சென்னையிலிருந்து சேலத்திற்கு எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்து; சாலை முழுவதும் எண்ணெய் கொட்டியதால் பரபரப்பு!!
2020-09-27@ 15:43:53
சேலம்: சென்னையிலிருந்து சேலத்திற்கு எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலை முழுவதும் எண்ணெய் பரவியதால் அவ்வழியே போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் உடையாப்பட்டி பகுதியில் லூப்ரிகென்ட் ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று மதியம் 2 மணியளவில் நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த லாரியிலிருந்து ஏராளமான எண்ணெய் வெளியேறி கொண்டிருக்கிறது.
தொடர்ந்து, போக்குவத்தும் இதனால் தடை செய்யப்பட்டுள்ளது. லாரி ஓட்டுனர் பாலாஜி மற்றும் க்ளீனர் நவீன்குமார் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்னையிலிருந்து லூப்ரிகென்ட் ஆயிலை ஏற்றிக்கொண்டு பவானி வரை வந்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் சேலம் உடையாப்பட்டி பகுதிக்குள் வந்துகொண்டிருக்கும்போது, ஓட்டுனர் பாலாஜி சற்று தூக்கத்தில் இருந்த காரணத்தினால் டேங்கர் லாரியானது நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் சாலை முழுவதும் ஆயில் கொட்டியது.
இதையடுத்து அவ்வழியே போக்குவரத்தானது தடை செய்யப்பட்டு அருகே உள்ள சாலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலையில் கொட்டிய எண்ணையை அகற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் லாரியிலிந்து ஆயிலானது வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இதனால் தற்போது 3 கிரேன்கள் கொண்டு லாரியை தூக்கி நிறுத்தும் பணியில் காவல் துறையும், தீயணைப்பு துறையும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே அப்பகுதி முழுவதும் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
No comments:
Post a Comment