Friday, December 12, 2014

500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கூடுதல் கட்டணத்தை அரசே செலுத்தும் தமிழ்நாட்டில் அனைத்துவகை மின்நுகர்வோருக்கும் மின்கட்டணம் 15 சதவீதம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது


தமிழ்நாட்டில் அனைத்துவகை மின்நுகர்வோருக்கும் மின்சார கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை,

மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வந்தது.

மின்கட்டணம் உயர்வு

இந்த நிலையில், மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் எஸ்.குணசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தானாக முன்வந்து மின் கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பான பொது அறிவிப்பினை 23.9.2014 மற்றும் 24.9.2014 அன்று செய்தித்தாள்களிலும், ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிட்டு பொதுமக்கள், சம்மந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள், ஆலோசனைகள் கோரப்பட்டன.

ஆட்சேபனைகள் ஆலோசனைகள் அனுப்புவதற்கான கடைசிநாள் 31.10.2014 என நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆணையத்தின் மின் கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை மாற்றிமைப்பதற்கான செயற்குறிப்பு 13.10.2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மாநில ஆலோசனை குழுவின் 28-வது கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.

15 சதவீதம் அதிகரிப்பு

ஆணையத்தின் இந்த செயற்குறிப்பு மீது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள் ஆலோசனைகளை பெறுவதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் 24.10.2014 அன்று சென்னையிலும், 28.10.2014 அன்று நெல்லையிலும் மற்றும் 31.10.2014 அன்று ஈரோட்டிலும் நடத்தப்பட்டன.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள், ஆலோசனைகளை கருத்தில்கொண்டு பல்வேறு மின்நுகர்வோர் வகையினருக்கான மின் கட்டணம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கான மின் செலுத்துதல் கட்டணங்களை பின்னிணைப்பில் கண்டுள்ளவாறு வெள்ளிக்கிழமை (இன்று) முதல் நடைமுறைக்கு வருமாறு ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு அனைத்து நுகர்வோர் வகையினருக்கும் 15 சதவீதம் அளவு இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வீடுகளுக்கு எவ்வளவு?

புதிய கட்டண விகிதம் பற்றிய விவரம் வருமாறு:-

* வீடுகள் 2 மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் ரூ.2.60 லிருந்து ரூ.3 ஆக உயர்ந்துள்ளது.

* 200 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.80 லிருந்து ரூ.3.25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

* 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3 லிருந்து ரூ.3.50 ஆகவும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான 300 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.4 லிருந்து ரூ.4.60 ஆகவும், 501 யூனிட் மற்றும் அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.5.75 லிருந்து ரூ.6.60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

வழிபாட்டு தலங்கள்

* வழிபாட்டு தலங்களை பொறுத்தமட்டில் 120 யூனிட் வரை பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5 லிருந்து ரூ.5.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.

* குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ3.50 லிருந்து ரூ.4 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.4 லிருந்து ரூ.4.60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

* விசைத்தறிகளை பொறுத்த மட்டில் 2 மாதம் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.4.50 லிருந்து ரூ.5.20 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகள்-கல்விநிறுவனங்கள்

* தொழிற்சாலைகளை பொருத்தமட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து யூனிட்டுகளும் மின் கட்டணம் ரூ.5.50லிருந்து ரூ.6.35 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

* வணிக நிறுவனங்களுக்கு 2 மாதத்திற்கு 100 யூனிட் வரை ரூ.4.30லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது. 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.7லிருந்து ரூ.8.05 ஆக உயர்த்தப்படுகிறது.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5-லிருந்து ரூ.5.75 ஆகவும், தனியார் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.50-லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

* தற்காலிக செயல்பாடுகளுக்கான தற்காலிக மின்சாரம் வழங்கல் மற்றும் கட்டுமானம் மற்றும் ஆடம்பர மின்னொளியூட்டலுக்கு ரூ.10.50-லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்படுகிறது.

நிலைகட்டணம்

* நிலைகட்டணமாக வீடுகளுக்கு 2 மாதம் 100 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.20 லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

* 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.30-லிருந்து ரூ.40 ஆகவும், 500-க்கு மேல் பயன்படுத்தினால் ரூ.40 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகளுக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும், இருப்பு பாதைகளுக்கு 250 ரூபாயில் இருந்து ரூ.300 ஆகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும், வணிக நிறுவனங்கள், தற்காலிக விநியோகத்துக்கும் 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த மின்சார கட்டண உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழக அரசே ஏற்கும்

2 மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர் எவருக்கும் எந்தவித கூடுதல் சுமையும் இல்லாத வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

அதாவது 2 மாதங்களில் 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின்கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும் என்றும், மின்கட்டணத்தில் அவர்களுக்கு எந்தவித உயர்வும் இல்லை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024