சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கு அனுமதி!
Updated : டிச 08, 2020 23:13 | Added : டிச 08, 2020 22:59 |
சென்னை: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட, இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை, மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் தொடரலாம் என, பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
சென்னை - சேலம் இடையே, 277 கி.மீ., துாரத்துக்கு, எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை, 1௦ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு, நிலங்கள் கையகப்படுத்த, மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
மக்கள் நலன்
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, காங்., வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம், பா.ம.க., - எம்.பி., அன்புமணி, வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தேசிய நெடுஞ்சாலையாக கட்டமைக்க, பராமரிக்க, நிர்வகிக்க, காலியிடங்களை கையகப்படுத்த, மத்திய அரசுக்கு போதிய அதிகாரங்கள் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக, நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன், சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என்ற, மத்திய அரசு வழக்கறிஞரின் வாதங்களை, நாங்கள் ஏற்கவில்லை. பொருளாதார நலனை விட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளது. விவசாயத்தை பாதுகாப்பதும், மக்கள் நலன் தான் என்பதை, மறந்து விடக்கூடாது. எனவே, சுற்றுச்சூழல் ஒப்புதல் இன்றி, திட்டத்தை அமல்படுத்த அனுமதிப்பது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்.இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு இன்னும் கருதினால், தேவையான நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
கருத்து கேட்பு
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விரிவான ஆய்வை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் ஒப்புதல் கோருவதற்கு முன், பொது மக்கள் கருத்து கேட்பும் அவசியம்.எனவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. தனியார் நிலங்களை, அரசு நிலங்களாக, வருவாய் ஆவணங்களில் குறிப்பிட்டிருந்ததை மாற்றி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதை, நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மேல்முறையீடு செய்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள், அன்புமணி தரப்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, 140 பக்கங்கள் அடங்கிய உத்தரவை பிறப்பித்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சம்:
தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, நிலங்கள் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை பிறப்பிக்கும் வரை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதலை, மத்திய அரசோ, தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ பெற தேவையில்லை.தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலை அமைக்கும் பணிகளை துவங்குவதற்கு முன்னே, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கும் வரை அல்லது ஒப்படைத்த பின்னே, இது நடக்கும்.
எனவே, நிலத்தை மத்திய அரசு ஒப்படைத்த பின்னே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை துவக்க முடியும். அவ்வாறு நிலம் ஒப்படைக்கப்பட்ட பின், சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உரிய அனுமதி பெறுவதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விண்ணப்பிக்க முடியும்.
அதனால், நெடுஞ்சாலை அமைப்பதற்கான இடத்தை கண்டறியும் வரை, சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதி கேட்டு, விண்ணப்பிக்க வேண்டும் என்ற, கேள்வி எழாது.
சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டப்படி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி செல்லுமா, சரிதானா என்பது பற்றி, நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஏனென்றால், இதுகுறித்த பிரச்னையை, உயர் நீதிமன்றத்தில் வைக்கவில்லை. அதனால், உரிய நீதிமன்றத்தில், இதுகுறித்து கேள்வி எழுப்புவது, பாதிக்கப்படுபவர்களை பொறுத்தது.
எனவே, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்டப்படி, மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளலாம்.
அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டதால் மட்டுமே, அரசு வசம் நிலங்கள் வந்து விடாது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடியும் வரை, நிலங்களை அரசு வசம் எடுக்கும் வரை, வருவாய் துறை ஆவணங்களில் மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்ற, உயர் நீதிமன்ற உத்தரவில், நாங்கள் உடன்படுகிறோம். இதில், குறுக்கிட தேவையில்லை. நில உரிமையாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
போராட்டம் தொடரும்!
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக, போராட்டத்தை தொடர, விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை மறுவரையறை செய்து செயல்படுத்த, நேற்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பு, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், ராமலிங்கபுரத்தில், எட்டு வழிச்சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகள், நேற்று மதியம், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.பின், விவசாயிகள் கூறியதாவது:தீர்ப்பு தற்காலிகமாக மகிழ்ச்சியை அளித்தாலும், மறைமுக ஆதரவு அளித்தது போன்றே உள்ளது.
ஏற்கனவே, சேலம் - சென்னை இடையே, பல்வேறு சாலைகள் உள்ள நிலையில், இந்த திட்டம் தேவையில்லாதது.மத்திய, மாநில அரசுகள், இந்த திட்டத்தை, ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது. விவசாயிகளின் நலன் கருதி, நீதிமன்றமும் இதில் தலையிட்டு, விவசாயிகள் நலனை காக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு எதிராக, தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.