Monday, September 7, 2020

இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயம்: பாரம்பரிய உடை அணிந்து வர அறிவுறுத்தல்

இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயம்: பாரம்பரிய உடை அணிந்து வர அறிவுறுத்தல்

சென்னை

இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய உடை அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 120 கோயில்கள் உள்ளன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் செப்.1 முதல்தமிழகம் முழுவதும் அனைத்துகோயில்களும் திறக்கப்பட்டன. வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் உள்ளிட்டகோயில்களின் இணையதளத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பக்தர்கள் ஆதார் அட்டை விவரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு தரிசன நாள், நேரம்குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதவிர, இணையதளத்தில் பதிவுசெய்யாமல் நேரில் வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனை பெற்றும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இணையதளத்தில் பதிவு செய்யும்போது ஆதார் அட்டை விவரத்தை கட்டாயம் அளிக்க வேண்டும். தரிசனத்துக்கு வரும்போது அடையாள அட்டையை நேரில் எடுத்து வர வேண்டும். ஆண்கள் சட்டை அல்லது குர்தா, வேட்டி, பேன்ட், பெண்கள் புடவை, பாவாடை தாவணி, சுடிதார் உள்ளிட்டவை அணிந்து வர வேண்டும். பதிவு செய்த நேரத்தைத் தாண்டி வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், 65 வயதுக்குமேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முன்பதிவு செய்யும்போதே பக்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024