மாவட்டங்களுக்கு இடையே 5 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் பேருந்து சேவை தொடக்கம்:
சென்னையில் இருந்து 800 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றனமாவட்டங்களுக்கு இடையே 5 மாதங்களுக்கு பிறகு அரசு விரைவு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.படம்: பு.க.பிரவீன்
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக மாவட்டங்களுக்கு இடையே கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கு கிறது. சென்னையில் இருந்து மட்டும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு முதல்கட்டமாக 800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக் கப்பட்டதால், தமிழகத்தில் கடந்த ஜூன் 25-ம் தேதி முதல் 5 மாதங்களாக பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங் கில் அவ்வப்போது பல தளர்வு கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகம் 8 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு, ஜூன் 1-ம் தேதி முதல் மண்டலங்களுக்குள் மட்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டலம் தவிர மற்ற மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பயணிகள் கூட்டம் அதிகரித்த தாலும், கரோனா தொற்று குறை யாததாலும் ஒரு மாதத்திலேயே பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து தொடங் கியது. மாவட்டங்களுக்கு இடையே செல்ல அனுமதி இல்லாததால் தனியார் பேருந்துகள் இயக்கப்பட வில்லை.
இதையடுத்து, மாவட்டங் களுக்கு இடையிலும் செப்டம்பர் 7-ம் தேதி (இன்று) முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறி வித்தார். இதையடுத்து, விரைவுப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.
அதன்படி, குறுகிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு, சொகுசு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழக அரசு விரைவு போக்கு வரத்து கழகம் மூலம் சென்னை யில் இருந்து திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு முதல்கட்டமாக 260 பேருந்துகள் சேவை இன்று காலை தொடங்குகிறது.
இதேபோல, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முதல்கட்டமாக சென்னையில் இருந்து 360 பேருந்துகளும், கும்பகோணம், சேலம் அரசு போக்குவரத்து கழகங்கள் சார் பில் 180 என மொத்தம் 800 அரசு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பயணிகளின் வருகையை கருத் தில்கொண்டு, தேவைக்கு ஏற்றவாறு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்கு வரத்து கழகங்கள் தெரிவித் துள்ளன.
வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள் ளது. அதனால் திருப்பதி, பெங்க ளூரு, புதுச்சேரி, திருவனந்தபுரத் துக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாது.
இதுதொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறிய தாவது:
தமிழக அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி, ஒவ்வொரு பேருந்திலும் இருக்கையில் குறியீடு, கிருமிநாசினி தெளிப்பது, ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கையுறை, முகக் கவசங்கள் வழங்குவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப் பான பயணம் மேற்கொள்ளும் வகையில் போதிய ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
வழக்கமாக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தினமும் 3,200-க் கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படும். தற்போது கரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைவாக இருக்கும் என்றே கருதுகிறோம். இருப் பினும், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் முதல்கட்டமாக வெளியூர்களுக்கு 800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகை அதிகமாகும்போது, உடனுக்குடன் பேருந்துகளை அதிகரித்து இயக்கவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.
ஆம்னி பேருந்துகள் செப். 30 வரை ஓடாது
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை நம்பியுள்ள ஓட்டுநர்கள், உதவியாளர்கள், பராமரிப்பாளர்கள், அலுவலக ஊழியர்கள் என மொத்தம் 51 ஆயிரம் பேர் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களுக்கு இடையே இன்றுமுதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கப்படும் நிலையில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது:
கரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, கரோனா ஊரடங்கு காலத்தை கணக்கிட்டு 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.
ஆம்னி பேருந்துகளில் 100 சதவீதம் பயணிகளுடன் இயக்க அனுமதிக்க வேண்டும். ஏசி வசதியுள்ள பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எனவே, வரும் 30-ம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.