தமிழ்நாடு
'பாஸ்டேக் ஸ்டிக்கர்' தர அதிக கட்டணம் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தி
Added : டிச 26, 2020 22:38
சென்னை:'பாஸ்டேக் ஸ்டிக்கர்'கள் வழங்க, வங்கிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
ரொக்க பரிவர்த்தனை
இதற்கு தீர்வு காணும் வகையில், மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறையை, 2019 டிசம்பர் முதல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமல்படுத்தி வருகிறது.இந்நிலையில், ஜனவரி, 1 முதல், பாஸ்டேக் முறையில் மட்டுமே, கட்டணம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 60 சதவீத வாகன உரிமையாளர்கள், பாஸ்டேக் இல்லாமல், ரொக்க பரிவர்த்தனை வாயிலாகவே, சுங்க கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.மத்திய அரசின் உத்தரவை அடுத்து, பாஸ்டேக் ஸ்டிக்கர்களை வாங்க, வாகன உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்களை, தேசிய மற்றும் தனியார் வங்கிகள், பண வங்கிகள், தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை வழங்கி வருகின்றன.
பாஸ்டேக் ஸ்டிக்கர்களை வழங்க, ஒவ்வொரு வாகனத்திற்கும் குறைந்தபட்சம், 500 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.இதில், கணக்கு துவங்கும் கட்டணமாக, 300 ரூபாய் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள, 200 ரூபாய் மட்டுமே, பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்த ஒதுக்கப்படுகிறது.ஏற்கனவே, வங்கியில் கணக்கு வைத்துள்ளோரிடம், இதுபோன்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகளில், 1,000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.
ஆர்வம்
தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மோசமாக இருப்பதால், சுங்க கட்டணம் செலுத்துவதே பெரும் சுமையாக பலரும் கருதுகின்றனர். இதில், சுங்க கட்டணத்திற்கு மட்டுமின்றி, கணக்கு துவங்கவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பலரும் பாஸ்டேக் ஸ்டிக்கர் பெற ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இதனால், ஜன., 1 முதல்,பாஸ்டேக் முறையில், 100 சதவீத கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலாகும் போது, சுங்கச் சாவடிகளில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்க, குறைந்தபட்ச கட்டணத்தை வசூலிக்கும்படி, வங்கிகளுக்கும், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும். வாகன உரிமையாளர்கள்அறிந்து கொள்ளும்வகையில், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டியதும் அவசியம்.
No comments:
Post a Comment