, திருச்சி, அரவங்காடு போன்ற இடங்களில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலைகளில் 50% மேல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப் பட்டுள்ளார்கள். திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பி.எச்.இ.எல். தொழிற்சாலைகளில் வெளிமாநிலத்தவரையே அதிகமாகச் சேர்க்கிறார்கள்.
சரோஜினி மஹிஷி ஆணையம்
கர்நாடகத்தில் வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பெறுவதைத் தடுப்பதற்கு சரோஜினி மஹிஷி தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துகிறார்கள். கடந்த 1996-ல் ஒன்றிய அரசு ஊழியர் தேர்வாணையத் தேர்வில் (யூ.பி.எஸ்.சி.) தேறி, வேலை ஆணையுடன் பெங்களூர் தலைமைக் கணக்காயர் அலுவலகத்துக்கு வேலையில் சேரச் சென்ற 19 தமிழ் இளைஞர்களை வேலையில் சேர விடாமல், அதே நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கன்னட ஊழியர்கள் தடுத்துத் திருப்பி அனுப்பினார்கள். சரோஜினி மஹிஷி பரிந்துரையைக் காரணம் காட்டித்தான் அவர்கள் திருப்பி அனுப்பினார்கள்.
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகியவற்றில், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து செல்வோர் அம்மாநில அரசிடம் உள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைய முடியும். அடுத்து, அம்மாநிலங்களில் பிற மாநிலத்தவர்கள் வேலை பார்க்க முடியாது. இது போன்ற உள் அனுமதி வழங்கும் அதிகாரம் கேட்டு மணிப்பூர் சட்டமன்றம் தீர்மானம் போட்டிருக்கிறது. அசாம் மாணவர்கள், ‘வெளியாட்களை வெளியேற்றும் போராட்டம்’ நடத்தியபோது, அவர்களுடன் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி போட்ட ஒப்பந்தத்தின்படி 1971 வரை அசாம் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே உள்ளூர் மக்கள் என்று அங்கீகரிக்கப்பட்டார்கள். ஹரியாணாவில் ஹரியாணாவாசிகளுக்குத் தனியார் துறை, அரசுத் துறை ஆகியவற்றில் அதிக இடஒதுக்கீடு கொடுக்க காங்கிரஸ் கட்சி உட்படப் பல கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
ரயில்வே துறை மற்றும் பிற இந்திய அரசுத் துறை வேலைகளுக்கான தேர்வெழுத பிற மாநிலங்களுக்குப் போன தமிழ் இளைஞர்களை, அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.
குறுக்கு வழியில்…
‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்றும் ‘தனி நாடு வேண்டும்’ என்றும் திமுக 1950-களில் முழக்கம் எழுப்பி, அது மக்களின் பேராதரவைப் பெற்றுவந்த நிலையில், தமிழ் மக்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் நோக்குடன் காமராஜர் ஆட்சியில், புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கப் பட்டன. அப்போது அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைக்குத் தொழி லாளர்களையும் ஊழியர்களையும் சேர்க்கும் வகையில் நடுவண் அரசு ஆணைகள் பிறப்பித்திருந்தன. ஆனால், அந்த முறை பின்னர் கைவிடப்பட்டது. இந்தியாவில் 9 தேர்வெழுதும் மண்டலங்கள் மூலம், வேலைக்குச் சேர்க்கும் முறை வந்தது. பின்னர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி, இந்தியா முழுவதையும் ஒரே மண்டலமாக்கி, ஒவ்வொரு தொழிலுக்கும் தேர்வு நடத்தும் முறை 2006-க்குப் பிறகு வந்தது. இந்த முறை வந்த பிறகு, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வேலை பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு குறுக்கு வழிகளில் வேலை வழங்கும் நடைமுறைகள் உருவாயின.
ரயில்வே துறையைத் தவிர, மற்ற துறைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வெழுத முடியும் என்ற நிலை இருப்பதால், வட மாநிலங்களைச் சேர்ந்த வர்களுக்கு இந்தியில் எழுத வாய்ப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏதாவதொரு அயல் மொழியில் எழுதுவதால் மதிபெண் குறைவாகப் பெறு கிறார்கள். தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வடமாநிலங்களில் மோசடியாக வெளியிடுவது உள்ளிட்ட ஊழல்கள் நடைபெறுகின்றன. இந்த ஊழலால் 2013-ல் நடந்த சி.ஜி.எல்.ஈ. தேர்வு முடிவுகள் வெளியிடப் படுவதை நீதிமன்றம் தடை செய்தது.
கையெழுத்து இல்லை…
வேலைவாய்ப்புக்கான தேர்வு விளம்பரங்களை வடமாநிலங்களில் பல்வேறு இந்தி ஏடுகளில் வெளியிடு கிறார்கள். தமிழ்நாட்டில் உரியவாறு தமிழ் ஏடுகளில் தமிழில் வெளியிடுவதில்லை. அண்மையில், ரயில்வே துறை பணித் தேர்வுக்கு, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த 2 லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங் களை ஒப்புகைக் கையொப்பம் இல்லை என்ற மிகச் சாதாரணமான காரணத்தைக் காட்டித் தள்ளுபடி செய் தார்கள். எனவே, தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கு அனைத்திந்திய அளவில் தேர்வு நடத்தும்போது, இதுபோன்ற மாநிலப் பாகுபாடுகளும் ஊழல்களும் நடைபெறுவதால், தமிழகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உரியவாறு வேலைகள் கிடைப்பதில்லை. இந்நிலை நீடித்தால், இன முரண்களாக மாறிப் பல சிக்கல்கள் உருவாக வழி ஏற்படும்.
நடுவண் அரசு தமிழக அளவில் தேர்வு நடத்தி 90% வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். இந்திய அளவில் நடைபெறும் தேர்வு மூலம் 10 சதவீதத் தினரைத் தமிழகத்துக்குப் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக அரசு, மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலை கிடைப்பதை உறுதி செய்திட சரோஜினி மஹிஷி ஆணையம்போல தமிழகத்துக்கு ஓர் ஆணையத்தை அமைத்துப் பரிந்துரை பெற வேண்டும்.
- பெ. மணியரசன்,
No comments:
Post a Comment