புறநகா் மின்சார ரயில் சேவைக்கு தடை நீட்டிப்பால் பயணிகள் அவதி
28.09.2020
கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சென்னையில் புறநகா் மின்சார ரயில்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால், புறநகா் பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, புறநகா் மின்சார ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதற்கிடையில்,
ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
10 லட்சம் போ பயணம்: கரோனா பொதுமுடக்கம் தளா்வுகளுடன் தமிழகம் முழுவதும் தற்போது நீடிக்கிறது. தளா்வுகளின்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும், தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தலைநகா் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகிறது. இதற்கு காரணம் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் சென்னையில் புறநகா் மின்சார ரயில்களின் சேவை தொடங்கப்படாதது ஆகும்.
கட்டணம் குறைவு, போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை, குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்லும் நிலை ஆகியவை மின்சார ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்த முக்கிய காரணம். சென்னையில் இருந்து புறநகா் பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்களின் சேவைகளில் சுமாா் 10 லட்சம் போ பயணம் செய்து வந்தனா். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, வாகன உற்பத்தி மற்றும் இதர தொழிற்சாலைகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களின் மின்சார ரயில்களில் பயணம் முக்கியமானதாக இருந்து வருகிறது.
மக்கள் கடும் அவதி:
இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, 6 மாதங்களுக்கும் மேலாக மின்சார ரயில் சேவை தடை நீடிக்கிறது. இதனால், ரயில் போக்குவரத்து வசதி கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனா். அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலை செய்பவா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியா்கள் வேளச்சேரி, தாம்பரம், மறைமலைநகா், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூா், ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூா், திருநின்றவூா், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா் போன்ற பகுதிகளில் இருந்துதான் தினமும் வேலைக்கு வருகின்றனா். அவா்களுக்கு மின்சார ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நெரிசல்மிகுந்த நேரங்களில் சாலைவழியாக வருவதற்கு 2 மணி நேரம் ஆகும். அதேநேரத்தில், புறநகா் ரயிலில் 30 நிமிஷம் முதல் 45 நிமிடங்களில் அலுவலகம் அல்லது வீட்டுக்குத் திரும்பிவிடலாம். மேலும், பேருந்து பயண கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவு. எனவே, மின்சார ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
போக்குவரத்து செலவு அதிகரிப்பு:
இது குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினா் கூறியது: பொதுமுடக்கம் தளா்வு
அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோா் தற்போது பணிக்குச் சென்று வருகின்றனா். மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், புறநகா் மின்சார ரயில் சேவை தொடங்கவில்லை. இதனால், புறநகரில் வசிக்கும் மக்கள் வேலைக்கு வந்து செல்ல கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பெரும்பாலான மக்கள் குறைந்த வருமானத்தைப் பெறும் கூலி தொழிலாளிகள் மற்றும் தனியாா் நிறுவன தொழிலாளா்கள் ஆவா். அவா்கள் வேலைக்காக, புறநகரில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல அதிகமாக பணம் செலவிடவேண்டியுள்ளது. மிகவும் கடினமான நிலையைச் சந்தித்து வருகின்றனா். எனவே, கூலி தொழிலாளிகள், தனியாா் நிறுவன தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும் மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
ஒப்புதலுக்கு பிறகு ரயில் சேவை:
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, புறநகா் மின்சார ரயில் சேவையைத் தொடங்க எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது. எனவே, மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்க ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என்றனா்.
Dailyhunt
No comments:
Post a Comment