ரஜினி முடிவால் யாருக்கு லாபம்? கட்சிகள் போடும் புது கணக்கு!
Added : டிச 29, 2020 23:42
ரஜினி, தன் உடல் நலம் கருதி, கட்சி துவக்கப் போவதில்லை என, அறிவித்தார். அவரது முடிவால், யாருக்கு லாபம், நஷ்டம் என, அரசியல் கட்சிகள் கணக்கு போடத் துவங்கி உள்ளன
.ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், ஆறாவது முறை ஆட்சி அமைப்பது கடினம் என, தி.மு.க., அச்சப்பட்டுக் கொண்டிருந்தது. ரஜினியின் மன மாற்றம், அக்கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ரஜினியை நோக்கி செல்ல இருந்த பெண்கள் ஓட்டுகள், ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுக்கள், இனி தங்களுக்கு கிடைக்கும் என, தி.மு.க., கருதுகிறது. இதனால், ஆட்சிக்கு வருவது சுலபம் என கருதுகிற தி.மு.க.,வுக்கு இது லாபம்.
இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறுகையில், ''ரஜினி, கட்சி ஆரம்பிப்பது, ஆரம்பிக்காதது, அவரது உரிமை. அவருக்கு உடல்நிலை முக்கியம்,'' என்றார். அ.தி.மு.க.,வில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், ரஜினி கட்சி துவக்கினால், அங்கு, ஓட்டம் பிடிப்பர் என்ற பயம், அ.தி.மு.க., மேலிடத்திற்கு இருந்தது. எம்.ஜி.ஆர்., பக்தர்களான, முன்னாள் மேயர், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் சிலர், ரஜினி அபிமானியாக இருந்ததால், ரஜினி கட்சிக்கு சென்று விடுவர் என்ற நிலையும் இருந்தது. இனி, அதற்கு வாய்ப்பு இல்லை.
வரும் சட்டசபை தேர்தல் வாயிலாக, முதல்வர் இ.பி.எஸ்., தன்னை தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள, ரஜினியின் அறிவிப்பு, பெரிய அளவில் உதவ இருப்பதால், அ.தி.மு.க.,வுக்கு லாபமாகவே கருதுப்படுகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா கூறுகையில், ''இப்போது, ஆட்சி மாற்றம் இல்லை என்பதை, ரஜினி ஒப்புக் கொண்டதால், கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டு உள்ளார்,'' என்றார்.
ரஜினி கட்சி துவங்கி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காமல் போனால், பா.ஜ.,வுக்கு கிடைக்க வேண்டிய தேசிய சிந்தனை உள்ளோரின் ஓட்டுக்கள், ஆன்மிக அரசியலை விரும்புவோரின் ஓட்டுக்கள் சிதறி, ஓட்டு வங்கியை இழக்கும் நிலை ஏற்படலாம் என, தமிழக பா.ஜ., தரப்பிலும் கணக்கு போடப்பட்டது. அதற்கு, இப்போது வேலை இல்லாமல் போய் விட்டது.அ.தி.மு.க., கூட்டணியில் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்க வைத்துள்ளதால், பா.ஜ.,வுக்கும் இது ஓரளவுக்கு சாதகமே.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''நடிகர் ரஜினி, ஆன்மிக அரசியலை ஆதரித்ததால், அதற்கு வலு சேர்த்தது. அதேநேரத்தில், அவர் கட்சி ஆரம்பிக்காத காரணத்தினால், ஆன்மிக அரசியல் தோற்றுவிடும் என்று எதிர்பார்ப்பது, அறிவுடைமை அல்ல,'' என்றார்.
ரஜினி கட்சி துவக்கியிருந்தால், இளைஞர்கள் ஓட்டுக்கள், நாம் தமிழர் கட்சிக்கு செல்லாமல், ரஜினிக்கு பெரும்பான்மையாக கிடைக்கவிருந்தது, தற்போது தடுக்கப்பட்டுள்ளது. அதனால், அக்கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளது. அதுபற்றி, அக்கட்சி தலைவர் சீமான் அளித்த பேட்டியில், ''இந்திய திரையுலகின் சிறந்த கலைஞர் ரஜினி, தன் உடல்நலன் கருதி எடுத்துள்ள முடிவை, முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல் நலம் பெற்று, கலையுலகப் பயணத்தை தொடர வாழ்த்துகள்,'' என கூறியுள்ளார்.
களத்தில் ரஜினியுடன் கூட்டு சேரலாம்; ஆட்சி கட்டிலை பிடிக்கலாம் என எதிர்பார்த்திருந்த, நடிகர் கமலுக்கு, ரஜினியின் முடிவால் நஷ்டமே அதிகம். அதனால் தான், ''ரஜினியின் முடிவு, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததுபோல், எனக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது,'' என கூறியிருக்கிறார். மேலும், பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளால், கூட்டணியில் பேரம் பேச முடியாத சூழலை, ரஜினி முடிவு ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., கொடுக்கிற தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிளுக்கு நஷ்டம் தான்.
தி.மு.க., கடைசி நேரத்தில் கழற்றி விடுமானால், ரஜினி பக்கம் போகும் வாய்ப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருந்தது. அந்த வழி மூடப்பட்டு விட்டதால், தி.மு.க.,வே கதி என்ற நிலைமை, வி.சி.,க்கு வந்துள்ளது. அதனால், ரஜினி முடிவை வரவேற்றுள்ளார், திருமாவளவன்.
அவர் கூறுகையில், ''ரஜினி முடிவை வரவேற்கிறேன். அவரது உடல் நலம் மிகவும் முக்கியம். தன் ரசிகர்களையும், உடன் பயணிப்பவர்களையும், ஏமாற்ற விரும்பவில்லை என்று, வெளிப்படையாக பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. வறட்டு கவுரவம் பார்க்காமல், துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்,'' என பாராட்டியுள்ளார்.
ரஜினியின் முடிவு, அ.ம.மு.க.,வுக்கும் நஷ்டத்தை உருவாக்கி உள்ளது. அதாவது, ரஜினி கட்சியால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அது தினகரனுக்கு லாபமாக இருக்கும் என, அ.ம.மு.க.,வினர் எதிர்பார்த்தனர்.
அழகிரி முடிவு மாறுமா?
வரும், 3ம் தேதி, மதுரையில், தன் ஆதரவாளர்களை அழைத்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆலோசனை நடத்துகிறார். ரஜினி முடிவு, அழகிரியை தனிக் கட்சி துவங்க வைக்குமா அல்லது பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வைக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.ரஜினி அறிக்கையின் கடைசி பத்தியில், 'தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தன்னால், தமிழக மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ, அதை தொடர்ந்து செய்வேன்' என, குறிப்பிட்டு உள்ளார். இதனால், தேர்தல் நேரத்தில், ரஜினி, 'வாய்ஸ்' கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நல்லவர்களைஆதரிக்க வேண்டும்!
'மக்கள் நலம் கருதி நல்லவர்களுக்கு, நடிகர் ரஜினி ஆதரவு கொடுக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ரஜினி, நல்ல உடல் நலத்துடன் நீடுழி வாழ வேண்டும். அவர், அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக, அதிகார்பூர்வமாக, அறிவித்திருந்தார். அதற்கு தமிழகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. தன் உடல் நலத்தை காரணம் காட்டி கட்சி துவக்கவில்லை. உடல் நலத்தில் அக்கறை எடுத்திருப்பது ஏற்புடையது.
அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இருக்கிறது. பத்து ஆண்டு காலமாக, அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ரஜினி போன்றவர்கள், மக்கள் நலம் கருதி, நல்லவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment