வங்கி மேலாளர் உட்பட மூவருக்கு சிறை: கடன் மோசடி வழக்கில் தீர்ப்பு
Added : செப் 24, 2020 00:04
கோவை:வங்கி கடன் மோசடி வழக்கில், மேலாளர் உட்பட மூவருக்கு, சிறை தண்டனை விதித்து, கோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, கவுண்டம்பாளையத்தில் ராகவ் பாலாஜி,44, ஜெய்சங்கர்,62, மீனாம்பிகை ஆகியோர் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தனர். காரமடை அருகே மத்தம்பாளையத்தில், இடம் வாங்கி மனைகளாக பிரித்து விற்றனர்.மனை வாங்கியவர்களில், பி.எஸ்.என்.எல்., மற்றும் சுகாதார துறையில் பணியாற்றுவோருக்கு, வீடு கட்டி கொடுப்பதாக கூறி, கவுண்டம்பாளையம், கனரா வங்கியில் கடன் கேட்டு, 2005ல் விண்ணப்பித்தனர்.அதன்படி, 26 பேர் பெயரில், வீடு கட்டுவதற்கு, 1.23 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. ஆனால், கடன் தொகை திருப்பி செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. வங்கி உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, வீடு கட்டாமல், போலியான சம்பள சான்றிதழ், ஆவணங்கள் சமர்ப்பித்து, கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும், வங்கி முதுநிலை மேலாளர் சஜீஷ்,54, உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர், நான்கு பேர் மீதும் கோவை சி.பி.ஐ., நீதிமன்றத்தில், 2009ல் வழக்கு தாக்கல் செய்தனர்.விசாரித்த நீதிபதி நாகராஜன், குற்றம் சாட்டப்பட்ட வங்கி மேலாளர் சஜீஷூக்கு, இரண்டு ஆண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம், ராகவ் பாலாஜி, ஜெய்சங்கருக்கு மூன்றாண்டு சிறை, தலா மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். மீனாம்பிகை விடுதலை செய்யப்பட்டார்
No comments:
Post a Comment