Friday, December 19, 2014

தற்கொலை ஒரு உணர்வுதான், குற்றமல்ல

தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம், பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையையொட்டி, ஒரு வழக்கு மொழி உண்டு. ‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’’ என்பதுதான் அது. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில், இந்தியாவில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்கள் இருக்கின்றன. இதில் பல சட்டங்கள் பயன்படுத்தப்படாமல், பயன்படுத்துவதற்கு தேவையில்லாமல், துருப்பிடித்துக்கிடக்கின்றன. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த சட்டங்கள் தேவையில்லாமல் இப்போதும் இருக்கின்றன. இப்படி தேவையில்லாத சட்டங்கள் பட்டியலில் உள்ள சில சட்டங்கள் வேடிக்கையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, 1861–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட போலீஸ் சட்டத்தின்படி, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் போலீஸ் அதிகாரிகள் தங்கள் தொப்பிகளை கழட்டிவிடவேண்டும். இப்போது இந்தியாவில் மன்னர் யாரும் இல்லாத நிலையில் இப்படி ஒரு சட்டம் தேவையில்லை.

இதுபோல, தேவையில்லாத 90 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்ய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ள மற்றொரு சட்டம், 1860–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் 309–வது பிரிவாகும். இந்த பிரிவு தற்கொலை முயற்சி தொடர்பான பிரிவாகும். இதன்படி, யாராவது தற்கொலை செய்ய முயற்சித்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, ஒரு ஆண்டுகாலம் சாதாரண சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டையுமே விதிக்க வழிஇருக்கிறது. இந்த சட்டத்தை ரத்துசெய்ய இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களும், 4 யூனியன் பிரதேசங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்கொலை முயற்சி என்பது பண்டைய தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. சீத்தலை சாத்தனார் எழுதிய, ‘மணிமேகலை’ காப்பியத்தில் ஆதிரை என்ற பெண், ‘‘நெருப்பு மூட்டி எழுது தீயும் கொல்லா, தீவினை யாட்டியேன்’’ என்று பாடியிருப்பார். அதாவது, தற்கொலை செய்ய தீயில் விழுந்தும் உயிர்பிழைத்த சம்பவம் தொடர்பான வரிகள் இது. தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டம், இங்கிலாந்து நாட்டில் விக்டோரியா ராணி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்ததால், இந்த சட்டம் இந்தியாவிலும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்கொலை முயற்சி என்பது ஒரு கிரிமினல் குற்றமல்ல. இதனால் வேறு யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஒருவன் திருடினாலோ, கொலை செய்தாலோ, தாக்கினாலோ அந்த பாதிப்பு அவனுக்கு கிடையாது, அவனால் வேறு ஒருவர்தான் பாதிக்கப்படுவார். எனவே, அந்த குற்றங்களைப்போல தற்கொலை முயற்சியைக் கருதக்கூடாது. மேலும் இது ஒரு உணர்வு.

வாழ்க்கையில் ஏதாவது சோதனைகள் ஏற்படும்போது, அதை தாங்கிக்கொள்ள முடியாத பலவீனமான மனதுடையவர்கள்தான், உயிர்வாழ பிடிக்காமல், அதை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இத்தகையவர்களுக்கு தேவை அவர்கள் மீது இரக்கமும், கருணையும், மனோரீதியான ஆறுதலும் தான். எப்படி வயிற்றுவலி வந்தால் டாக்டர்களிடம் போகவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதோ, அதேபோல தற்கொலை உணர்வுவந்தால் அதை தீர்ப்பதற்கு மனோதத்துவ சிகிச்சையை பெறவேண்டும் என்ற உணர்வை வளர்க்கவேண்டும். தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்துவிடுபவர்களை ஆறுதல் கூறி, அந்த உணர்வில் இருந்து மீட்க தைரியம் கொடுப்பதற்குபதிலாக, தண்டிப்பதன்மூலம் அந்த உணர்வை மேலும் வளர்ப்பது போலாகிவிடும். தற்கொலையை கிரிமினல் குற்றமாக்குவதை முதலில் பிரான்சு ரத்து செய்தது. தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்க நாடுகள் ரத்து செய்துவிட்டன. இப்போது மத்திய அரசாங்கம் இந்த சட்டத்தை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால், இந்த தற்கொலை முயற்சியை கிரிமினல் குற்றமாக கருதும் சட்டத்தை ரத்துசெய்வதோடு, அரசின் கடமை முடிந்துவிடவில்லை. இந்த உணர்வு மக்களுக்கு வராத அளவு, அப்படி வரும்பட்சத்தில், அதை போக்குவதற்கான வழிகளையும் ஆராய வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024