சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கப்படுமா?... தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
2020-09-27@ 14:34:21
தென்காசி: தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளின் நலன் கருதி சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. தென்காசி மாவட்ட மக்களின் வரவேற்பை பெற்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் 3 நாட்களும், சென்னை செல்லும் பயணிகளுக்கு உகந்ததாக இல்லை. தென்காசி மாவட்டத்தில் இருந்து பெரும்பாலும் அலுவல் காரணங்களுக்காகவே சென்னை செல்கின்றனர். சிலம்பு எக்ஸ்பிரஸ் வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே சென்னைக்கு செல்கிறது. வெள்ளிக்கிழமை மாலை தென்காசியில் இருந்து சென்னை செல்லும் பொழுது சனி, ஞாயிறு விடுமுறை நாளாவதால் எந்த அலுவலகத்திற்கும் செல்ல முடியாது. ஞாயிறு மாலை புறப்படும் ரயில் மட்டுமே அலுவல் காரணங்களுக்காக சென்னை செல்கின்றவர்கள் பயன்படுத்த முடியும்.
அதேபோல் சென்னையில் இருந்து திங்கட்கிழமை அலுவல் பணிகளை முடித்த ஒருவர் தென்காசி திரும்புவதற்கு ரயில் எதுவுமில்லை. இதனால் ரயில் பயணத்தை விரும்புவோர், 4 நாட்கள் சென்னையில் தங்கிவிட்டு வியாழக்கிழமை இரவுதான் சென்னையிலிருந்து தென்காசிக்கு புறப்பட முடியும். பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்படாத நிலையில் சிலம்பு எக்ஸ்பிரஸை வாரத்தில் மூன்று நாட்கள் என்பதற்கு பதிலாக தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பதே தென்காசி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment