திருப்பதி லட்டு பிரசாதம் 'டோர் டெலிவரி'யா?
Updated : டிச 09, 2020 04:49 | Added : டிச 09, 2020 04:46
திருப்பதி: ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை உலகம் முழுதும், 'டோர் டெலிவரி' செய்வதாக, சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியாகும் போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
திருப்பதி, திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்திற்கு என தனி சிறப்பு உள்ளது. திருமலையில் கோவிலுக்குள் தயாரிக்கப்படும் பிரசாதத்திற்கு மதிப்பும் உள்ளது. அதனால், ஏழுமலையான் தரிசனத்திற்கு அடுத்தபடியாக, அனைவரும் வாங்கி உண்டு, மற்றவர்களுக்கும் வழங்குவது லட்டு பிரசாதம்.தற்போது, திருமலையில் இந்த லட்டு பிரசாதத்தை, பக்தர்கள் தேவையான அளவில் வாங்கி கொள்ளும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது
.இந்நிலையில், இந்த லட்டு பிரசாதத்தை உலகத்தின் உள்ள மூலை முடுக்குகளுக்கும் டோர் டெலிவரி செய்வதாக, www.balaji prasadam.com என்ற போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனால், அந்த இணையதளத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
தேவஸ்தானத்தின் தொழில்நுட்பத்துறை வாயிலாக, இந்த இணையதளத்தை முடக்க வேண்டும் என்றும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். பக்தர்கள் இதுபோன்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அவர், வலியுறுத்தி உள்ளார்.
......................................................................................................................................................................
பொருட்கள் வாங்காத கார்டுகளை அரிசி கார்டாக மாற்ற வலியுறுத்தல்
Added : டிச 08, 2020 23:29
சென்னை:எந்த பொருளும் வாங்காதோர், தங்கள் ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டாக மாற்றித்தரும்படி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், முன்னுரிமை, முன்னுரிமை அந்தியோதயா, முன்னுரிமையற்ற அரிசி, முன்னுரிமையற்ற சர்க்கரை, எந்த பொருளும் வாங்காதது என்ற பிரிவுகளில், ரேஷன் கார்டு வழங்கப்படுகின்றன. அவை, விண்ணப்பதாரரின், விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது.எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர், ரேஷன் கார்டை முகவரி சான்றாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், இலவச அரிசி பெறும் வகையில், அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதற்காக, சர்க்கரை கார்டுதாரர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எந்த பொருளும் வாங்காத, 50 ஆயிரம் கார்டுதாரர்களும், தங்களின் கார்டை, அரிசி கார்டாக மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்கள் கூறியதாவது:நல்ல வருவாய் ஈட்டும் நிலையில் இருந்து, எந்த பொருளும் வாங்காத கார்டை வாங்கினோம். ஓய்வு பெற்றதால் வருவாய் குறைந்து, ஏழைகளாகி விட்டோம். எனவே, சர்க்கரை கார்டுதாரர்களை போல, எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்களையும், அரிசி அல்லது சர்க்கரை கார்டாக வகை மாற்றம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
......................................................................................................................................................................
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுக்கு 11ல் மருத்துவ கவுன்சிலிங்
Added : டிச 09, 2020 00:03
சென்னை:பட்டியல் இனத்தவர்கள்; பழங்குடிஇனத்தவருக்கான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை, வரும், 11ம் தேதி துவங்குகிறது.
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. நேற்றைய கவுன்சிலிங்கில், பொது பிரிவில், 594 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், 502 பேர் பங்கேற்று, அரசு கல்லுாரிகளில், 46 எம்.பி.பி.எஸ்., - 19 பி.டி.எஸ்., இடங்களை பெற்றனர். சுயநிதி கல்லுாரிகளில், 116 எம்.பி.பி.எஸ்., - 17 பி.டி.எஸ்., இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். மொத்தம், 198 இடங்கள் நிரம்பின.
தற்போது, அரசு கல்லுாரிகளில், 367 எம்.பி.பி.எஸ்., - 78 பி.டி.எஸ்., இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், 314 எம்.பி.பி.எஸ்., - 949 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், நாளை முடிய உள்ளது.இதைத் தொடர்ந்து, பட்டியலினத்தவர்கள், அருந்ததியினர், பழங்குடியினருக்கு, 11, 12, 14ம் தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment