ரேஷனில் ரூ.2,500 வாங்க இன்று முதல் 'டோக்கன்'
Added : டிச 25, 2020 23:01
சென்னை:ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கும் பணி, இன்று துவங்குகிறது.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துஉள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ரேஷன் கடைகளுக்கு, கார்டுதாரர்கள் ஒரே சமயத்தில் கூட்டமாக வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொங்கல் பரிசு வாங்க, எந்த தேதி, நேரத்திற்கு, கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர்களின் வீடுகளில், ரேஷன் ஊழியர்கள், இன்று முதல் வழங்க உள்ளனர். வரும், 30ம் தேதி வரை, டோக்கன் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு, ஜன., 4 முதல், 13ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள பொருட்கள் கொள்முதல், அவற்றை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க, 14 கூடுதல் பதிவாளர்களை, கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment